கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (24). தினக் கூலி வேலை செய்து வந்த தொழிலாளி ஆவார். அவருக்கு குடிபழக்கம் மற்றும் கஞ்சா போதை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாக்டெளன் முடிந்து டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறந்தன. இதையடுத்து ஐயப்பன் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கியுள்ளார். பின்னர் பறக்கை பகுதியில் உள்ள ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து சாகவாசமாக மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பறக்கை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோர் மது போதையில் குளக்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் போதையில் ஐயப்பனிடம் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. ஸ்டாலினும், சுரேஷும் கெட்டவார்த்தையால் ஐயப்பனை திட்டியதுடன், அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

டாஸ்மாக் திறந்த முதல்நாள் குடிமகன்கள் தகராற்றால் கொலை நடந்த இடம்

இதையடுத்து ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ்(24) என்பவரை அழைத்துச் சென்று ஸ்டாலின் மற்றும் சுரேஷிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பனையும், சந்தோஷையும் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சந்தோஷ் படுகாயங்களுடன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். கத்தியால் குத்திய ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்த சுரேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சுசீந்திரம் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைம்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்திக்குத்து காரணமாக இறந்த ஐயப்பனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை குறித்து போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்பன் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கத்தியால் குத்திய ஸ்டாலின் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவான ஸ்டாலின் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை லாக்டெளனுக்கு பிறகு டாஸ்மாக் திறந்த முதல் நாளிலேயே குடிபோதையில் எற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.