புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளித்திருப்பதுடன், ஜூன் 21-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்திருக்கிறது அரசு. புதுவை அரசுச் செயலர் அசோக்குமார் வெளியிட்டிருக்கும் அந்த உத்தரவில், “புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக புதுச்சேரி – தமிழக எல்லைப் பகுதி வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

அதன்படி, புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து அரசு துறை ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை குளிர்சாதன வசதியின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். உணவகங்கள், சுற்றுலா வகை உரிமம் கொண்ட அமர்ந்து மது அருந்த கூடிய மதுக்கடைகளில் மாலை 5 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் மற்றும் பழச்சாறு கடைகள் மாலை 5 மணி வரை இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் அவசர நோக்கங்களான திருமணம், முக்கிய உறவினர் மரணம், நேர்காணல், தேர்வு ஆகியவற்றுக்கு எல்லா நாட்களிலும் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படும். அச்சமயம், உரிய ஆதாரங்களை எடுத்து செல்ல வேண்டும்.

ஊரடங்கு

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இயங்கலாம். கடற்கரை சாலை காலை 5 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 25 பேர், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், கட்டுமானப்பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க அனுமதி அளிக்கப்படும்.

அனைத்து விவசாய பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். பெட்ரோல் நிலையம், ஏடிஎம்கள், தொலைத்தொடர்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் விநியோகம், துப்புரவு, மின் விநியோகம், குளிர்சாதன பொருட்கள் பாதுகாப்பகம், தனியார் செக்யூரிட்டி சேவை, நகராட்சி, தீயணைப்பு, நீதிமன்றம் ஆகியவை செயல்படலாம். அனைத்து மின்னணு வணிக நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும்.

Also Read: `31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை!’- புதுச்சேரி கொரோனா அப்டேட்

அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையென்றால் அவர்களது கடைகள் மூடப்படும். மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். சரியான காரணமின்றியும், அடையாள அட்டை இல்லாமலும் ஊரடங்கை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.