தமிழகத்தில் 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் கலெக்டராக இருந்த கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு வீட்டு வசதி வாரிய துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது செயலால் குறைந்த காலத்திலேயே அனைவரது மனதில் இடம்பிடித்து விட்டதால் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் மாற்றம் குறித்து தஞ்சை மக்கள் உருக்கமாகப் பேசிவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ்

கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது குடும்பதினர் பெரும் அச்சம் சூழ்ந்து கலங்கி நின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்த ராவின் செல் நம்பர் அவர்களுக்கு கிடைக்கிறது. தயக்கத்துடனே பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் போன் செய்ய, `சொல்லுங்க நான் கலெக்டர் பேசுறேன்’ என எதிர் முனையில் பேச கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் குறித்து அந்த நபர் கூறியிருக்கிறார்.

பொறுமையாகக் கேட்டவர், `கவலைப்படாதீங்க உடன் இருப்பவரின் செல் நம்பரை எனக்கு அனுப்புங்க’ என சொல்லிட்டு தொடர்பைத் துண்டித்திருக்கிறார். அடுத்த ஐந்துவாது நிமிடத்தில் மருத்துவ அதிகாரியிடமிருந்து போன் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு போன் வந்துள்ளது. “கலெக்டர் பேச சொன்னாங்க பயப்படாதீங்க” என ஆறுதல் சொல்லிட்டு உரிய சிகிச்சையினைத் தொடர்ந்தனர். இப்போது அந்த நபர் நலமுடன் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அளவில்லா மகிழ்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மீண்டும் கலெக்டருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு பணியில்

இப்படி யாராக இருந்தாலும் சரி என்ன வேலையில் இருந்தாலும் சரி அவர்கள் சொல்வதை நிதானமாக கேட்டு அவர்களுக்கான தேவையை செய்து கொடுத்துவிடுவார். விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை போன் மூலம் தெரிவித்தாலே போதும் அதனை நிறைவேற்றி தந்து விடுவார் என அனைத்து தரப்பினரும் தஞ்சாவூர் கலெக்டராக இருந்த கோவிந்தராவை பற்றி உருக்கமாக பேசி வருகின்றனர்.

திடீரென கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் வேறு பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாதவர்கள் அவர் குறித்து சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், `இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கோரிக்கையாகக் கொண்டு சென்றும் வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதி பெற்ற கலெக்டர் கோவிந்தராவ்

இது குறித்து சிலரிடம் பேசினோம், “தஞ்சாவூர் கலெக்டராக கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதுமே உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அதனை முறையாகக் கையாண்டார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு பணியில் கவனம் செலுத்தினார். எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தது. துல்லியமான தனது ஏற்பாட்டால் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நடத்தினார்.

2020-ம் ஆண்டு நிரவி புயல், 2021-ம் ஆண்டு ஜனவரியில் பெய்த வரலாறு காணாத பெருமழையில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களின் துயரில் பங்கெடுத்து உரிய நிவாரணத்தையும் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக ஜனவரியில் பெய்த மழையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து பெரும் பொருளாதார இழப்பை உண்டாக்கும் நிலை ஏற்பட்டது.

உதவி தொகை வழங்கும் கலெக்டர் கோவிந்தராவ்

அப்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதன் முறையாக நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தை வரழவைத்து நெல்லை உலர்த்தி கொள்முதல் நிலையங்களுக்கு கொடுக்க வைத்து இழப்பிலிருந்து காத்தார்.

கொரோனா முதல் அலையின் போது கொரோனா வார்டுக்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் கொடுத்து நம்பிக்கையூட்டினார். இரண்டாவது அலை தமிழகத்திலேயே தஞ்சாவூரில் தான் முதலில் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாம்கள் அமைத்து டெஸ்ட் எடுத்து பரவலை கட்டுப்படுத்தினார். வல்லம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதனை சுற்றி தகர ஷீட்டில் அடைக்கப்பட்டது. முதல் அலை முடிந்ததுமே அந்த ஒப்பந்தக்காரர் அதை பிரிக்க செல்ல அவை கோவிந்தராவின் கனவத்துக்கு சென்றது.

உடனே, `இப்போது பிரிக்க வேண்டாம்’ என அதை தடுத்து சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்டதால் இரண்டாவது அலை தொடங்கிய போது உடனே சிகிச்சையினை தொடங்க பெரும் உதவியாக இருந்தது. சிகிச்சை மையத்தில் கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடத்த செய்து பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கினார். வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருப்பவர்களை அடிக்கடி சந்தித்து என்ன தேவை என கேட்டு அதை செய்து கொடுத்து விட்டு தைரியமாக இருக்க சொல்லிட்டு வருவதையும் தொடர்ந்தார். கலெக்டர் அலுவலக அறையை விட அரசு மருத்துவமனையிலேயே அவரை அதிகம் பார்க்க முடியும்.

கொரோனா பணியில்

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சில தினங்களிலேயே 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பல்வேறு நடவடிக்கையினை எடுத்த போதும் தஞ்சாவூரில் இன்னும் கொரோனா குறையவில்லை. தடுப்பு பணியில் சுணக்கம் காட்டியிருந்தால் நிலை அபாயகட்டத்தை எட்டியிருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆளும்கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவாக செயல்பட்டார்.

மாவட்டத்தில் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றினார். நெற்களஞ்சியம் என பெயரெடுத்த தஞ்சையில் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து அதனை தீர்ப்பதில் அக்கறை காட்டினார். அவருடைய சிறப்பு மிக்க செயல்களை சொல்லி கொண்டே போகலாம். தஞ்சையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வைத்திருப்பதாக கூறி வந்தார் இன்னும் சில ஆண்டுகள் தஞ்சாவூரிலேயே கலெக்டராக பணி புரிவார் என எண்ணியிருந்தோம். ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டு விட்டார். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் அவரை பாராட்ட தவறியதில்லை. கலெக்டர் கோவிந்தராவின் பணி மாற்றத்தினை மனம் ஏற்க மறுத்தாலும் தஞ்சாவூருக்கு மட்டும் கிடைத்த அவரின் அன்பு, ஆதரவு, தலைச்சிறந்த சேவை தமிழகம் முழுமையும் கிடைக்க போகிறது என எங்களை தேற்றி கொள்கிறோம்” என தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.