மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ‘பிரேமம்’ படத்தின் தாக்கம் தொடர்பான ரசிகரின் கேள்விக்கு அளித்துள்ள பதில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘ஆட்டோகிராஃப்’ படத்தை அவர் உள்வாங்கிய விதமும், இயக்குநர் சேரன் குறித்த அவரது பார்வையும் ரசிகர்களை கவனிக்கவைத்திருக்கிறது.

நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நேரம்’. இந்தத் திரைப்படத்தை மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார். இவரது இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தில் நிவின் பவுலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்தப் படம் வெளிவந்தபோதே சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் சாயல் இருப்பதாக சொல்லப்பட்டது. இப்போது அல்போன்ஸ் புத்திரன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ரசிகர், இது தொடர்பாக, ” ‘பிரேமம்’ கதையை எழுதும்போது ‘ஆட்டோகிராஃப்’ தாக்கம் இருந்ததா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு அல்போன்ஸ் புத்திரன் பதில் கொடுத்துள்ளார். சமீப காலமாக, ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வரும் அவர், இந்தக் கேள்விக்கு அளித்த பதிலில், “‘ஆட்டோகிராஃப்’ படம் வெளியான சமயத்தில் அதனை பல முறை பார்த்துள்ளேன். அது பல வருடங்களுக்கு முன்பு. அந்தப் படம் பார்த்தபோது சேரன் என்ற இயக்குநரால்தான் நான் ஊக்கப்படுத்தப்பட்டேன்.

ஆனால் ‘பிரேமம்’ எடுக்கும்போது ஆட்டோகிராஃபை போல இருக்கக் கூடாது என்று நினைத்து எடுத்தேன். காரணம், ‘ஆட்டோகிராஃப்’ அழகான படம். அந்த அழகான படம் தொடர்பாக எதையும் நான் தொட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஆட்டோகிராஃப் போல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சேரன் அக்கறையுடன் எடுத்த சிரமம்தான் எனக்கான பாதிப்பே தவிர, அந்தப் படத்தின் தாக்கம் எனது படம் அல்ல” என்று கூறியுள்ளார்.

image

‘பிரேமம்’ படம் வெளியானபோதே இந்தப் பேச்சுக்கள் எழுந்தது. அப்போதே, ” ‘ஆட்டோகிராஃப்’ ஒருவரின் வாழ்க்கைக் கதை. ஆனால் ‘பிரேமம்’ படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல, காதலைப் பற்றி சொல்லும் கதை” என்று விளக்கம் கொடுத்திருந்தார். பின்னாளில், இயக்குநர் சேரனும் அல்போன்ஸ் புத்திரனிடம் படம் தொடர்பாக பேசி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ‘பிரேமம்’ படத்துக்கு பிறகு பல வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த வந்த அல்போன்ஸ், சில மாதங்கள் முன்புதான் புதிய படம் ஒன்றை அறிவித்தார். இதில் ஹீரோவாக ஃபஹத் பாசிலும், ஹீரோயினாக நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ‘பாட்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படமானது கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.