சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் முதன் முறையாக தோல்வியை சந்திக்கிறது இந்திய அணி. அதுவும் தொடரின் முதல் போட்டியிலேயே படுதோல்வி. அடுத்த போட்டியை வென்றால்தான் தொடரில் கொஞ்சமேனும் உயிர் இருக்கும் என்ற நிலை. ஆனால் பெங்களுருவில் தொடங்கிய இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே தொடர்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் எட்டு பேரை நாதன் லயோன் தனி ஒருவராக சாய்க்க, இந்தியாவை வெறும் 189 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து முதல் இன்னிங்ஸில் 276 ரன்களை குவிக்கிறது ஆஸ்திரேலிய அணி. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி 274 ரன்களை குவிக்கிறது இந்திய அணி.

தொடர் கையைவிட்டு போகாமல் இருக்க ஆஸ்திரேலியாவின் பலமான பேட்டிங் லைன் அப்பை 188 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நிலைமை. வார்னர், ஸ்மித், ஷான் மார்ஷ், மேத்யூ வேட் என வரிசை கட்டி நின்ற ஆஸ்திரேலியர்களின் சவாலை ஏற்று பந்துவீச வருகின்றனர் இந்திய பௌலர்கள். முதல் மூன்று விக்கெட்டுகள் வேகமாக போக மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் என்னும் அசுரன் தன் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொள்கிறார்.

INDvAUS 2016-17

அந்த ஒன்றை மனிதன் களத்தில் நின்றுவிட்டால் வெற்றியை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று இந்திய பௌலர்களுக்கும் நன்றாகவே தெரியும். அவரின் விக்கெட்டை எடுக்க ஓர் எண்டில் சுழற்பந்தும் மறு எண்டில் வேகப்பந்தையும் மாற்றி கொண்டிருக்கிறார் கேப்டன் கோலி.

இன்னிங்ஸின் 20-வது ஓவர், உமேஷ் யாதவின் கைகளுக்கு வருகிறது பந்து. நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்திற்கு உமேஷ் யாதவ் வீசிய மூன்றாவது பந்து திடீரென்று புல் லென்த்தில் பிட்சாகி சிறிதும் எம்பாமல் அவரின் ஷூக்களுக்கு சற்றே மேலே லெக் பேடுகளில் மோதுகிறது. மொத்த இந்திய அணியும் லெக் பிஃபோருக்கு கத்த தன் கையை உயர்த்துகிறார் நடுவர் நிகல் லாங். தனது விக்கெட்டை இந்திய அணியினர் ஆர்ப்பரித்து கொண்டாட தனக்கு ரிவ்யூ செய்ய சில சொற்ப நொடிகளே மீதமிருக்க யாரும் எதிர்பார்க்காத ஒன்றை செய்கிறார் ஸ்மித். தன் விக்கெட்டை பற்றி களத்தில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற விதியை மீறி பெவிலியனில் உள்ள தனது அணியினரிடம் சைகையால் கேட்கிறார் அவர்.

இச்செயலை கண்ட கேப்டன் கோலி மிகுந்த ஆவேசத்துடன் அவரை நோக்கி வேகமாக வாக்குவாதம் செய்வதற்குச் செல்கிறார். ஸ்மித்தின் விதிமீறலை நடுவரும் கவனிக்க மறுபுறம் அவரை நோக்கி வந்த கோலியை தடுக்க, மற்றொரு நடுவரும் அங்கு வர ஒட்டுமொத்த மைதானமும் பரபரப்பாகிவிடுகிறது. வேறு வழியில்லாமல் பெவிலியனை நோக்கி நடக்கத் தொடங்குகிறார் ஸ்மித்.

விராட் கோலியின் முகத்தில் அப்படியொரு ஆக்ரோஷம். அந்த நொடி, புதியதொரு பாய்ச்சலை பெறுகிறது இந்திய அணி. அணியின் ஸ்கோர் 74ஆக இருக்கும்போது ஸ்மித்தின் விக்கெட்டை இழக்கும் ஆஸ்திரேலியா மீதமிருந்த 6 விக்கெட்டுகளை அடுத்த 36 ரன்களில் இழந்து 112 ரன்களுக்கு இந்திய பௌலர்களிடம் சுருண்டது.

INDvAUS 2016-17

எம்.எஸ்.தோனி என்னும் கேப்டனின் கூல் அணுகுமுறையையே ரொம்ப வருடங்களாகப் பார்த்து சிலிர்த்த இந்திய ரசிகர்களுக்கு கங்குலியை ஆக்ரோஷதிற்கு கொஞ்சமும் குறைவில்லாத கோலியின் செயல்பாடுகள் அப்போது ரொம்பவும் புதிதாக இருந்தன. அதுதான் கோலியின் பலமும் கூட. டெஸ்ட் போட்டிகளில் தலைமை பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்களுக்கு மேலானாலும், இத்தொடரில் கோலியின் செயல்பாடுகள் அவரை அடுத்த படிக்கு நகர்த்திச் சென்றன.

Also Read: இறுதிச்சுற்று – 4: மாஸ் பேட்டிங்… 2011 வைட்வாஷுக்கு இந்தியா கொடுத்த பதிலடி! | INDvENG 2016 – 17

நான்கு போட்டிகள் அடங்கிய தொடரின் மூன்றில் ஆடிய கோலி ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. பேட்டிங்கில் சொதப்பி அணிக்கு தன்னால் பங்காற்ற முடியாததை இருமடங்கு தனது கேப்டன்சியில் செய்தார் அவர். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த அவர்களின் பாணியையே கையிலெடுத்த கோலி, அதை மொத்த அணியினருக்கு தொற்ற வைத்தது மிகுந்த பலனை அளித்தது. நான்காவது டெஸ்டில் காயம் காரணமாக ரஹானேவை வழிநடத்த சொன்ன கோலி, அப்போதும் சும்மா இருக்காமல் களத்தில் இருப்பவர்களுக்கு தண்ணீர் சுமந்து அணியை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

INDvAUS 2016-17

மூன்றாவது போட்டியில் புஜாரா அசத்தலான இன்னிங்ஸ் ஒன்றை ஆடி இரட்டை சதம் விளாச, அப்போட்டி டிரா ஆனது. தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டியில் கோலி இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி ரஹானேவின் கேப்டன்சியின் கீழ் முதல் வெற்றியை பெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

இந்திய ஆடுகளங்களில் தன் ஸ்பின்னர்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தொடர்ந்து வெற்றி நடைப் போட்ட கோலி தற்போது தன் பார்வையை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பக்கம் கொஞ்சம் திருப்பினார். காரணம் பவுன்சர்களின் பூமியான தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் சந்திக்க தயாரானது கோலியின் படை.

– களம் காண்போம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.