தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தை அடுத்த தும்மகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திர ரெட்டி (90) மற்றும் அனுசூயம்மா (80). இந்த தம்பதிக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருந்தனர். தனக்கு வயதாகி விட்டதால் ராமச்சந்திர ரெட்டி தன்னுடைய 40 ஏக்கர் நிலத்தை 2 மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு, தங்களை அவர்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ள மகன்கள் இருவருமே முன்வராததால் ஒரு மாதம் ஒரு மகன் வீட்டிலும் அடுத்த மாதம் மற்றொரு மகனின் வீட்டிலும் மாறி மாறி தங்கி வந்துள்ளனர். சமீபமாக, இளைய மகன் உயிரிழந்து விட்டதால் அவரது மனைவி அவர்களை பார்த்து வந்துள்ளார்.

ராமச்சந்திர ரெட்டி – அனுசூயம்மா

இந்நிலையில், வயதான பெற்றோரை பாரமாகக் கருதிய மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டியும் அவரது மனைவி லட்சுமியும் அவர்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி வெளியில் உள்ள கொட்டகை ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கொளுத்தும் வெயிலில் பிளாஸ்டிக் கொட்டகையில் தங்கவைக்கப்பட்ட தம்பதி வெப்பத்தில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து மகனிடமும், மருமகளிடமும் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர்களோ ‘பரவாயில்லை ஒன்றும் ஆகாது இங்கேயே இருங்கள்!’ என்று கண்டிப்புடன் சொல்லி விட்டு, சிறிதளவு உணவை மட்டும் வேண்டா வெறுப்பாக அளித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து விட்ட பெற்றோர் இனிமேலும் உயிரோடு இருப்பது தங்களுக்குத் தான் சுமை என்று எண்ணிய அவர்களது மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டி வயதான தம்பதியைப் பட்டினி போட்டே கொன்று விட மனைவியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார். அதனையடுத்து, அடுத்த சில தினங்களுக்கு அந்த வயதான தம்பதிக்கு உணவளிக்காமல், தண்ணீர் கூட குடிக்கக் கொடுக்காமல் பரிதவிக்க விட்டிருக்கின்றனர் இரக்கமற்ற மனித பிறவிகள். கத்தி உதவி கேட்கக் கூட முடியாத நிலையிலிருந்த நாகேஸ்வர ரெட்டியின் வயதான பெற்றோர் உணவில்லாமல் உடல்நிலை மோசமாகி காக்கை, குருவிகளாய் அந்த கொட்டகையிலேயே மே மாதம் 27-ம் தேதி சுருங்கி விழுந்து உயிரை விட்டிருக்கின்றனர்.

பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து நாகேஸ்வர ரெட்டி மற்றும் அவரது மனைவி ஊர்மக்களிடம் வயதான தம்பதி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்து விட்டதாகக் கூறி விட்டு, அவசர கதியில் இருவரது உடலையும் அடக்கம் செய்திருக்கின்றனர். தம்பதியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் முனகலா காவல்நிலையத்தில் தம்பதியின் மரணம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் முனகலா காவல்நிலைய ஆய்வாளர் அஞ்சநேயுலு தலைமையில் விசாரணையைத் துவக்கினார்கள். உயிரிழந்த தம்பதியின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் போலீஸார் விசாரிக்கையில், அவர்கள் பதற்றத்தில் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.

அதனால், சந்தேகமடைந்த போலீஸார் இருவரையும் தனித் தனியாகத் தீவிரமாக விசாரித்ததில் நாகேஸ்வர ரெட்டியின் மனைவி லட்சுமி பயத்தில் உண்மையைக் கூறிவிட்டார். இதற்கிடையில், அடக்கம் செய்யப்பட்ட கணவன் – மனைவியின் உடல்களைத் தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதில் அவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது.

வயதான கணவன் – மனைவியை உணவளிக்காமல் பட்டினி போட்டதில் இறந்து விட்டதாகத் நாகேஸ்வர ரெட்டியும் அவரது மனைவி லட்சுமியும் ஒப்புக்கொண்டனர். அதனையடுத்து, போலீஸார் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொந்த மகனே பெற்றோரைப் பட்டினி போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.