ஆறுகளில் மாநகர கழிவுகள், மருத்துவக்கழிவுகள், சாயக்கழிவுகள் கலப்பது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது தற்போது அபாயகரமான அளவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் ஏற்கனவே பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், மிகவும் மோசமான ஆபத்துகள் நேரிடும் என விவசாயிகள் எச்சரிக்கை செய்கிறார்கள். குறிப்பாக தஞ்சை வடவாற்றில், மாநகர கழிவுகள் அதிகளவில் கலந்துவிடப்படுவதால், இதன் கடைமடை வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டியுள்ள கரந்தை பகுதியில் வடவாற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

இதுகுறித்து பேசிய இவர், ’’வடவாறு தஞ்சாவூர் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு மூவர்கோட்டை வரை வடவாறு என்ற பெயரிலும், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு வடவாறு விரிவாக்க கால்வாயாகவும் சென்று முத்துப்பேட்டை அருகே திருமேனி ஆறு மூலம் கண்ணனாற்றில் கலக்கிறது.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி, மதுக்கூர்,கோட்டூர் ஒன்றியப் பகுதிகள் வழியாக சென்று 72,000 ஏக்கர் விளைநிலத்துக்கு பாசனம் அளிக்கிறது. இந்த ஆற்றில் தஞ்சாவூர் மாநகரின் கழிவுநீர் முழுவதும் கலக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய தண்ணீர், கடைமடைப் பகுதிக்கு வரும்போது மிகவும் மாசடைந்து துர்நாற்றத்துடன் வருகிறது.

ஆற்றில் கலக்கும் கழிவுகள்

இதனால், நிலத்தடி நீர், காற்று மாசடைந்து கடைமடை பகுதி மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகின்றனர். மேலும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது. இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பெரும்பாலான பாசன ஆறுகளில் ஆங்காங்கே உள்ள நகரங்களின் கழிவுநீரை ஆறுகளில் கலக்க செய்கிறார்கள். காவிரியில் சாயக்கழிவுகள், ஆலைகளில் வெளியேற்றப்படும் அமிலக் கழிவுகளும் கூட கலந்துவிடப்படுகிறது. ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வல்லுநர்களை கொண்ட ஆய்வுக்குழு அமைக்க வேண்டும்” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.