கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் அவரின் கர்ப்பிணி மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 9 நாள்களுக்கு முன்பு அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் கணவன், மனைவி இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு டிரைவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. குணமடைந்த அவர் தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்குச் சென்று அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார்.

கொரோனா

அப்போது அவரின் மனைவி, “கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் சரியான முறையில் எனக்கு சிகிச்சை அளிப்பதாகத் தெரியவில்லை, ஏதாவது கேட்டால் கோபப்படுகிறார்கள், மேலும் ஆஸ்பத்திரி சூழலை பார்க்கும்போது பயமாக உள்ளது” என தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கணவர், டாக்டரிடம் சென்று, “நாங்கள் ஊருக்குச் செல்கிறோம்” என்று கூறியுள்ளார். “இன்னும் சிகிச்சை முடியவில்லை, சிகிச்சை முடிந்த பிறகுதான் செல்ல முடியும்” என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கணவன், மனைவி இருவரும் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு தென்தாமரை குளத்திலுள்ள தங்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

கர்ப்பிணி கொரோனா சிகிச்சையிலிருந்து பாதியிலேயே வீடு திரும்பிய செய்தி மருத்துவ நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து  கலெக்டர் அலுவலகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கர்ப்பிணியை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்தாமரைகுளம் காவல் நிலைய போலீஸார், கிராம நிர்வாக அதிகாரி, ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆம்புலன்ஸில் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி வீட்டுக்குச் சென்றனர். சிகிச்சை முடியாமல் மருத்துவமனையிலிருந்து வரக்கூடாது என்றும், அதனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படலாம் எனவும் அறிவுரை கூறினர்.

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு

அதற்கு அந்த கர்ப்பிணி, “நாங்கள் வேறு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்” எனக்கூறி மருத்துவமனைக்குச் செல்வதற்கு மறுத்துவிட்டார். அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். கொரோனா வார்டில் இருந்து சிகிச்சை முடிவதற்கு முன்பே கர்ப்பிணி வெளியேறி, அவர் அதிகாரிகளால் மீண்டும் அழைத்துவரப்பட்டது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.