பொதுமக்களிடையே கொரோனா அறிகுறிகள் குறித்த அலட்சியமும், பரிசோதனை செய்து கொள்வது குறித்த அச்சமும் இருக்கிறது என கவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா தொற்றை பொறுத்தவரையில் எவ்வளவுக்கு எவ்வளவு சிகிச்சை விரைவாக ஆரம்பிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக நோயில் இருந்து மீளலாம் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
 
image
இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘’கொரோனா இரண்டாம் அலை உக்கிரமாக இருக்கும் இந்த காலத்தில் என்னை சந்திக்கும் மக்களில் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, பசியின்மை, அதீத உடல் சோர்வு என்று பலரும் அறிகுறிகள் ஆரம்பித்து முக்கியமான முதல் வாரத்தை பரிசோதனை செய்யாமல் நோய் என்னவென்று கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் கழிக்கிறார்கள். இது நிகழ்காலத்தில் கள யதார்த்தமாக இருக்கிறது.
 
இந்நேரத்தில் மெடிக்கல்களிலும் கிளினிக்குகளிலும் மாத்திரை மருந்து வாங்கி உண்கிறார்கள். பரிசோதனை செய்யச் சொன்னால் உடனே பதட்டமாகி விடுகிறார்கள் .’மாத்திரை போட்டு விட்டு பார்க்கிறேன், இதிலேயே சரியாகி விடும்’ என்கிறார்கள். பரிசோதனை செய்யுங்கள் என்றால் பயமாக இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.
 
இப்படியே முக்கியமான முதல் வாரத்தை கழிக்கிறார்கள். கொரோனாவைப் பொறுத்தவரை முதல் வாரத்தின் முன்பகுதியில் அறிகுறிகள் தோன்றும். பிறகு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளின் விளைவால் அறிகுறிகள் சரியாகிவிடும். ஆனால் மீண்டும் மூன்று நான்கு நாட்கள் கழித்து அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
 
முன்பை விட சற்று வலுமிக்கதாக இருக்கலாம். அதீத உடல் சோர்வைக் கொண்டு வரலாம். இப்போதாவது சுதாரிக்க வேண்டும். உடனடியாக பரிசோதனை செய்து வந்திருக்கும் நோய் இன்னதென அறிய வேண்டும்.
 
image
ஆனால் இப்போதும் பரிசோதனைக்கு முன்வராமல் கடைசியில் மூச்சுத்திணறல் அல்லது மூச்சிரைப்பு நிலையில் மருத்துவமனைகளுக்கு ஓடி வருகிறார்கள். இது மிகப்பெரும் தவறு. அறிகுறிகள் தோன்றினால் உடனே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யுங்கள். பாசிடிவ் வந்தால் உடனே சிகிச்சை ஆரம்பிக்கப்படும். நெகடிவ் வந்தால் தொடர்ந்து அறிகுறிகளைக் கவனியுங்கள். அறிகுறிகள் குணமாகாமல் காய்ச்சல், இருமல் போன்றவை அதிகமாகிக்கொண்டே இருந்தால் அறிகுறி ஆரம்பித்ததில் இருந்து ஆறாவது நாள் மருத்துவர் பரிந்துரையில் நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேன் எடுங்கள். அதில் வந்திருப்பது கொரோனாவா இல்லையா என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.
 
உடனே சிகிச்சை எடுங்கள். அலட்சியம் செய்யாதீர்கள். இதைக் களைந்தால் மட்டுமே பல மரணங்களையும் தொற்றுப்பரவலையும் தடுக்க முடியும். கொரோனா தொற்றை பொறுத்தவரையில் எவ்வளவுக்கு எவ்வளவு சிகிச்சை விரைவாக ஆரம்பிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக நோயில் இருந்து மீளலாம். கொரோனா நோயை விட அலட்சியம் தான் அதிகம் உயிரை எடுக்கிறது.
மருத்துவமனையில் பரிசோதனை இலவசம், சிகிச்சை இலவசம், ஆக்சிஜன் இலவசம், தடுப்பூசியும் இலவசம். ஆனால் அலட்சியம் விலைமிக்கது. அலட்சியத்துக்கு விலை உயிர் மட்டுமே. அதனால் அலட்சியம் செய்யாதீர்கள்’’ என்கிறார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.