‛ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ ஹாலிவுட் படம் பார்த்தவர்கள், நடிகர் பால்வாக்கரையும் மறந்திருக்க முடியாது. அதில் ‛வ்வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறந்த ஒவ்வொரு கார்களும் மிரட்டல் அனுபவம் தந்திருக்கும். முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் கார்களையும், ஸ்ட்ரீட் ரேஸையும் மையமாக வைத்து வந்த `F&F’ திரைப்படத்தின் முதல் பாகம் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்தப் படத்தில் வருவதுபோலவே `Fast &Furious’-ல் ‛பிரையன் ஓ கானர்’ எனும் கேரக்டராக நடித்த பால்வாக்கர், நிஜத்திலும் (2013-ல்) கார் ஓட்டும்போதே விபத்தில் இறந்தது உலகம் முழுவதும் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

பால்வாக்கர் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஓட்டிய டொயோட்டா சுப்ரா எனும் ஸ்போர்ட்ஸ் கார் இப்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள `Barret-Jackson Auction House’ எனும் கார் கலெக்ஷன் நிறுவனம்தான், `F&F’ முதல் பாகத்தில் வந்த டொயோட்டா சுப்ரா காரை ஜூன் 19-ம் தேதி ஏலத்துக்கு விட இருக்கிறது.

Toyota Supra

இந்த சுப்ரா ஸ்போர்ட்ஸ் கார், டொயோட்டாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த கார்களில் ஒன்று. முதல் பாகத்தில் ஒரு செமையான ஸ்போர்ட்ஸ் காரைத் தேடிக் கொண்டிருந்தபோது, கலிஃபோர்னியாவில் உள்ள ‛ஷார்க் ஷாப்’ எனும் கார் ரெனோவேஷன் சென்டரை நடத்தி வரும் `Eddie Paul’ என்பவர் ரெடி செய்த சுப்ரா கிடைத்திருக்கிறது. அதாவது, இது ஒரிஜினல் சுப்ரா இல்லை; மாடிஃபைடு டொயோட்டா சுப்ரா. ஆனால், ஒரிஜினலுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியாத அளவு இதை ரெடி செய்தவர் Eddie Paul. `F&F’ இரண்டாம் பாகத்திலும் இந்த காரை முழுதாக சரிசெய்து செய்து ஷூட் செய்தார்கள். இப்போது அந்த டொயோட்டா சுப்ராதான் ஏலத்துக்கு வந்திருக்கிறது.

இந்த சுப்ராவின் இன்ஸ்பிரேஷன் லம்போகினி டயாப்லோ எனும் கார்தான். அதாவது, லம்போகினி டயாப்லோ காரின் ஆரஞ்ச் நிறம்தான் இதன் முதல் இன்ஸ்பிரேஷனாம். காரின் பக்கவாட்டில் வரும் ‛நியூக்ளியர் கிளாடியேட்டர்’ பெயின்ட்டிங் வேலைப்பாடுகள், காரைச் சுற்றி எல்லா பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான Bomex கிட், அலுமினியம் Bi-Plane பின் பக்க ஸ்பாய்லர் (வேகங்களில் காரின் நிலைத்தன்மையைக் குலைக்காமல் இருக்கும்), 19 இன்ச் 5 ஸ்போக் ரேஸிங் ட்யூனர் அலாய் வீல்கள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இந்த காரை ஒரு எக்ஸாட்டிக் காராகக் காட்டுகின்றன.

பொதுவாக, அமெரிக்க கார்களைக் கவனித்தீர்கள் என்றால் கார்களின் முன் பக்க பானட் பயங்கர நீளமாக இருக்கும். அதாவது, விண்ட்ஷீல்டுக்கும் காரின் முன் பக்க பம்பருக்கும் ஒருவர் படுத்து உருளலாம் எனும் அளவுக்குத் தூரம் இருக்கும். இது காற்றைக் கிழித்துக் கொண்டு பயணிக்கவும், செமயான ஏரோடைனமிக்ஸும் கிடைக்கும் என்பதைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் உண்டு. கார் எதிலாவது மோதும்போது ஏற்படும் பாதிப்பிலிருந்து பெரும்பாலும் பயணிகளுக்குப் பெரிய அடிவிழாமல் காக்கும். அதுபோன்ற TRD எனும் ஸ்டைலான பானட், இன்னும் இந்த காரை செமையாகக் காட்டுகிறது.

Toyota Supra

இந்த 1994 மாடல் சுப்ராவின் பானெட்டுக்குக் கீழே உள்ளது 3,000 சிசி கொண்ட டர்போசார்ஜ்டு இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதில் கியர்கள் குறைவுதான். 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன். லம்போகினி, ஃபெராரி போன்ற சூப்பர் கார்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்காவிட்டாலும், சூப்பர் கார்களுக்கு இணையான வேகம் இதில் இருக்கும். இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ. சுமார் 5.4 விநாடிகளில் இது 100 கிமீ வேகத்தைக் கடக்கும்.

இன்டீரியரைப் பொருத்தவரை செம தொழில்நுட்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது. 1994 மாடல் காரல்லவா? எல்லாமே அனலாக் மீட்டர்கள்தான். ஆனால் செம ஸ்போர்ட்டியாக இருக்கின்றன.

`Barret-Jackson Auction House’ -ல் ஏலம் விடப்படும் கார்களுக்கு `Reserved Amout’ எனப்படும் இருப்புத் தொகையெல்லாம் நிர்ணயிக்க மாட்டார்கள். உங்களுக்குத் தோன்றும் அதிகபட்ச விலையை நீங்கள் நிர்ணயித்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இதில் டாக்குமென்டடேஷன், பெயர் மாற்றம், காரின் கண்டிஷன் எல்லாம் கம்பெனி பொறுப்பு. இந்த காருக்குப் பெயரே இப்போது பால்வாக்கர் சுப்ரா என்றுதான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது.

Supra Interior

இதுபோலவே 2015-ல், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட ஒரு NA இன்ஜின் கொண்ட காரையும் ஏலத்துக்கு விட்டார்கள். இந்த 1993 மாடல் கார் – 1.85 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் போனது. ‛ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தில் வரும் அந்த ஸ்டன்ட் சீனுக்காக ஏகப்பட்ட கார்களைத் தயார் செய்திருந்தபோதும், இந்த ஆரஞ்ச் நிற சுப்ராவுக்குத்தான் செம மவுசு. எனவே இது 1993 மாடலைவிட அதிகத் தொகைக்கே ஏலம் போகும் என்கிறார்கள்.

`F&F’ படத்தில் வரும் ஸ்டன்ட் சீனில் இப்படி ஒரு வசனம் வரும். காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை ஓட்டிவரும் ஒரு ரைடரிடம், ‛இது என்ன விலை’ என்று கேட்பார் பால்வாக்கர். அதற்கு, ‛‛It’s more than you can afford’’ (‛‛உன்னால் வாங்க முடியாத விலை’’) என்று நக்கலாகச் சொல்வார் அந்த ரைடர். இந்த சுப்ராவும் நிச்சயம் அப்படித்தான் இருக்கப் போகிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.