யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் ’ஏ ராசா’ இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.
மாமனிதன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. ஊரடங்கு தனிமையாலும், பல்வேறு இழப்புகளாலும் ஒருவித சோர்வான மனநிலையில் மக்கள் இருக்கும் இந்த சூழலில் யுவனின் குரலில் இந்த பாடல் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது குரலிலும், பாடல் வரிகளிலும் நம்மை தட்டிக் கொடுத்து ஆறுதலும் தெம்பும் சொல்வது போல் உள்ளது. கிட்டதட்ட புதுப்பேட்டை படத்தில் வரும் ’ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது’ என்ற பாடலைப் போன்ற ரகம் தான் இந்தப் பாடலும்.
வெளுத்து வாங்கும் வெய்யிலில் நொந்து நடந்தவனுக்கு லேசான ஈரப்பதத்தோட அடிச்ச காற்று மாதிரி, மெல்லிய இசையில் அதிக இசைக்கருவிகள் இல்லாமல் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டாரில் அழகான கவிதையே பாடியிருக்கிறார்கள். அவ்வளவு இதம், யுவனின் குரலைப்போல. கொடைக்கானல் மலைப் பகுதியிலும் அதனையொட்டிய மன்னவனூர் ஆட்டுப் பண்ணை பகுதியிலும் இந்தப் பாடல் யுவனை வைத்து ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், குளங்களும், மலைப் பகுதிகளும், ஆட்டுப்பண்ணையும் நம் கண்களை கொள்ளை கொள்ள செய்கிறது. பாடலில் முக பாவணையில் உணர்வுகளை சிறப்பாகவே கடத்தியுள்ளார் யுவன். இப்பாடலில் ஒளியும் ஒலியும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு இறுதியில் வென்றது யுவனின் ஒலியே.
இந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். தர்மதுரை படத்தில் வரும், ’எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு’ பாடலை போன்று வாழ்க்கையில் தோல்வியின் சோகத்தில் இருக்கும் ஒருவனை தேற்றி அவனுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள பாடல் இது.
’’வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்லை வா லேசா.. நம்பிக்கையை விட்டு விடாத வா ராசா..
தன்னம்பிக்கை ஒன்னே ஒன்னு போதாதா.. ஓன் சோகம் தீரும் பாதம் மாறும் வா ராசா
தன்னாலே இங்கே எதுவும் மாறப்போறது இல்ல.. முன்னால் நீயும் எழுந்து வா மெல்ல..
யாரால ஆகுமுன்னு மலச்சு போயி நின்ன.. உன்னால எதுவும் முடியும் வா முன்ன
எல்லாருக்கும் நேரம் வரும்.. நல்லா இருக்கும் காலம் வரும்..
மாற்றங்கள் தான் மாறாதது.. உன்வாழ்க்கையும் கை மாறுது…
என்னங்கள் உன்னிடம் சுத்தமென்றால் வெற்றி உன்னை சுற்றிவரும்…’’ வரிகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை அளிக்கும் வகையிலே அமைந்துள்ளது. நிச்சயம் யுவன் ரசிகர்களை தாண்டி பலரது இதயங்களை இந்தப் பாடல் இன்னும் சில நாட்களுக்காகவாவது வருடிக் கொண்டே இருக்கும்.
சமீபத்தில் இப்படத்தில் இளையராஜா குரலில் ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இரண்டாம் பாடலான ‘ஏ ராசா’ பாடல் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் 6 வது இடத்தில் உள்ளது. ’விஜய் சேதுபதி – சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘மாமனிதன்’ படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இப்படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM