நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, கருப்பு பூஞ்சை எனப்படும் முகோர்மைக்கோஸிஸ் வகை பூஞ்சை தொற்றால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. கொரோனா எண்ணிக்கை சரிவை நோக்கி செல்லும் சூழலிலும், இந்த முகோர்மைக்கோஸிஸ் அதிகரித்தே வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் 9,000 த்துக்கு மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான லிபோஸோமல் ஆம்போடெரிசின் பி வகை மருந்துக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது.

image

முகோர்மைக்கோஸிஸ் என்பது, பூஞ்சை தொற்றால் ஏற்படும் மிகவும் அரிதான பூஞ்சை தொற்றுவகை. 2019ம் ஆண்டில், பூஞ்சை தொற்றுகளுக்கான மருத்துவ இதழொன்று கொடுத்திருக்கும் தகவலில், இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் 140 பேருக்கு இந்த தொற்று ஏற்படுவதாக தரவுகள் சொல்லியுள்ளன.

எய்ம்ஸ் இயக்குநர் கடந்த மே 15 ம் தேதி பேசுகையில், ‘நாட்டின் பல பகுதிகளிலும், கொரோனாவுடன் தொடர்புடைய முகார்மைக்கோஸிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்துகளை முறையின்றி பயன்படுத்துவதே இந்த நிலைக்கு காரணம்’ எனக் கூறியிருந்தார். இதை அவர் கூறி, ஐந்து நாட்கள் கழித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த முகார்மைக்கோஸ் பாதிப்பு அதிகரிப்பதை உறுதிசெய்து, மாநிலங்கள் அனைத்துக்கும் இதுபற்றிய தரவுகளை அளிக்க உத்தரவிட்டது. 

பின்வந்த நாள்களில் இத்தொற்றை பரவலாக பரவும் நோய், அதாவது எபிடெமிக் என்று அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மே 22 ம் தேதியன்றி கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, இந்தியாவில் 8,848 பேருக்கு முகார்மைக்கோஸிஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கௌடா கூறியிருந்தார். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா பகுதியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

முகார்மைக்கோஸிஸை பொறுத்தவரை, இதற்கு உடனடி சிகிச்சை தேவையென்பது மட்டுமே நிலைமையை சரிசெய்யும் வழியாக இப்போதுவரை பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பு அதிகப்படியால் பாதிப்பின் தீவிரம் பொறுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு பூஞ்சைக்கு எதிரான ஆன்டி-ஃபங்கல் மருந்துகளோ; அறுவை சிகிச்சையோ செய்யப்பட்டு உடலிலிருந்து வைரஸ் அழிக்கவும் அப்புறப்படுத்தவும்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆன்டி-ஃபங்கல் மருந்துகளுக்கான பட்டியலில், liposomal Amphotericin B ஊசிகள் உள்ளன. அது கிடைக்காதபட்சத்தில் Amphotericin B deoxycholate ஊசிகள் போடப்படுகின்றன. இதுவும் கிடைக்கவில்லையென்றால், பைசர் நிறுவனத்தின் isavuconazole தரப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, Posaconazole என்ற ஜெனரிக் மருந்து.

“இவற்றில் முதலாவதாக சொல்லப்பட்ட liposomal Amphotericin B ஊசிகள்தான், மருத்துவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. இரண்டாவதாக சொல்லப்பட்ட Amphotericin B deoxycholate, சிறுநீரக பாதிப்பை பக்கவிளைவாக ஏற்படுத்தும் வலிமை கொண்டது. ஆகவே அதை இளைஞர்களுக்கு தருவதில்லை” என மும்பையை சேர்ந்த தனு என்ற தொற்றுநோயியல் மருத்துவர் கூறியிருக்கிறார்.

இப்படியான ஆம்போடெரிசின் மருந்துகளுடன்கூடிய சிகிச்சை, முகார்மைக்கோஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 முதல் 6 வாரங்கள் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்களுக்கு ஆம்போடெரிசின் மருந்து கொண்ட ஊசிகள் 90 முதல் 120 வரை போடப்படும். இதற்கு, 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவாகலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த மருந்துக்கான தட்டுப்பாடு, இப்போது நாடு முழுவதும் நிலவுகிறது. ஒரு நோயாளிக்கே 100 குப்பிகள் என கணிக்கப்படும் நிலையில், தமிழக மாநிலத்துக்கே 100 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்தே, இதன் தட்டுப்பாட்டு அளவை நாம் புரிந்துக்கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை 9,000 பேர் வரை இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், 9 முதல் 10 லட்சம் வரை இங்கு இந்த மருந்து குப்பிகள் தேவைப்படும் என கணிக்கப்படுகிறது.

image

இந்த ஆம்போடெரிசின் மருந்தை, பாரத் சீரம் மற்றும் வேக்சின், பிடிஆர் மருந்து தயாரிப்பு நிறுவனம், சன் ஃபார்மா, சிப்லா, லைஃப்கேர் இன்னவேஷன் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தியாவுக்கு இவற்றை மைலன் என்ற நிறுவனம் இறக்குமதி செய்கிறது. இந்த வகை தொற்று மிக குறைவாக இதுநாள்வரை ஏற்பட்டுவந்தது என்பதால், இதன் உற்பத்தி இதுவரை மிக குறைவாகவே இருந்திருக்கிறது.

தற்போது இதன் தேவை அதிகரித்திருப்பதால், உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில், அனைத்து நிறுவனங்களிலும் இருந்து மொத்தமாக 1.63 லட்ச குப்பிகள் வரை தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  கூடுதலாக 3.63 குப்பிகள் வரை இறக்குமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. தேவை கருதி, நேட்கோ (ஐதராபாத்) – எம்க்யூர் (புனே) – அலெம்பிக் -க்யூஃபிக் பயோசைன்ஸ் – லைகா (குஜராத்) ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிதாக தடுப்பூசி உற்பத்தி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. அந்த புதிய நிறுவனங்கள், ஜூலை மாதம் தான் தங்களின் உற்பத்தியை தொடங்கும் என்பதால், அதுவரை இறக்குமதி மருந்துகளை மட்டுமே அரசு நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மருந்து விநியோகம் நடக்கும்வரையில், மிகக்குறைவாகவே மாநிலங்களுக்கு குப்பிகள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும், 3 லட்சம் வரை குப்பிகள் கேட்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 21 ஆயிரம் குப்பிகளே தரப்பட்டுள்ளதாக, மகாராஷ்ட்ராவை சேர்ந்த உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி கூறியிருக்கிறார்.

விரைவில் சூழல் சரியாகவேண்டுமென்பதே அனைவரும் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது. இருப்பினும் சூழல் கட்டுக்குள் வரும் வரை, தொற்றை குணப்படுத்த முடியாது என்பதால் அதுவரை மருந்தின் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு வேறு வழிவகைகளை செய்ய வேண்டும்.

தகவல் உறுதுணை: Indian Express

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.