பழைய துணிகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து, அதனை தேவையுள்ளவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகை மூலம் கொடுக்கும் நடிகை நிக்கி கல்ராணியின் முயற்சி சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “ அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம் உண்ண உணவும், உறைவிடமும் கிடைக்கப் பெற்றிருப்பதே பெரும் பாக்கியம். வாழ்க்கை நிலையற்றது. இந்த நிலையற்ற வாழ்வில் நாம் நமக்குக் கிடைத்த வளங்களுக்கு நன்றியுடையவர்களாகவும் தேவையுள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனது இந்தக் கொள்கை எனது ஆடைகளுக்கும் பொருந்தும். பலரைப் போல் காலப்போக்கில் எனது தேவைகளை மிஞ்சி எனது உடைமைகள் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். அதனால் எனது தேவையைத் தாண்டி இருப்பவற்றை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன். உங்களின் அலமாரியில் எத்தனை பேர் பலவருடங்களாக அணியாத துணிகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். இப்படி உபயோகிக்காமல் தேவைக்கு மிஞ்சியிருக்கும் நம் உடைமைகளை ஒரு நல்ல காரியத்திற்கு உதவ உபயோகிப்பதே சிறப்பான வழி எனக் கருதுகிறேன்.

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக த்ரிஃப்ட் ஷாப்பிங் பிரபலமாகியுள்ளது. த்ரிஃப்ட் ஸ்டோர் என்றால் மக்கள் தாங்கள் முன்பு நேசித்த, தற்போது உபயோகிக்காத துணிகள், கைப்பைகள், காலணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கும் இடமாகும். சமூக வலைதளத்தில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் இந்தப் பொருட்கள் குறித்து பதிவு செய்யப்படும். அந்தப் பொருட்கள் அனைத்தும் மிகமிகக் குறைந்த விலையில் விற்க பட்டியலிடப்படும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் முன்பு நேசித்து இப்போது உபயோகிக்காமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை விற்பனை செய்யும் தளமாக இது செயல்படும்.

பலகட்ட திட்டமிடுதலுக்குப் பின்னர் நானும் எனது குழுவினரும் “Take 2 – Thrift to Uplift” என்ற முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம். இங்கு தானமாக பெறப்படும் அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டு, அவ்வருவாய் தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும். இது குறித்து மேலும் அறிய @take2_thrifttouplift இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடரலாம்.

அதுவும், இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்தால் சிறு துளி பெரு வெள்ளமாகும். இந்த முயற்சியில் என்னுடன் நீங்கள் அனைவரும் கரம்கோர்த்து இதை வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.