கொரோனாவால் தன் தாய்க்கு ஏற்பட்ட நிலை போல பிறருக்கு வரக்கூடாது என்பதற்காக ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து  கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவி. 

கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டிருக்கும் தாக்கம், பலரது மன உறுதிப்பாட்டையும் அசைத்து பார்த்து வருகிறது. ஒருபுறம் பயத்தை ஏற்படுத்தினாலும், தனக்கு ஏற்பட்ட இந்நோய் எதிரிக்கு கூட ஏற்படக் கூடாது என்பதே குணமடைந்தவர்களின் உளபூர்வமான விருப்பமாக இருக்கிறது. அப்படியொரு மனமுதிர்ச்சி சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்றாம் தேதி சீதாதேவியின் தாயார் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். ஆனால், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், அவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்த சீதாதேவி அடுத்தாக தாயாரை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அங்கு அந்த மூதாட்டிக்கு படுக்கை கிடைத்தும் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் சிறிது நேரத்திற்குள் உயிரிழந்துவிட்டார்.

இதனால் மனம் கலங்கிய சீதாதேவி, தனது தாயாருக்கு ஏற்பட்டது போன்ற துரதிருஷ்டம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என உறுதி பூண்டார். இதற்காக நண்பர்களுடன் இணைந்து ஆட்டோ ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து கொரோனா நோயாளிகளை காப்பாற்ற தனி ஒருவராக போராடி வருகிறார். மேலும் தான் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பது, மருத்துவ உதவிகளை வழங்குவது என்றும் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறார்.

தற்போது நோய் பாதித்தவர்களிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருவதால், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய இரண்டாவது ஆட்டோவையும் தயார் செய்ய சீதாதேவி திட்டமிட்டிருக்கிறார். 

பேரிடர் காலத்திலும் மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு, ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலை வைத்து விற்போர் மத்தியில், ஆட்டோ மூலம் இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் சீதா தேவிகளால் கொரோனாவில் இருந்து இந்த மனிதகுலம் படிப்படியாக மீளும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது.

ஆக்சிஜன் தேவை இருப்போர் 9840038410 மற்றும் 8939384104 என்ற எண்களை அழைத்தால் சீதாதேவியின் ஆட்டோ உதவிக்கு ஓடி வரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.