தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக கூறி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டர் தளம், உலகம் முழுவதும் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் ஆகியோர் பயன்படுத்தும் முக்கியமான சமூக வலைதளமாக இருக்கிறது.

பிரபலங்கள் உபயோகிக்கின்றனர் என்பதை தாண்டி, அரசின் கவனத்திற்கு பல முக்கிய விஷயங்களை பொதுமக்கள் எடுத்துச் செல்லவும் ட்விட்டர் உபயோகிக்கப்படுகிறது. ட்விட்டரை பொறுத்தவரை, எல்லா நிறுவனங்களையும் போலவே இதற்கும் சில வரைமுறைகள் இருக்கின்றது.

image

அந்த வகையில், ஆபாசம் நிறைந்த பதிவுகள் சமுதாயத்தில் வன்முறையை தூண்டும் பதிவுகள், ட்விட்டரின் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படுகிறது. அப்படியான பதிவுகளை இடும்பொழுது அந்த குறிப்பிட்ட நபருடைய சமூக வலைத்தள பக்கத்தை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ட்விட்டர் நிறுவனம் முடக்கும்.

இவற்றில், வன்முறை தூண்டும் பதிவுகள் போட்டதாக கூறி, நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கத்தை இன்று முடக்கியுள்ளது அந்நிறுவனம்.

கடந்த சில மாதங்களாகவே, தன் சமூகவலைதள பக்கத்தில், தனிநபர்களை தாக்கிப் பேசுவது – குறிப்பிட்ட ஏதாவது ஒரு சம்பவத்தை வைத்து ஏதாவது ஒரு அமைப்புகளை அவதூறாக பேசுவது என்பதை தொடர்ச்சியாக செய்து வந்தார் கங்கனா. அவற்றில் பல, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. உதாரணத்துக்கு, தேசிய குடியுரிமை திருத்த சட்டம், டெல்லி போராட்டத்தை விமர்சித்தது போன்ற கங்கனா ரனாவத்தின் பல ட்விட்டர் பதிவுகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டன.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாக, நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையை, “மரம் வளர்க்காததால்தான் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சிலிண்டரில் இப்படி ஆக்சிஜனை தொடர்ந்து நாம் அடைத்துக் கொண்டிருந்தால், அதனால் ஏற்படும் இயற்கை சமநிலையை எப்படி சரி செய்யப் போகிறோம்” என புரிதலின்றி கங்கனா பதிவிட்டிருந்தது, பேசுபொருளாக அமைந்தது. அவரின் இந்தக் கருத்தை, நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தனர்.

பல நேரங்களில் இவர் பேசுவது நகைப்புக்குரியதாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் சமுதாயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளும் இவரின் ட்விட்டரில் இருந்துவந்தது.

அந்த வகையில், தற்பொழுது மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் பதிவிட்டிருந்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில், ‘2000 – வது ஆண்டின் ஆரம்பங்களில் பிரதமர் மோடி இருந்தது போல தற்போது மாற வேண்டும், அதாவது குஜராத் கலவரம் சமயத்தில், மோடி இருந்தது போல தற்போது மாறவேண்டும். அவர் மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என்ற அர்த்ததில் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் கருத்தை பகிர்ந்திருந்தார் கங்கனா.

இதற்கு பல தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்ததாக கூறி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை இன்று நிரந்தரமாக முடக்கிவிட்டது.

கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பேசியிருக்கும் கங்கனா, ‘ட்விட்டர் வலைதளம் இல்லை என்றாலும், பிற வழிகளில் தொடர்ந்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன்’ என கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஒருதலை பட்சமானது என ஒரு சிலர் கருத்து கூற, “அமெரிக்க அதிபரின் சமூக வலைத்தள பக்கத்தையே நாங்கள் முடக்கினோம், எங்களுக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. எங்களது விதிமுறைகளை மட்டும்தான் பார்ப்போம். கோடிக்கணக்கானவர்கள் இருக்கும் ட்விட்டரில் பிரபலங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்” எனக் கூறுகின்றனர் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள்.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.