தஞ்சாவூரில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதாக கூறி போலீஸார் டீ கடை உள்ளிட்ட பல கடைகளில் ரூ5,000 வரை வசூல் செய்து வருவதாக வியாபாரிகள் வேதனையுடன் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்புகுள்ளானவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 26ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தியேட்டர்கள், பெரிய சூப்பர் மார்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்க் அணியாமல் வரும் நபர்களிடம் அரசின் சார்பில்  ரூ 200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் ரூ 5,000 வரை அபராதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் வசூல் செய்த அபராதம்

இது குறித்து நம்மிடம் பேசிய கடை உரிமையாளர்கள் சிலர் ,

“கொரோனா பரவி வருவதைத் தொடர்ந்து அனைத்து கடைகாரர்களும் வியாபார ரீதியாக  பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்தே  நாங்கள் கடைகளை  நடத்தி  வருகிறோம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸ் டீ கடைகளுக்கு வந்து ரூ 5,000 வரை அபராதம் வசூல் செய்கின்றனர்.  டீ கடை உரிமையாளர் ஒருவர்,  ‘என்ன சார் இது அநியாயமாக இருக்கு? எங்களுக்கு ஒரு நாள் வியாபரமே அந்த அளவிற்கு ஆகாது நீங்க 5,000 அபராதம் போடுறீங்க டாஸ்மாக் கடைகள்ல  கூட்டம் கூடுது. கூட்டமாக நின்னு மது வாங்கிட்டுப் போறாங்க குடிக்கிறாங்க.

சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கபடுவதே இல்லை.அங்கெல்லாம் கொரோனா பரவாதா சிலர் நின்னு டீ குடிக்குறதுல்ல கொரோனா பரவிடும்னு சொல்லி பணம் கேட்டு எங்க வயித்துல அடிக்கிறீங்களே!’ என கேட்டுள்ளார். அதற்கு ‘இதை நீங்க முதல்வர்கிட்ட தான் கேட்க வேண்டும். அபராத பணத்தை கட்டலைன்னா கடைக்கு சீல் வச்சுடுவோம்!’  என போலீஸ் தரப்பில் கூற வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்தியுள்ளனர்.

இது போல் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் செய்துள்ளனர். அதற்குரிய பில்லையும் கொடுக்கின்றனர். ஒரு டீ கடைக்காரர் கோடி கணக்குலையா லாபம் சம்பாதிக்க போறார். இதே போல் பானி பூரி கடை, பெட்டிக்கடை, சூப் கடை என பல கடைகளில் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் அபராதம் வசூலித்துள்ளனர். பூட்டியிருந்த கடை ஒன்னுல ரூ 400 வாங்கிட்டு போய்ட்டாங்கன்னா பார்த்துகோங்க  இதை  எங்க போய் சொல்ல. தஞ்சை நகரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இது போன்று போலீஸாரால் அபராதம்  வசூல் செய்யப்படுகிறது. இந்த கொடிய  நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய அரசே மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலை செய்கிறது ” என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கொரோனா விதிமுறை

இது குறித்து போலீஸ்  தரப்பில் பேசினோம், ” சில டீ கடைகளில் கூட்டமாக நின்று டீ குடிப்பதை பார்த்து கடை உரிமையாளர்களிடம் எச்சரித்து விட்டு சென்ற பிறகும் அவர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை அது போன்ற கடைகளுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்து” எனத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.