நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தடுப்பூசி வீண் செய்யப்படும் சதவிகிதம் என்பது பூஜ்யமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடோ, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசியின் பயன்களை தெரியப்படுத்துவதன் மூலமும், தடுப்பூசி மேலாண்மை குறித்து அரசு மருத்துவ ஊழியர்களிடம் பயிற்சி அளிப்பது மற்றும் தடுப்பூசியை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதன் மூலமாகவும் மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க முடியும்.

சுகாதாரத்துறை அளித்திருக்கும் தகவலின்படி மார்ச் 17-ம் தேதி வரை இந்தியாவில் 6.5% கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன. இது 4.4 மில்லியன் டோசஸுக்குச் சமம். கிட்டத்தட்ட திரிபுரா மாநிலத்தின் மக்கள் தொகையைவிட அதிகம். என்டிடிவியின் செய்தியின் படி ஏப்ரல் 11 வரை 100 மில்லியன் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அப்போது வீணாக்கப்பட்ட தடுப்பூசியின் சதவிகிதம் 4.4% ஆகும். தடுப்பூசியை வீண் செய்வதைத் தடுப்பதற்கு ஒரே வழி அவற்றைப் பயன்படுத்துவதுதான். ஒரு தடுப்பூசி செட்டை திறக்கும் பட்சத்தில் அவற்றை 10 பயனாளர்களுக்காவது பயன்படுத்த வேண்டும்.

ஆனால், அவ்வாறு 10 பயனாளர்களும் இல்லாதபட்சத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அவற்றைப் பயன்படுத்துவது என்பது இயலாது. எனவே, அந்தக் குப்பிகளை அதிலிருக்கும் தடுப்பூசி மருந்துடன் தூக்கியெறிகின்றனர்.

இது குறித்து கூறிய இந்திய பொது சுகாதாரத்துறை அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரி ஸ்ரீனிவாஸ், “குறிப்பிட்ட நேரத்துக்குள் குறைந்த வெப்பநிலையில் இருந்து வெளியில் எடுக்கப்படும் தடுப்பூசி குப்பிகள், ஒன்று முழுவதுமாகப் போடப்பட வேண்டும், அல்லது குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நேரத்தில் அவை வீணாக்கப்படுகின்றன” என்றார்.

மேலும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் சிலர் கூறுகையில், “மக்களில் சிலர்தான் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வருகிறேன் எனப் பதிவு செய்கின்றனர், அவர்களை நம்பி நாம் குப்பிகளைத் திறந்து வைத்திருப்போம். ஆனால், அவர்கள் தடுப்பூசியின் மேல் இருக்கும் நம்பிக்கையின்மை காரணத்தால் திடீரென வராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தடுப்பூசிகள் வீணாகின்றன” என்றார்.

அதுமட்டுமல்லாமல் அனுபவம் இல்லாத பணியாளர்களால் அளவுக்கு அதிகமான தடுப்பூசிகள் எடுக்கப்பட்டு பின் அவை தேவையில்லை என வீணாடிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அரசு, மார்ச் 17 வரை தெலங்கானா (17.6%) அதிக அளவில் தடுப்பூசி வீணாக்கியுள்ளதாக பதிவு செய்துள்ளது. அதற்கடுத்து ஆந்திரா (11.6%), உத்தரப்பிரதேசம் (9.4%) எனப் பதிவு செய்துள்ளது. ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் (12%), ஹரியானா (9.7%), பஞ்சாப் (8.1%), மணிப்பூர் (7.8%) மற்றும் தெலங்கானா (7.6%) ஆகிய மாநிலங்கள் அதிகளவு தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக என்டிடிவி அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் என்டிடிவி அறிக்கையின்படி கேரளா, மேற்கு வங்காளம், இமாசலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் / டையு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் `பூஜ்ய சதவிகிதம்’ தடுப்பூசியை வீணாக்குகின்றன எனவும் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி முகாம்

இருப்பினும், மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் அனுமதித்துள்ள 10% அளவுக்குள்தான் மேற்கண்ட மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பதால் வீணாகும் தடுப்பூசியின் அளவு ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 20-ம் தேதி வரை, இந்தியா 130 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. மே 1 முதல் அனைத்து பெரியவர்களும் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக இருப்பதால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்படுவார்கள். இதன் மூலம் வீணாவதைத் தடுக்க முடியும். ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி வீணாக்கும் அளவு 1% க்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும்படி மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதுடன், வீணாவதைக் குறைப்பதன் மூலம் அதிகம் பேருக்கு தடுப்பூசிகளை செலுத்தலாம் எனவும் கூறியுள்ளது.

கேரள அரசின் தடுப்பூசி மேலாண்மை!

தடுப்பூசிகளை வீணாகமல் தடுப்பதற்கு கேரள அரசு பின்பற்றும் வழிமுறைகள் அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசுக்கு சிறந்த பாடமாக இருக்கும்.

கேரளாவில் நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்றனர்.

“தடுப்பூசியை மேலாண்மை செய்வதிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்” என்கிறார் பத்தனம்திட்டா மாவட்ட சுகாதார திட்ட (என்.ஹெச்.எம்) மேலாளர் அபே சுஷன்.

மேலும், “பணியாளர்களிடம் தடுப்பூசி என்பது இன்னும் பற்றாக்குறையில் இருக்கும் விஷயம். அதனால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதைக் கிடைக்க வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கூறினேன். அதை அவர்கள் சிரமேற்கொண்டு செயல்படுத்துகிறார்கள்” என்கிறார்.

அங்கு உள்ள ஆஷா பணியாளர்கள் ஒரு தடுப்பூசி செட்டை திறந்து அதை முழுவதும் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயனாளர்களையும் தயார் செய்கின்றனர். அதாவது, 10 பேருக்கு ஒரு செட்டில் உள்ள தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளர்களை முதலில் ஒருங்கிணைக்கின்றனர். அதன் பின்னரே தடுப்பூசிகளைத் திறந்து பயன்படுத்துகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

மேலும் மாவட்ட அளவில் குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தரவுகளைப் பதிவு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் உதவி செவிலியர்கள் மற்றும் மகப்பேறு உதவி செவிலியர்கள் இணைந்து எந்த வார்டில் எவ்வளவு தடுப்பூசி போட வேண்டும் என ஒவ்வொரு முறையும் சொல்வதால் தடுப்பூசி வீணாக்கப்படுவது குறைக்கப்படுகிறது. ஒரு தடுப்பூசி செட்டைத் திறந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதால் தற்போது ஒரு செட் என்பது 20 டோஸ்கள் என்பதிலிருந்து 10 டோஸ்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகத் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 600 பயனாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியிருப்பதால் 10 மணி நேரம் வரை கேரள அரசின் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர் என பத்தினம்திட்டா மாவட்ட பொது மருத்துவமனையின் பொது சுகாதார ஆய்வாளர் கீதா குமாரி டி கூறுகிறார். மேலும், அவர் “ஆரம்பத்தில் அச்சங்கள் இருந்தபோதிலும் பொது மக்களிடம் தற்போது விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது” என்கிறார்.

பணியாளர்களின் நல்ல திட்டமிடல் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சியானது இங்கு தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத பின்தங்கிய பயனாளிகளுக்கு நேரடியாக பதிவு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறது. மத்திய அரசால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை இவ்வளவு சிறப்பாகக் கையாண்டிருந்தாலும்கூட, கேரள அரசு தற்போது தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் வேலையில் மாநில அரசு, ஏப்ரல் 20 அன்று, 5 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், தங்களுக்கு 5,50,000 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மறுபடியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தப் பற்றாக்குறை பயனாளிகள் தடுப்பூசியைப் பெறுவதைத் தடுக்கிறது எனக் கூறுகின்றனர்.

ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இவை அப்படியே வேறுபட்டு இருக்கின்றன. தடுப்பூசிகள் வீணாவதில் முக்கிய காரணமாக இருக்கும் குளிர்சாதன பாதுகாப்பு என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் சிரமேற்கொண்டு செய்ய வேண்டிய செயலாகவே உள்ளது. அங்கு கிராமங்களுக்கு தடுப்பூசியை குளிர்சாதன பெட்டியில் வைத்து செவிலியர்களின் கணவர்கள்தான் தங்களது இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்கின்றனர். அதற்கு அவர்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் என்ன நிலை என்பது குறித்து தென்காசியில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் மையங்களில் 10 பேர் வந்தால் மட்டுமே தடுப்பூசிகளைத் திறக்கிறோம். இதனால் இங்கு தடுப்பூசிகள் வீணாவதில்லை. ஆனால், பிற மாவட்டங்களில் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை. தடுப்பூசி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களே இப்படி தடுப்பூசிகள் வீணாவதற்குக் காரணம்” என்றார்.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடம் அவர்களின் அண்டை வீட்டார், சுற்றத்தாரையும் அழைத்து வர வலியுறுத்துவதாகவும், ஒருவேளை குறிப்பிட்ட அளவிலான மக்கள் சுகாதார மையத்திற்கு அருகிலேயே இருந்தால் அவர்களின் இடத்திற்கே சென்றும் தடுப்பூசிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் தடுப்பூசி வீணாகும் பிரச்னை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தடுப்பூசி வெளியான முதல் மாதத்தில் – டிசம்பர் 8, 2020 முதல் ஜனவரி 8, 2021 வரை – ஃபைஸர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் 1,56,262 டோஸ்கள் அளவுக்கு வீணாகிவிட்டதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஜனவரி 26 வேல்ஸ்ஆன்லைன் அறிக்கையின்படி, வேல்ஸ் 0.3% அளவை வீணாக்கியுள்ளதாக அறிவித்தது.

தற்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் நாட்டில் இதுபோன்று வீணாவதைத் தடுக்க, வயதானவர்களுக்கு போடப்பட்டு மீதமிருக்கும் தடுப்பூசியை மாலை நேரத்தில் இளைஞர்கள் போட்டுக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் அங்கு வீணாவது குறைந்துள்ளது.

தடுப்பூசி வீணாக குப்பைக்குச் செல்வதை எவ்வாறு குறைக்க முடியும்?

சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் படி,

1. இன்றைக்கு எவ்வளவு மக்கள் வருவார்கள், எவ்வளவு டோஸ்கள் தேவைப்படும் என்ற அளவுக்குத் திட்டமிட்ட பின்னரே முகாம்களில் தினசரி தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

2. 10 பயனாளிகள் வந்த பின்னரே தடுப்பூசி குப்பிகளைத் திறக்க வேண்டும்.

3. சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பது குறித்து போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

4. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கண்டிப்பாக கையாள வேண்டும்

5. தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கு அதற்குத் தேவையான குளிர்பதன வலையமைப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

IndiaSpend

Source:

– Shreehari Paliath / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.

தமிழில்: கௌசல்யா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.