தெலுங்கு திரையுலகம் சார்பில் சினிமா கலைஞர்களைக் காக்க முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தெலுங்கு திரையுலகம் தங்கள் திரையுலகினரை பாதுகாக்க புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதன்படி, தெலுங்கு திரைப்படத் துறையை உள்ளடக்கிய அனைத்து சினிமா கலைஞர்கள் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா பேரிடர் அறக்கட்டளை (சி.சி.சி) சார்பாக இலவச தடுப்பூசி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இயக்கம் மூலம் 45 வயதிற்கு மேற்பட்ட சினிமா கலைஞர்கள் இலவசமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.

திரைக் கலைஞர்கள் மட்டுமில்லாமல், அவர்களின் மனைவி அல்லது கணவர்களுக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். எனினும், தடுப்பூசி பெற விரும்பும், கலைஞர்கள் மற்றும் நிருபர்கள் தங்கள் சார்ந்த அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, ஓர் அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கேற்ப தடுப்பூசி போடப்படும்.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக தெலுங்கு திரையுலகில் உள்ள தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உதவ கொரோனா க்ரைஸிஸ் தொண்டு நிறுவனத்தை நடிகர் சிரஞ்சீவியும் மற்ற டோலிவுட் பிரபலங்களும் தொடங்கினர். இந்தத் தொண்டு நிறுவனம் மூலம் சினிமா தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்கள், தற்போது தடுப்பூசி இயக்கத்தையும் தொடங்கி மற்ற மாநில திரையுலகுக்கு முன்னோடியாக மாறி இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ட்விட்டர் முதலான சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சிரஞ்சீவி, திரைப்படத் துறையை கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி எடுக்க முன்வருமாறு அழைப்பு விடுத்தார். தடுப்பூசி பெறுபவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அப்போலோ மருத்துவர்களுடன் 24×7 இலவச ஆலோசனை கிடைக்கும் என்றும், தேவையான மருந்துகள் மானிய விலையில் வழங்கப்படும் என்றும் நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.