ஒரு வாரத்துக்கு முழு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள டெல்லியில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்குப் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், “நாங்கள் எந்த அரசையும் நம்பத் தயாராக இல்லை. எங்களுக்கு கொரோனா பயம் இல்லை; பசிதான் பயம்” என்று உருக்கமாக அனுபவம் பகிர்ந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கொரோனா முழு பொதுமுடக்கம் நேற்று இரவு (ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகரித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த சிலமணி நேரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லியை விட்டு வெளியேறத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக குவியத் தொடங்கினர்.

முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார். லாக்டவுன் காரணமாக ஏற்படும் அவர்களின் தேவைகளை அரசு கவனித்துக் கொள்வதாகவும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

ஆனால், “கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக சந்தித்த நெருக்கடியை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை” என்பதே பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் வருத்தமாகவும் பதிலாகவும் இருந்தது. அதன்படி, ஒவ்வொரு தொழிலாளர்களும் குடும்பம் குடும்பமாக வெளியேறி, பேருந்து நிலையத்துக்கு வந்ததால் அதிகளவு கூட்டம் கூடியது. இதனால், கொரோனா விதிமுறைகள் அங்கு காற்றில் பறந்தன. நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்டுமானத் தொழிலாளி ரமேஷ் குமார் என்பவர், ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு தினக்கூலி. கட்டிடங்களுக்கு பெயின்ட் அடிப்பது போன்ற சிறிய வேலைகளை செய்து வருகிறேன். லாக்டவுன் அறிவித்ததன் காரணமாக, எனது உரிமையாளர் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார். நிலைமை மேம்படும் வரை எங்களுக்கு வேலை இருக்கப்போவதில்லை. கடந்த ஆண்டு போலவே, லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், இந்த முறை டெல்லியில் நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. அரசு எங்களை சாகடிக்கும் முன்பு நாங்கள் இங்கிருந்து செல்ல விரும்புகிறோம்.

இனி எந்த அரசையும் நம்பபோவதில்லை. நான், எனது குடும்பத்தினருடன் உ.பி.-யில் உள்ள கோண்டாவுக்குப் புறப்படுகிறேன். நான் கொரோனாவைப் பற்றி பயப்படவில்லை. டெல்லியில் நிலைமை சரியில்லாமல் இருப்பதால் என் குழந்தைகள் பசியால் இறந்துவிடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். இங்கிருந்து வெளியேறுவதுதான் இப்போது இருக்கும் சிறந்த வழி” என்று வேதனை தெரிவிக்கிறார்.

இதேபோல் சில்லறை வியாபாரியான முராரி என்பவர், “இப்போது எனக்கு டெல்லியில் வேலை இல்லை. கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நான் எதையும் சம்பாதிக்கவில்லை. கடந்த ஆண்டு சந்தித்த சிக்கல்களுக்கு பிறகு, நான் ஒரு புதிய வேலையைத் தொடங்குவேன் என்று நினைத்து பிப்ரவரி மாதம் மீண்டும் டெல்லிக்கு வந்தேன். ஆனால், மற்றொரு லாக்டவுன் மற்றும் கொரோனா நிலைமை ஆகியவற்றால், தற்போது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

நான் இறந்தாலும் என் குடும்பத்தினர் முன்னிலையில் இறக்க விரும்புகிறேன். இங்கே தனியாக சாக விரும்பவில்லை. அதனால்தான் எனது ஊருக்கே திரும்ப செல்கிறேன். நான் திரும்பி செல்வதுதான் ஒரே வழி” என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். இதுதான் தற்போது டெல்லியின் நிலமையாக இருக்கிறது. பல தொழிலாளர்கள் கடந்த ஆண்டு சந்தித்த கஷ்டத்தின் காரணமாக, அரசின் வாக்குறுதிகளையும் நம்பாமல் ஊரை காலி செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.