மும்பை அருகில் உள்ள வாங்கனி என்ற இடத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் 6 வயது குழந்தையுடன் பார்வையற்ற பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்நேரம் குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. இதனால் அப்பெண் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். அந்நேரம் வேகமாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. உடனே அருகில் வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே பாயிண்ட்மேன் மயூர் ஷெல்கே, தண்டவாளத்தில் குழந்தை இருப்பதை பார்த்து ஓடிச் சென்று சிறுவனை காப்பாற்றினார். சிறுவனை தூக்கி பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு தானும் கண்ணிமைக்கும் நேரத்தில் பிளாட்பாரத்தில் ஏறிவிட்டார். சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் மயூர் ஷெல்கே ரயில் மோதி இறந்திருக்கக்கூடும்.

குழந்தையை காப்பாற்றும் மயூர்

ஆனால் தனது உயிரைப்பற்றி கவலைப்படாமல் துணிந்து குழந்தையை காப்பாற்றினார். இந்த காட்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் வெளியாகி மயூரின் இந்த துணிச்சலான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மயூருக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்தார். ரயில்வே நிர்வாகமும் அவரது சேவையை பாராட்டியதோடு, அவர் குழந்தையை காப்பாற்றிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கவுரப்படுத்தி உண்மையான ஹீரோ என்று புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மயூர் கூறுகையில்,“ நான் குழந்தையை காப்பாற்ற ஓடிய போது அது எனக்கும் ஆபத்து என்று தெரியும். ஆனாலும் குழந்தையை காப்பாற்றவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் இருந்தது. எனவேதான் ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றினேன். குழந்தையின் தாயார் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நன்றி தெரிவித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எனக்கு போன்செய்து பாராட்டினார்” என்கிறார்.

இந்த நிலையில் மயூர் ஷெல்கேயின் துணிச்சலான சேவையைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் ரூ50 ஆயிரம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதனை ட்விட்டரில் தெரிவித்திருக்கும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “மயூர் ஷெல்கேயின் செயலுக்கு பணம் ஈடாகாது. ஆனால் அவரின் மனிதாபிமான செயலை ஊக்குவிக்கும் விதமாக இது வழங்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய மயூருக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. 8 மாதங்களாகத்தான், மயூர் வாங்கனி ரயில் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.