’கர்ணன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் தனுஷின் அக்கா ’பத்மினி’யாக நடித்த லட்சுமி பிரியா. திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பத்திற்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வலியை தனது கதாபாத்திரம் மூலம் உணரவைத்து பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார். எதார்த்த நடிப்பின் மூலம் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியாவிடம் பேசினோம்…

’கர்ணன்’படத்தில் உங்கள் நடிப்பு பேசப்படும் என்பதை எதிர்பார்த்தீர்களா?

’நம் கேரக்டர் பெரிதாக பேசப்படவேண்டும்’ என்று எல்லா கலைஞர்களுக்கும் இருப்பது போன்று எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும்; பாராட்டுக்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கான உழைப்பை அனைவருமே கொடுத்திருக்கின்றோம். உழைப்புக்கான ரிசல்ட் கிடைத்திருப்பதில் மிகப்பெரிய சந்தோஷம். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும் பர்சனல் மெசேஜ் அனுப்பியும் வாழ்த்துகிறார்கள். பாராட்டுக்களின் எண்ணிக்கைதான் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

இந்தக் கதைக்குள் மாரி செல்வராஜ் எப்படி உங்களை கொண்டு வந்தார்?

‘பரியேறும் பெருமாள்’ எனக்கு மிகவும் பிடித்தப் படம். அதிலிருந்தே, மாரி செல்வராஜ் சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக காத்திருந்தேன். ஆனால், அவரே என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ’கர்ணன்’ படத்திற்காக போனில் அழைத்தது எதிர்பாராத சந்தோஷம். தனுஷின் அக்காவாக நான் பொருந்துவேன் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவர், ‘கர்ணன்’ கதையை சொல்லும்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான கதையாக இருக்கும் என்று தோன்றியது. நமக்கும் ஒரு சிறு பங்களிப்பு கொடுக்கிறார்கள் என்று சந்தோஷமாக நடித்தேன்.

பொடியன்குளம் கிராமத்துப் பெண்ணாக எப்படி மாறினீர்கள்?

படப்பிடிப்பு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எங்களை ஷூட்டிங் அழைத்தார்கள். கேரக்டருக்கான காஸ்டியூம்களை போட்டுக்கொண்டு அந்தக் கிராமத்திற்கு காலையிலேயே சென்றுவிடுவோம். தெருத்தெருவாகச் சென்று மக்களை சந்தித்து பேச்சு, பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டோம். இது இன்னும் எங்கள் நடிப்பை மெருகேற்ற உதவியது.

image

தனுஷுக்கு அக்காவாக நடித்த அனுபவம்?

தனுஷ், மாரி செல்வராஜ் இருவருமே அவரவர் துறை மீது மிகுந்த நேசிப்பு கொண்டவர்கள். தனது எழுத்தின் மீதும் இயக்கத்தின் மீதும் மிகுந்த உறுதியோடு இருப்பவர் மாரி செல்வராஜ். தனுஷ் நடிப்பின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இருவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். தனுஷ், சீன் எடுப்பதற்குமுன்பு ரொம்ப நார்மலாக அமர்ந்திருப்பார். கேமரா ஆக்‌ஷன் சொல்லிவிட்டால் போதும். அந்தக் கேரக்டராகவே மாறிவிடுவார். அதைப் பார்க்கவே சுவாரசியமாக இருந்தது. ரொம்ப மெனக்கெடாமல் கேஷுவலாக நடித்தார். ஆனால், முன்தயாரிப்பில் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது புரிந்தது. படத்தில்தான் நாங்கள் கலகல அக்கா தம்பி. ஆனால், ஷூட்டிங்கில் தனுஷ் சார் ரொம்ப அமைதியாக இருப்பார். எப்போதும் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். நாங்கள் நடிக்கும்போது மட்டுமே பேசிக்கொள்வோம். அதைத்தாண்டி பேசமாட்டோம். சீன் முடிந்தவுடன் அவர் உண்டு; அவர் புத்தகம் உண்டு என்றிருப்பார்.

தனுஷை அடிக்கும் காட்சியில் உண்மையாகவே அடித்தீர்களா?

படத்தின் மற்றக் காட்சிகள் போல்தான் அந்தக் காட்சியும். அந்தக் காட்சியை செயற்கையாகவும் பண்ண முடியாது. அழுத்தியும் அடிக்க முடியாது. பேலன்ஸாக அடித்து நடித்தேன். அவரும் அந்தக் காட்சியில் சர்வ சாதாரணமாக நடித்தார். அடிப்பதற்கு முன்பு ’எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. சீனுக்கு என்னத் தேவையோ அதை செய்ங்க’ என்று ஊக்கப்படுத்தினார். அந்தக் காட்சி கேரக்டருக்கு தேவையான சீன் என்பதால், நடிப்பவர் யார் என்பதை பார்க்க முடியாது; பார்க்கக்கூடாது.

image

கர்ணன்’ சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசுகிறது. சாதி குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

சாதி என்றில்லை. ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்த்து நிற்கவேண்டும். அதுதான் எனது நிலைப்பாடு.

அடுத்து எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள்?

எனக்கு பிடித்த விஷயம் விளையாட்டும் நடிப்பும்தான். அதனால், ஒரு விளையாட்டு சார்ந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவு.

பிடித்த கிரிக்கெட் வீரர்?

தோனி என்னோட ஃபேவரைட் வீரர். கேப்டனாக அவரின் தலைமைப் பண்பு, பக்குவம், கிரிக்கெட் குறித்த புரிதல் போன்றவற்றால் அவரைப் பிடிக்கும்.

இந்திய மகளிர் அணியின் கிரிக்கெட் வீரர் என்பதே பெரிய அடையாளம். அதைவிட்டுவிட்டு நடிப்புத்துறைக்கு வரக்காரணம் என்ன?

இப்போதுதான், பெண் கிரிக்கெட் வீரர்கள் கொஞ்சம் பிரபலமாக தெரிகிறார்கள். ஆனால், நான் விளையாடும்போதெல்லாம் அப்படி கிடையாது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜை தவிர வேறு யார் தெரிகிறார்கள்? என்னோட ஆசைக்கு கிரிக்கெட்டில் விளையாடவேண்டும் என்று நினைத்தவரை விளையடினேன். பின்பு, நடிப்பு பிடித்ததால் நடிக்க வந்துவிட்டேன்.

image

ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிது என்ற வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக அந்த வருத்தம் எனக்கு மட்டுமல்ல. எல்லா பெண் வீரர்களுக்குமே இருக்கும். மகளிர் கிரிக்கெட்டை மக்கள் பார்க்க வேண்டும் என்றால் அதிகமாக விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் நிதி கிடைக்கும். நிறைய போட்டிகள் நடக்கும். அது எல்லாமே சுழற்சிமுறை. ஆனால், முன்பு இருந்ததற்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லை.

’லட்சுமி’ குறும்படம் இப்போதும் பேசப்படுகிறதே?

அது நல்ல விஷயம்தானே? அந்த அளவிற்கு என் நடிப்பு பேசப்படுவது சந்தோஷம்தான்.

’லட்சுமி’ குறும்படத்தின் லட்சுமி. ‘கர்ணன்’ பத்மினி இரண்டு கதாபாத்திரங்களுமே பெரிதும் பேசப்பட்டவை. இரண்டில் எதை பெருமையாக எடுத்துக்கொள்கிறீர்கள்?

நான் ஒரு நடிகை. எல்லா கதாப்பாத்திரத்திற்கும் உழைப்பைக் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறேன். அந்தக் கதாபாத்திரமாக மாறிவிடுகிறேன். அவ்வளவுதான். இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல எல்லா படங்களில் நடித்ததும் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும்தான்.

image

உங்கள் பெயர் உண்மையிலேயே லட்சுமி பிரியாவா? ’லட்சுமி’ குறும்படத்தில் நடித்ததால் அப்படி வைத்துக் கொண்டீர்களா?

நான் பிறந்ததிலிருந்தே லட்சுமி பிரியா சந்திரமெளலிதான்.

உங்கள் அடுத்தப் படங்கள்?

வசந்த் இயக்கியுள்ள ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’, மலையாளத்தில் ஒரு படம் என நடித்து முடித்துள்ளேன். கொரோனாவால் தடைப்பட்டு நிற்கிறது.

வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.