இயந்திரங்களால் எப்போதுமே நாம் எதிர்பார்க்கும் 100 சதவிகித செயல்திறனை கொடுக்க முடியாது என்பது அறிவியல் உண்மை. அதேமாதிரியே, மனிதர்களுமே கூட எல்லா சூழல்களிலும் யாருடைய எதிர்பார்ப்பையும் 100 சதவிகிதம் பூர்த்தி செய்துவிட முடியாது. இது மனித இயல்பு. ஆனால், எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு இருப்பது போல, கிரிக்கெட் உலகில் இந்த விஷயத்தில் விதிவிலக்காக ஒரு வீரர் இருக்கிறார்.

ஏபி டிவில்லியர்ஸ் எனும் அந்த வீரர் தன்னுடைய அணி எப்போதெல்லாம் அவரிடமிருந்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை எதிர்பார்க்கிறதோ அப்போதெல்லாம் அடித்து துவம்சம் செய்கிறார். ஆர்சிபி ‘ஈ சாலா கப் நம்தே’ என ரிப்பீட் மோடில் சொல்லி சொல்லி ஏமாற்றினாலும் இந்த ஏலியன் டி வில்லியர்ஸ் மட்டும் ஒரு முறை கூட ரசிகர்களை ஏமாற்றியதில்லை.

இந்த சீசனில் ஆர்சிபி அணி முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த மூன்று வெற்றிகளில் இரண்டு வெற்றிகளில் டிவில்லியர்ஸின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. மும்பை அணிக்கு எதிராக சேஸிங்கின் போது அழுத்தமிக்க சூழலில் 27 பந்துகளில் 48 ரன்கள் அடித்து வெற்றிபெற வைத்தார். கொல்கத்தாவுக்கு எதிராக 34 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 200+ ஆக உயர்த்த உதவினார்.

ஏபி டிவில்லியர்ஸ்

இந்த இரண்டு போட்டிகள் குறித்து பேசும் போது இன்னும் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இவையனைத்துமே சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற போட்டிகள். மற்ற அணிகளும் முக்கியமான வீரர்களும் சேப்பாக்கத்தில் வைத்து கடுமையாக திணறுகின்றனர். குறிப்பாக, டெத் ஓவர்களில் 20-30 ரன்களை அடிப்பதே சிரமமாக இருக்கிறது. ஆனால், டிவில்லியர்ஸ் டெத் ஓவர்களில்தான் அதிரடி சூறாவளியாக வெளுத்தெடுத்தார். அதேமாதிரி, டெத் ஓவர்களில் ரஸலுக்கு எதிராக மற்ற அணியின் பேட்ஸ்மேன்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர்.

பிக்ஹிட்டர்களுக்கு பெயர் போன மும்பை இந்தியன்ஸ் அணி கூட ரஸலின் டெத் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து பணிந்தது. ஆனால், டிவில்லியர்ஸ் ரஸலின் இரண்டு ஓவர்களில் 38 ரன்களை பிரித்து மேய்ந்திருந்தார். மற்ற வீரர்களுக்கு அசாத்தியமான இலக்காக தெரியும் விஷயங்கள் டிவில்லியர்ஸ்க்கு மட்டும் மிகச்சாதரணமாக தெரிகிறது. இத்தனைக்கும் டிவில்லியர்ஸ் துபாயில் நடந்த கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறார். இடையில் 5 மாதங்கள் அவர் கிரிக்கெட்டே ஆடவில்லை என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.

2018-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். அதன்பிறகு, முழுக்க முழுக்க உலகமெங்கும் நடைபெறும் ப்ரிமியர் லீக் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதிலும், குறிப்பாக ஐபிஎல்-க்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினார். 2019 சீசனில் ஆர்சிபி அணிக்காக 442 ரன்களை சேர்த்திருந்தார். இதில் ஆச்சர்யம் ஒன்றுமே இல்லை. 2020 சீசனில் 454 ரன்களை சேர்த்திருந்தார். இதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.

ஏபி டிவில்லியர்ஸ்

2020-ல் கொரோனா பாதிப்பினால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கியிருந்தன. எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் சில காலங்களுக்கு நடைபெறவில்லை. நிலைமைகள் கொஞ்சம் சரியாகத்தொடங்கிய நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளும் மெதுமெதுவாக தொடங்கின. ஐபிஎல் போட்டிகளும் துபாயில் நடைபெறப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், நீண்ட நாட்கள் ஓய்விலிருந்ததால் பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய ஃபார்மை இழந்திருந்தனர். பலருக்கும் ஃபிட்னஸிலும் பெரிய பிரச்சனைகள்ௐ இருந்தது.

தற்போது சர்வதேச அணிகளுக்கு ஆடிக்கொண்டிருக்கும் வீரர்கள் கூட அதிக எடையுடன் காணப்பட்டனர். செட் ஆவதற்கு முதல் ஒன்றிரண்டு போட்டிகளை எடுத்துக்கொண்டனர். ஆனால், டிவில்லியர்ஸ்க்கு அப்படி எதுவுமே தேவைப்படவில்லை. 2019 சீசனில் என்ன ஃபிட்னஸோடு, என்ன ஃபார்மோடு தென்னாப்பிரிக்கவுக்கு ஃப்ளைட் ஏறினாரோ அதே ஃபிட்னஸோடு அதே ஃபார்மோடு துபாயில் காலடி எடுத்து வைத்தார். சன்ரைசர்ஸுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அரைசதத்தோடுதான் சீசனை தொடங்கினார். உனத்கட்டின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து சேஸிங்கில் சம்பவமெல்லாம் செய்திருந்தார். ஆர்சிபி அவரிடம் என்ன எதிர்பார்த்ததோ அதில் துளிகூட குறைவில்லாமல் செய்து கொடுத்தார்.

சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஐபிஎல் மாதிரியான போட்டிகளில் மட்டுமே ஆடும் வீரர்கள் இப்போது பெரிதாக சோபிப்பதில்லை. தோனியை கூட உதாரணமாக சொல்லலாம். நான்கைந்து வருடத்திற்கு முன்பு பார்த்த தோனி இப்போது இல்லை. காரணம், அவர் சர்வதேச போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என எதிலும் ஆடுவதில்லை. ஐபிஎல்-ல் மட்டுமே ஆடுகிறார். ஆண்டு முழுவதும் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்துவிட்டு இரண்டு மாதங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடி ஃபார்முக்கு வர வேண்டும் என்பது சாத்தியமற்றது. ஆனால், தோனிக்கு கூட கைக்கூடாத அந்தவித்தை டிவில்லியர்ஸ்க்கு கூடியிருக்கிறது.

ஏபி டிவில்லியர்ஸ்

ஆண்டு முழுவதும் கிரிக்கெட் ஆடாமல் நேராக சேப்பாக்கத்தில் கொண்டு வந்து இறக்கிவிட்டாலும் அவரால் பும்ராவின் பந்தை அசால்ட்டாக சிக்சராக்க முடிகிறது. டிவில்லியர்ஸின் இந்தத்தன்மைதான் அவரை அதிசயிக்கத்தக்க வீரராக மாற்றுகிறது.

எத்தனை மாதங்கள் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் டிவில்லியர்ஸ் தன்னுடைய அடிப்படையான டெக்னிக்கல் விஷயங்களில் கவனமாக இருக்கிறார். தோனி சறுக்கிய இடம் இதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோனி ஷாட் ஆடியவிதமும் இப்போது ஆடும் விதமும் முழுக்க முழுக்க வேறு மாதிரியாக இருக்கிறது. இப்போது டைமிங்கை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கைகளின் பலத்தை மட்டுமே நம்பி வலுவாக அடிக்க முயற்சிக்கிறார். ஆனால், இது பல நேரங்களில் சொதப்பவே செய்கிறது. டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி அவுட் ஆன விதத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

டிவில்லியர்ஸ் நீண்ட நாட்கள் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் தன்னுடைய டெக்னிக்கை மங்கவிடாமல் வைத்திருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்புள்ள டிவில்லியர்ஸின் ஷாட் ஆடும் திறனும் இப்போதுள்ள டிவில்லியர்ஸின் ஷாட் திறனும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. காரணம், அந்த அடிப்படையான டெக்னிக். பின்னங்காலை க்ரீஸுக்குள் முழுமையாக ஊன்றி தலையை திடகாத்திரமாக வைத்து பந்தை கடைசி நொடி வரைப்பார்த்து ஏதுவான ஷாட்டை தேர்வு செய்வார்.

ஏபி டிவில்லியர்ஸ்

கேமரா ஸ்டெடியாக வைத்து படம்பிடிக்க உதவும் கிம்பள் கருவியையும் டிவில்லியர்ஸின் டெக்னிக்கையும் கூட ஒப்பிடலாம். கைகளும் அவருடைய பேட்டும் எந்த திசையில் ஷாட் ஆட விரும்பினாலும் டிவில்லியர்ஸின் தலை மட்டும் ரொம்பவே ஸ்டெடியாக இருக்கும். இதன் மூலம் கடைசி நொடி வரை பந்தை அவரால் உன்னிப்பாக பார்த்து ஷாட் ஆட முடிகிறது.

கோலியை மாதிரி முன்னங்கால்களில் ஆடாமல், க்ரீஸின் ஆழத்தை முழுமையாக பயன்படுத்தி ஆடுவதால் பந்தை எதிர்கொள்ள கிடைக்கும் கூடுதல் மைக்ரோ செகண்டுகள் டிவில்லியர்ஸுக்கு சாதகமாக அமைகிறது. பல மாதங்கள் கிரிக்கெட் ஆடாவிட்டாலும் டிவில்லியர்ஸ் இந்த அடிப்படையான டெக்னிக்கில் மட்டும் உறுதியாக நிற்கிறார். அதுதான் அவரின் அதிரடிக்கான மூலக்காரணமாக இருக்கிறது.

டெக்னிக்கலாக எவ்வளவு பலமாக இருந்தாலும், 37 வயதான ஒரு வீரர் இவ்வளவு சிறப்பாக ஆடுகிறார் எனில் அவருடைய மனோபலமும் இங்கே விவாதிக்கப்பட வேண்டும். ”தோற்றுவிடுவோமோ என்கிற பயம்தான் என்னை ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த வைக்கிறது” என மும்பைக்கு எதிரான போட்டிக்கு பிறகு டிவில்லியர்ஸ் கூறியிருந்தார். ஓய்வுபெற்றுவிட்ட பிறகும் இன்னமும் தன் மீது தானே அழுத்தத்தை போட்டுக் கொண்டு தன்னுடைய தரநிலைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு வீரர் இல்லாமல் உலகக்கோப்பையை எதிர்கொள்ளக்கூடாது. டிவில்லியர்ஸை உடனே தென்னாப்பிரிக்க அணிக்கு அழையுங்கள் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. டிவில்லியர்ஸுமே மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக்கோப்பையில் ஆடுவதற்கு தயாராகவே இருக்கிறார். காலம் எப்போதாவதுதான் ஏபி டிவில்லியர்ஸ் மாதிரியான வீரர்களை பரிசாக அளிக்கும். அவரை பயன்படுத்திக் கொண்டு இதுவரை கோப்பையையே வெல்லாத ஆர்சிபியும், தென்னாப்பிரிக்கவும் வெற்றிவாகை சூடினால் அது வரலாற்று நிகழ்வாக மாறி நிற்கும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.