– ஆர்.எஸ்.ஜெ

நம் மண்டை ஓடுகளின் பிற்பகுதியில் சிறியதாக ஒரு முனை உருவாகி வளரத் துவங்கியிருக்கிறது. 20 வருடங்களாக மருத்துவத்துறையில் இருக்கும் ஆய்வின் தலைமை மருத்துவர் David Shahar கடந்த பத்து வருடங்களில்தான் இது போன்றதொரு வளர்ச்சியை நோயாளிகளிடம் அதிகம் காண்பதாக சொல்கிறார். மண்டை ஓட்டு எலும்பு வளர்வதற்கு அடிப்படை காரணமாக அவர் சொல்வது என்ன தெரியுமா?

மண்டை ஓடு

கொம்பு மனிதர்கள்

மிக அதிக நேரத்துக்கு இன்றைய இளைஞர்கள் தலையை கவிழ்த்தபடியே அமர்ந்திருப்பதுதான் காரணம்!

உடலில் குறைவாக பயன்படுத்தப்படும் பகுதிகள் திடீரென அதிகமாக பயன்படுத்தப்படுகையில் மாற்றங்களை பெறுவது இயற்கை. பல மணி நேரங்களாக தலையை குனிந்துகொண்டு ஸ்மார்ட்ஃபோன்களை பார்த்துக் கொண்டிருப்பது அதற்கு தொடர்பான உடல்பகுதியில் மாற்றத்தை கொண்டு வரும் நிலையை உருவாக்கும். குறிப்பாக, மண்டை ஓட்டுக்கு பின்புறத்துடன் கழுத்தை இணைக்கும் தசைப்பகுதி அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அங்கு மாற்றம் நேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. விளைவாக, அங்கிருக்கும் தசைப்பகுதி வளர்கிறது. வலுவடைகிறது. அந்த வளர்ச்சியையும் வலுவையும் தாங்கும் வகையில் புதிதாக எலும்பு முளை விடத் தொடங்கியிருக்கிறது.

அதாவது மனிதன் உருவான இத்தனை லட்சம் ஆண்டுகளில் முக்கியமான உருமாற்றத்தை அவன் அடைகிறான்! இது சாதாரணமான விஷயமே அல்ல!

தலை கவிழ்ந்திருக்கும் சமூகம்

2017ம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நபரும் ஒரு வாரத்தில் சராசரியாக 24 மணி நேரங்களை ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பதில் செலவழிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். சராசரியாக ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒருமுறை நாம் செல்ஃபோன்களை பார்க்கிறோம். தொடர்ச்சியாக கொடுக்கப்படும் வேலைகளின் அழுத்தம் திசுக்களை புதுச்சூழலுக்கு தகவமையச் செய்கின்றன என்கிறார் ஷாஹர். காலையில் கண் விழித்ததும் நாம் செய்யும் முதல் விஷயம் மொபைல்ஃபோனை பார்ப்பது. இரவு படுக்கைக்கு சென்றதும் நாம் செய்யும் முதல் வேலை மொபைல் பார்ப்பது. இரவு நேரத்தில் நாம் பார்க்கும் மொபைல் ஃபோனுக்கு முடிவே இல்லை. அருகேயே ஓரு ப்ளக் பாயிண்ட்டை வைத்து போனை இணைத்துக் கொள்கிறோம். பிறகு, மொபைல் ஃபோனுக்குள் இறங்கி தொலையத் தொடங்குகிறோம்.

செல்போன் பயன்பாடு

இரவு நேரத்தில் வெளிச்சம் எல்லாம் அணைக்கப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் செல்ஃபோன் நேரடியாக நம் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஒரு மணி நேரம் நெருக்கத்தில் நாம் பார்க்கும் வெளிச்சம், நம் உடலில் சுரக்கும் மெலட்டனின் என்ற ஹார்மோனை 22% அளவுக்கு குறைத்துவிடுகிறது. இந்த மெலட்டனின் என்கிற ஹார்மோன் இரவு நேரத்தில் மட்டுமே சுரக்கக் கூடியது. 9 ம்ணி அளவுக்கு சுரப்பு தொடங்கும். உடலின் விழிப்பு குறையும். தூக்கத்துக்கான அழைப்பு வரும். இரவை கணித்து சுரந்து உறக்கத்தை வரவைக்கும் சுரப்பியின் இயக்கம், இரவு நேரத்தில் நாம் செல்ஃபோனில் பார்க்கும் வெளிச்சத்தால் கணிசமான அளவுக்கு குறைக்கப்படுகிறது. விளைவு? தூங்க நேரமாகும். விடியற்காலையில் தூங்கத் தொடங்குவோம். முற்பகல் வரை தூங்கி வழிவோம். நாளின் அலுவலால் அவசர அவசரமாக தூக்கத்தை கலைந்து எழுவோம். சரியான தூக்கம் கிடைக்காமலே தொடர்வோம். தூக்கமின்மை தலைவலியை கொடுக்கும். அதிலிருந்தும் வெளியேற வழியின்றி, தூக்கமும் கண்களை பிசைய, நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருப்போம்.

1926ம் ஆண்டு. உலகின் முக்கியமான அறிவியலாளர் நிக்கோலா டெஸ்லா ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். ‘Wireless எனப்படும் கம்பியில்லா தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்படும்போது இந்த மொத்த உலகமும் ஒரு மிகப்பெரிய மூளையா மாறிடும். ஒருத்தரோட ஒருத்தர் தொடர்பு கொள்ள தூரம் தடையா இருக்காது!’ டெஸ்லா சொன்னதிலிருந்து 68 வருடங்கள் கழிந்தன. 1994ம் ஆண்டு. உலகம் முதன்முறையாக அப்படியொரு சாதனத்தை கண்டது. சாதனத்துக்கு ‘Simon Personal Communicator’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதை அறிமுகப்படுத்திய நிறுவனம் IBM. இன்றிலிருந்து பார்க்கையில் தொழில்நுட்ப உலகம் Simon Personal Communicator-ஐத்தான் முதல் ஸ்மார்ட்ஃபோன் என அடையாளப்படுத்துகிறது.

நிக்கோலா டெஸ்லா

ஸ்மார்ட்ஃபோன் என்பதற்கு அர்த்தம் என்ன?

ஸ்மார்ட் என்ற வார்த்தையை சாமர்த்தியம், சமயோசிதம் போன்ற அர்த்தங்களை கொண்டு மொழிபெயர்க்கலாம். உங்கள் கையில் இருக்கும் ஃபோன் சாமர்த்தியமாக, சமயோசிதமாக இருந்தால் அதுவே ஸ்மார்ட்ஃபோன். அது என்ன சாமர்த்தியம், சமயோசிதம்? எந்தவொரு நேரத்திலும் உங்களின் விருப்பத்துக்குரிய விஷயங்களை செய்யும் எல்லா வாய்ப்புகளையும் உள்ளடக்கியிருப்பதைத்தான் சாமர்த்தியம் என்கிறார்கள். ஸ்மார்ட் என்கிறார்கள்.

ஓரிடத்தில் இருந்து மட்டுமே பயன்படுத்தும் ஃபோன்களுடன் புழங்கியிருந்த மக்களுக்கு எங்கும் எடுத்து செல்லக்கூடிய வாய்ப்பை கொடுத்த ஸ்மார்ட்ஃபோன் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆச்சரியத்தின் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோனின் விலையும் இருந்தது. கிட்டத்தட்ட 77000 ரூபாய்க்கும் மேல். மேலும் ஒரு செங்கல் அளவுக்கு அளவும் எடையும் கொண்டிருந்தது. தொடுதிரை, முகவரிகள் சேமிப்பு மற்றும் நாளேடு போன்ற செயலிகளை கொண்டிருந்தது. 6 மாதங்கள் ஆகியும் வெறும் 50,000 ஃபோன்களே விற்றிருந்தது. அந்த அளவுக்கான விலையை தொலைத்தொடர்புக்கு மட்டுமென செலவழிக்கும் அளவுக்கு செல்வம் படைத்திருந்தவர்கள் அவ்வளவு குறைவாகவே அக்காலத்தில் இருந்தார்கள்.

ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தை பார்த்துவிட்ட பிறகு நிறுவனங்கள் விட்டுவிடுவதில்லை. முதல் ஸ்மார்ட்ஃபோன் வெறும் ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கையில் விற்று முடிந்த பிறகு, 2001ம் ஆண்டு அடுத்த ஸ்மார்ட்ஃபோன் வந்தது. பெயர் Blackberry! முதன்முறையாக இணையத்தை செல்ஃபோனுக்கு கொண்டு வந்திருந்தது. விலையும் சாமானியனின் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. அவனால் கொடுக்க முடிகிற அளவுக்கு அது மலிவாக இல்லையெனினும் கடன்பட்டு சில நாட்களில் அடைத்துக் கொள்ளும் அளவுக்கு குறைவாக இருந்தது. பல நிறுவனங்கள் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்திக்குள் வரத் தொடங்கின. வெவ்வேறு விலைகளில் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆயிரமாயிரம் அறிமுகப்படுத்தப்பட்டன. விலைக்கு ஏற்ற வசதிகளை ஸ்மார்ட்ஃபோன்கள் கொண்டிருந்தன. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு இணையாக இணைய வசதியற்ற சாதாரண ஃபோன்களும் அறிமுகமாகின. இணையம் இருந்தால் ஒரு விலை. இணையம் இல்லையென்றால் ஒரு விலை. கேமரா இருந்தால் ஒரு விலை. கேமரா இல்லையென்றால் ஒரு விலை. தொடுதிரை அளவுகளை வைத்து விலை. ஸ்மார்ட்ஃபோன்களின் பேட்டரி மின்சாரம் தாங்கும் அளவுகள் கொண்டு விலை. ப்ராண்ட்டை வைத்து ஒரு விலை. புது ப்ராண்ட் என்றால் ஒரு விலை.

ஃபேஸ்புக் | Facebook

சமூக ஊடக காலம்

2005ம் ஆண்டிலிருந்து முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் சமூகதளம் உலகமெங்கும் பரவியது. அறிமுகமில்லா நண்பர்கள் பலரை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் புகைப்படங்களை பதிவேற்றும் வழியும் கருத்துகளை பதிவிடும் தளமும் மக்களுக்கு பல திறப்புகளை திறந்துவிட்டது. எல்லா சாத்தியங்களையும் மக்கள் ஃபேஸ்புக்கில் முயன்றனர். ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் தொடங்கி, குரூரமான தகவல் திருட்டுகள் வரை எல்லா நிலைகளையும் கொண்ட ஒரு பெருங்கடலாக பேஸ்புக் உலகம் முழுவதையும் பீடித்தது. கணினிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த முகநூல் App எனப்படும் செயலியாக மாற்றப்பட்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்குள்ளும் இடம்பெறத் தொடங்கியது.

2007ம் ஆண்டு. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஏனென்றே தெரியாமல் இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மேடையில் நின்று உலகை நோக்கி பேசினார். அவரின் கையில் மனிதப் பரிணாமத்தின் எதிர்கால வடிவம் இருந்தது. ஐஃபோன் ஸ்மார்ட் போன்களால் முதலில் தொலைத்தொடர்பு மாற்றப்பட்டது. பின் நம் வாழ்க்கைகள் மாற்றப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபது வருடங்கள்தான் ஆகின்றன. ஆனால் அவை நமக்குள் கொடுத்திருக்கும் மாற்றங்கள் நம் பரிணாமத்தையே புரட்டிப் போடும் கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்மார்ட்ஃபோன் தட்டையான ஒரு சாதனம். அதன் தொடுதிரை எதுவும் பேசுவதில்லை. நீங்களாக விருப்பப்பட்டு ஒரு காணொளியை ஓட விட்டால் மட்டுமே பேசும். அதன் இயக்கம் முழுக்க உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் விரும்பினால் படிப்பீர்கள். இல்லையெனில் வேறு செயலிக்கு மாறுவீர்கள். ஒரு காணொளி பார்ப்பீர்கள். ஒரு குறுந்தகவல் பார்த்தால் உடனே அதற்கு தாவுவீர்கள். எந்த ஒரு நடவடிக்கையிலும் உங்களுடைய முழு கவனம் இருக்காது. உங்களின் சிந்தனைமுறையே மிக மேலோட்டமாக மாறும். இந்த எல்லா தன்மைகளையும் உங்களின் வாழ்க்கைக்கு பொருத்திப் பாருங்கள். எந்த மனிதர் பேசுவதும் முழுமையாக உங்களின் மனதுக்குள் இறங்காது. அது அந்த நேரத்தில் வேறு விஷயங்களையும் செய்தபடி இருக்கும். உடனடியாக வேறு ஒரு செயலிக்கு மாறுவது போல் உங்களால் மனிதரை மாற்ற முடியாது. ஆகையால், அவரை பேச விட்டுவிட்டு, உங்கள் மனதில் நீங்கள் வேறு விஷயங்களை ஓட்டிக் கொண்டிருப்பீர்கள். அந்த மனிதர் பேசும் விஷயம் ஏதேனும் உங்களின் உள்ளே போகுமா என பார்த்தால் எதுவும் போயிருக்காது. ஸ்மார்ட்ஃபோனின் தொடுதிரை எத்தனை தட்டையாக இருக்கிறதே அதே அளவுக்கான தட்டையோடுதான் சமூகம் உங்களுக்கு இருக்கும்.

மனிதர்கள் ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் அல்ல, நாம் விரும்பும்போது கேட்பதற்கும் மாற்றிவிட்டு செல்வதற்கும். சமூகம் ஸ்மார்ட்ஃபோனின் தட்டையான திரையும் அல்ல; நம் இயக்கத்துக்கு மட்டுமே இயங்கிட!

Also Read: காதல், காமம், உழைப்பு – தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10

கவனம்… கவனம்… கவனம்

கனடா நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் கவனம் மனிதனுக்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2000மாவது வருடத்தில் ஒரு மனிதனின் தொடர் கவனம் சராசரியாக 12 நொடிகளுக்கு இருந்தன. அதாவது நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கவனித்தாலும் அதை உள்வாங்க 12 நொடிகளை எடுத்துக் கொள்கிறீகள். அந்த கால அளவே குறைவு என விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவும் குறைந்திருக்கிறது. எந்தவொரு விஷயத்தை கவனிக்கவும் நாம் வெறும் 8 நொடிகளை மட்டுமே செலவிடுகிறோம். நாம் வீடுகளில் வளர்க்கிறோமே தங்க மீன், அது கூட ஒரு விஷயத்தை கவனிக்கவென ஒன்பது நொடிகளை செலவழிக்கிறது. பரிணாமத்தின் உச்சியில் இருப்பதாக அறிவித்துக் கொள்ளும் மனிதர்களாகிய நாம் வெறும் எட்டு நொடிகளைத்தான் செலவழிக்கிறோம்.

ஸ்மார்ட்ஃபோன்

அந்த எட்டு நொடிகள் மட்டும்தான் நம் காதலருக்கு, பெற்றோருக்கு, உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு என எல்லாவற்றுக்கும். அந்த எட்டு நொடிகள் கவனமே நம் மனதை, உறவை, வாழ்க்கையை, அரசியலை, உலகத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பாக இருந்தாலும் உண்மையாகவும் இருக்கிறது. இருபது வருட ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டு வகை மனிதர்களை ஒரே காலகட்டத்தில் நிறுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்ஃபோனை உடலின் அங்கமென நினைப்பவர்கள், ஸ்மார்ட்ஃபோன்களின் மீது பெரிய விருப்பம் இல்லாதவர்கள். இந்த இரண்டு வகைக்கு இடையில்தாம் உறவு, வாழ்க்கை, புரிதல், உலகம் எல்லாமும் இருப்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

பெரும் துயர நாடகம் ஒன்று அரங்கேறுவது தெரியும்!

(தொடரும்)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.