`என்ன… வீட்ல இருந்துகிட்டே அண்ணா பல்கலைக்கழகத்துல எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படிக்கலாமா?’ என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? ஆம்… வீட்டில் இருந்துகொண்டே, பணியில் இருந்துகொண்டே இப்படிப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தொலைநிலைக் கல்வி முறையில் இந்த வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க நினைத்தும் முடியாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பணியில் இருப்பவர்கள் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பு இது. ஆண்டுக்கு இரண்டு முறை இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கானது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை படித்துவிட்டு பணியில் இருப்பவர்களுக்குத் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி-சிஎஸ் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதுநிலை

கற்றுத்தரப்படும் படிப்புகள்

– எம்.பி.ஏ-வில் ஜெனரல் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட்,

– மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்,

– பைனான்ஷியல் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் சர்வீஸஸ் மேனேஜ்மென்ட்,

– ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்

இந்தப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இதுமட்டுமன்றி எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன.

எம்.பி.ஏ. படிப்புகளில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ, படிப்பில் சேர விரும்புவோர் பி.சி.ஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களது பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளில் சேர விரும்புவோர், கணிதப்பிரிவை பாடமாகக் கொண்டு ப்ளஸ் டூ மற்றும் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க முடியாத நபர்கள் யார்?

* தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்படிப்பில் சேர தகுதியற்றவர்கள்.

* தற்போது ரெகுலரிலோ, தொலைதூரக் கல்வியிலோ முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பவர்கள் இப்படிப்பில் சேர முடியாது.

நுழைவுத்தேர்வு விவரங்கள்

மேற்குறிப்பிட்ட எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேரவிரும்புவோர் DEET எனப்படும் Distance Education Entrance Test-ஐ எழுத வேண்டும். எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு தேவை இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் 2020 நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் DEET நுழைவுத் தேர்வை எழுதத் தேவை இல்லை.

நுழைவுத் தேர்வு எப்படி இருக்கும்?

நுழைவுத்தேர்வானது குவான்டிடேட்டிவ் எபிலிட்டி (Quantitative Ability), அனலிட்டிக்கல் ரீஸனிங் (Analytical Reasoning), லாஜிக்கல் ரீஸனிங் (Logical reasoning), கம்ப்யூட்டர் அவேர்னஸ் (Computer awareness) ஆகிய பிரிவுகளில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். வெர்பல் ஆக்டிவிட்டி, பேஸிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து சில கேள்விகள் இடம்பெறலாம்.

Management

கொள்குறி வினா விடை முறையில் நடத்தப்படும் இத்தேர்வில் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையைத் தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் எதுவும் கிடையாது என்பதால் தேர்வர்கள் நம்பிக்கையோடு இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம்.

நுழைவுத்தேர்வு நடைபெறும் இடங்கள்

எம்.பி.ஏ படிப்பில் சேர விரும்புவோருக்கான DEET நுழைவுத்தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வருகிற ஏப்ரல் 18, 2021 அன்று நடைபெறும்.

இதே நாளில் எம்.சி.ஏ-வுக்கான DEET நுழைவுத்தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். தேர்வு நேரம் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை.

டான்செட் நுழைவுத்தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலும், DEET நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சலிங் முறையில், தகுதி உடையவர்கள் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

தொலைநிலைக் கல்வி முறையில் நடத்தப்படும் படிப்பு என்பதால், பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள், பயிற்சியில் இருப்பவர்கள் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து நிறைய பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

படிப்புக் கட்டணம் எவ்வளவு?

செமஸ்டர் முறையில் நடத்தப்படும் இப்படிப்புகளுக்கான கட்டணம் முதல் செமஸ்டருக்கு மட்டும் ரூ. 18,650. மற்ற செமஸ்டர்களுக்கு கட்டணம் 12,500 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்தபின் அதை பிரின்ட் அவுட் எடுத்து, அதனுடன் வேண்டிய சான்றிதழ்களின் நகல்களோடு, விண்ணப்பக் கட்டணம் ரூ.650-க்கான டிமாண்ட் டிராஃப்டை இணைத்து அனுப்ப வேண்டும்.

#39;THE DIRECTOR, CENTRE FOR DISTANCE EDUCATION, ANNA UNIVERSITY, CHENNAI' என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் எடுக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு குறித்த தகவல்கள், படிப்புக்கான கட்டண விவரங்கள், ஸ்டடி சென்டர்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்

தேவையான அளவு மாணவர் சேர்க்கை இருந்தால், ஸ்டடி சென்டர்களில் வகுப்புகள் நடத்தப்படும்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் போன்றோர் தொலைநிலைக்கல்வி முறையில் இப்படிப்புகளில் சேர்ந்து தங்களது தகுதிகளை உயர்த்திக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்றால் தனி மரியாதையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கிடைக்கும் என்பதால் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான தேதிகள்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2021

எம்.எஸ்ஸி. சிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2021

எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: 24.4.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

THE DIRECTOR,

CENTRE FOR DISTANCE EDUCATION,

ANNA UNIVERSITY,

CHENNAI – 600 025.

இப்படிப்பு குறித்து அனைத்து தகவல்களும் அண்ணா பல்கலைக்கழக தொலைநிலை கல்விக்கான இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

தொலைபேசி எண்கள்: 044-2235 7216, 21, 17

விவரங்களுக்கு: http://cde.annauniv.edu

– மோ.கணேசன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.