கோடிக்கணக்கில் பணம் இருந்தும், 20 வயதிலேயே ரஞ்சி அணியில் விளையாட இடம் கிடைத்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடத்தேர்ந்தெடுக்கப்பட்டும் ”கிரிக்கெட்டே வேண்டாம்” என ஓராண்டுக்கும் மேலாக விலகியிருப்பவர்தான் ஆர்யமான் விக்ரம் பிர்லா!
யார் இந்த ஆர்யமான்?!
1997-ல் பிறந்த 23 வயது கிரிக்கெட் வீரர் ஆர்யமான் விக்ரம் பிர்லா. 7000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புகொண்ட பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லாவின் ஒரே மகன்தான் இவர். கிரிக்கெட் வீரராக வேண்டும் என சிறுவயதில் இருந்து பயிற்சிகள் மேற்கொண்டு கிரிக்கெட் வீரராகவும் உருவெடுத்த ஆர்யமான் பிர்லா 2016-17 சீசனில் மத்திய பிரதேச ரஞ்சி அணிக்குள் இடம்பிடித்தார்.
பிர்லாவின் மகனாகவே இருந்தாலும் முதல் சீசனில் கடைசி லீக் போட்டியில் அதாவது ஒடிசாவுக்கு எதிரானப் போட்டியில்தான் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 67 பந்துகள் சந்தித்து 16 ரன்கள் அடித்தவர், இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்களில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்த வாய்ப்புக்கு அவர் ஓராண்டு காத்திருக்க வேண்டியிருந்தது.

இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஆர்யமான் பிர்லா அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர் அல்ல. ராகுல் டிராவிட்டின் ஆட்டமுறையைப் பின்பற்றி அவரைப்போல நிதானமான ஆட்டம் ஆடுபவர். 2018-19 சீசனின் முதல்போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிராக ஆடும் வாய்ப்பு ஆர்யமான் பிர்லாவுக்குக் கிடைத்தது.
166 பந்துகளை சந்தித்தவர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். 51 ரன்களில் இருந்தபோது ரவிச்சந்திரன் அஷ்வினின் பெளலிங்கில் அவுட் ஆனார். முதல் போட்டியில் தவறவிட்ட சதத்தை இரண்டாவது போட்டியில் வங்காள அணிக்கு எதிராக அடித்தார் ஆர்யமான். இப்போட்டியில் வங்காள அணி முதல் இன்னிங்ஸில் 510 ரன்கள் குவித்து, மத்திய பிரதேச அணிக்கு தோல்வியைப் பரிசளிக்கக் காத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆர்யமான் பிர்லாவும் 12 ரன்களில் ஆட்டம் இழக்க, மத்தியபிரசம் 335 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 189 பந்துகளில் 103 ரன்கள் குவித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று மத்திய பிரதேசத்தின் ஹீரோவானார் ஆர்யமான். ஆனால், இதற்கடுத்த போட்டிகளில் ஆர்யமானால் 30 ரன்களுக்கு மேல் தாண்டமுடியவில்லை. மத்தியபிரதேச அணியும் லீக் சுற்றோடு வெளியேறியது.
இந்நிலையில்தான் 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் 2018 நவம்பரில் நடந்தது. இந்த ஏலத்துக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ரஞ்சி கோப்பையில் சதம் அடித்திருந்தார் ஆர்யமான். 20 லட்சம் ரூபாய் அடிப்படைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியின் முக்கிய ஸ்பான்சர் ஒரு சிமென்ட் நிறுவனம். இது பிர்லா குழும நிறுவனம் என்பதால்தான் ஆர்யமானை அணிக்குள் எடுத்திருக்கிறார்கள் என்கிற பேச்சுகள் அப்போது கிளம்பியது.

2019 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில்கூட விளையாட இடம் கிடைக்காத ஆர்யமான், 2019 டிசம்பரில் கிரிக்கெட்டைவிட்டே விலகுவதாக அறிவித்தார்.
”ஒரு வலைக்குள் அடைபட்டுவிட்டதாக உணர்கிறேன். கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் என்னைப் பதற்றத்துக்குள்ளாக்குகின்றன. மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. என்னால் முயன்றவரைப் போராடிப்பார்த்தேன். ஆனால், இப்போதைக்கு எல்லாவற்றையும்விட என்னுடைய மனநலனே முக்கியம் என்பதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் விளையாடவருவேன் என நம்புகிறேன்” என அப்போது அறிவித்திருந்தார் ஆர்யமான் பிர்லா.
ஓராண்டுக்கு மேலாகியும் அவர் இன்னும் கிரிக்கெட் பிட்சுக்குத் திரும்பவில்லை. தந்தையுடன் சேர்ந்து பிர்லா குழும தொழில்களில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் ஆர்யமான் விக்ரம் பிர்லா.
ஆர்யமான் பிர்லாவைப்போலவே இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் எடுக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். ”என்னை விமர்சனம் செய்யுங்கள். ஆனால், என் மகனைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவனை விளையாட்டில் கவனம் செலுத்தவிடுங்கள்” எனத்தொடர்ந்து மகனுக்காக கெஞ்சிவருகிறார் சச்சின் டெண்டுல்கர்.