‘‘ஆந்திராவில் பார்க்கிறதுக்குப் பெருசா ஒண்ணும் கிடையாதுங்க…’’ என்பவர்கள், சுற்றுலா பற்றித் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், ‘சென்னைக்கு மிக அருகில்’ எனும் கேப்ஷன் போட்டு சிலாகித்தபடி, சித்தூர் பக்கம் வண்டியைக் கிளப்புவார்கள் ‘வாண்டர்லஸ்ட்’டுகள். உண்மையில் சென்னைக்கு மிக அருகில், சித்தூரில் அருவிகளுக்குப் பஞ்சமே இருக்காது. நாகலாபுரம் அருவிகள், அர்ரே அருவி, தடா, கோனே, கங்கண்ணசிரசு, கைகல் என்று எக்கச்சக்க அருவிகள் சித்தூரிலேயே உண்டு. இவையெல்லாமே சென்னையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு நாள் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்பது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்.

அப்படி ஒரு திட்டம்தான் போட்டேன். பிறப்பிலேயே நான் ஒரு வரலாற்றுப் பிரியன். ஆந்திராவில் கந்திக்கோட்டா எனும் கோட்டைகள், குகை என ஹிஸ்டாரிக்கல் ட்ரிப் அடிக்கலாம் என ப்ளான் போட்டேன். அந்த இடம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ஆனால், இப்போ சம்மராச்சே! ஏற்கெனவே ‘சுந்தரா டிராவல்ஸ்’ வடிவேலு நிறம் நமக்கு. ‘‘கருவாடாப் போயிடப் போறீங்க’’ என்று எனது வெல்விஷர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க… ‘உன்னை வின்ட்டர்ல வெச்சுக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டு, ‘கத்தி’ விஜய் மாதிரி ஆந்திராவின் புளூபிரின்ட்டை செக் செய்தேன். நாகலாபுரம், தடா போன்ற அருவிகள்தான் எல்லோரது ஃபேவரைட் ஸ்பாட் ஆக இருக்கும். இப்போது நாகலாபுரம் அருவிக்குத் தடா போட்டு விட்டார்கள். தடுக்கி விழுந்தால், வீக் எண்டில் தடாவில்தான் ‘அக்கடா’ எனக் குளியல் போடுவேன் என்பதால், கைலாசகோனா எனும் அருவிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

சூரியகாந்தி தோட்டம்

சித்தூர் மாவட்டத்தில் உள்ள கைலாசகோனா அருவி, மிகப்பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டெல்லாம் கிடையாது. ஆனால், சம்மர் நேரத்தில் ஜில்லெனக் குளித்து, நான்வெஜ் சாப்பிட்டு வர ஒரு சுமாரான இடம்தான். கிராண்ட் ஐ10 காரில்தான் நண்பர்களுடன் கிளம்பினேன். பைக்கில் போகலாம்தான். ஆனால், பைக்கில் போனால், ஒரு சிக்கல் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

சென்னையில் இருந்து கிளம்புபவர்களுக்கு செங்குன்றம், புழல் ரூட்தான் பாதை. செங்குன்றம் தாண்டி IOC பெட்ரோல் பங்க். இடதுபுறம் திரும்பினால் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர், நாகலாபுரம், கைலாசகோனா என்பதுதான் பாதை.

ஒரு கார் வாங்கப் போகும்போது, நாம் ஒரு காரை நினைத்துப் போனால், வேறு ஒரு காரை புக் செய்துவிட்டு வருவோமே… அதுபோல், நாம் ஒன்று நினைக்க, நமக்கு வேறொரு டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு வழிகாட்டும் பாதைகள் சித்தூரில் ஏராளம். நாகலாபுரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட நான்கைந்து அருவிகள் காட்டினார்கள். பெரியபாளையம் தாண்டி பிச்சாட்டூர் வழியாக வலதுபுறம் திரும்பினால், ஒரு ஆர்ச் வரும். அதில் திரும்பினால் நாகலாபுரம் அருவி. நேராகப் போனால் திருப்பதி.

தமிழ்நாட்டு எல்லையான ஊத்துக்கோட்டையில் இருந்தே ஜாங்கிரியைப் பிய்த்துப் போட்டதுபோல், சைன் போர்டுகள் இருந்தன. எங்கேயாவது கைலாசகோனாவுக்கான பெயர்ப் பலகை தெரிகிறதா என்று கூகுள் லென்ஸில் சோதனை செய்தால், எல்லாமே டாஸ்மாக் கடைகளுக்கான போர்டுகள்.

ஆந்திர சாலை தமிழ்நாடு மாதிரி இல்லை; கொஞ்சம் தெலுங்குப் படம் பார்ப்பது மாதிரி ரஃப் அண்ட் டஃப்பாகவே இருந்தது. வீக்கான சஸ்பென்ஷன், டயர் கொண்ட கார்கள்… இங்கே பம்மிப் பம்மித்தான் ஆக வேண்டும். ஆனால் இயற்கையை நினைத்து ஃபீல் செய்பவர்களுக்கு இந்தப் பாதை பிடிக்கும். பச்சைப் பசேல் வயல்கள், மஞ்சள் சூரியகாந்திகள், கரும்புத் தோட்டம் என்று கலர்ஃபுல்லாக இருந்தது பாதை.

ஆந்திரா கோனே ஃபால்ஸ்

திருப்பதி சாலையில் இருந்து ஓர் இடத்தில் இடதுபுறம் திரும்ப வேண்டும். அதுதான் கைலாசகோனாவுக்கான பாதை. நல்லவேளையாக சைன் போர்டு வைத்திருந்தார்கள். ‘ஜலம் பாகவுந்தியா’ என்று விசாரித்தேன். வழக்கம்போல் கக்கத்தில் பேக்கை வைத்துக் கொண்டு பார்க்கிங் வசூலித்தார்கள்.

இடதுபக்கம் 3 சாப்பாட்டுக் கடைகள் இருந்தன. கோனேவில் உள்ளே நுழையும்போது பார்க்கிங்கிலேயே மடக்கி விடுகிறார்கள் ஆந்திர அண்ணையாக்கள். “மீரு போஜனம் சேசி இஸ்தாரா” என்று 30 நாள் தெலுங்கைப் பயன்படுத்தினேன். “சூப்பரா சமைச்சுத் தருவோம் காரு… நாட்டுக்கோழியா, மீனா, மட்டனா, சிக்கனா? எது வேணுமோ, சொன்னீங்கன்னா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள பிரமாதப்படுத்திடலாம்” என்று கார் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்ற மொழியில் வியாபாரம் செய்கிறார்கள்! நம்மைத் தவிர எல்லோருமே தமிழ் பேசினார்கள்.

கோனே நுழைவு வாயில் சமையல் டீல்
கடுமையான ட்ரெக்கிங்
நாட்டுக்கோழி சமையல்

நாட்டுக் கோழி/பப்பு சாதம் போன்றவற்றுக்கு ஆந்திரா ஸ்டைலில் ஆர்டர் கொடுத்துவிட்டு அருவியை நோக்கி நடந்தோம். என்ட்ரன்ஸில் ஆளுக்கு 10 ரூபாய் வசூலித்தார்கள். கீழேயே குளிப்பதற்கு ஷார்ட்ஸ், துண்டெல்லாம் சேல்ஸ் ஆகிக் கொண்டிருந்தன. டவுசர், துண்டு எல்லாம் பேக் செய்துவிட்டு ‘வெறித்தனமான குளியல்தான் இன்னிக்கு’ என்று கிளம்பினோம்.

நுழைவு வாயிலேயே ஒரு சிவன் கோயில் இருந்தது. கைலாசநாதர் கோயில். அதனால்தான் இதற்குப் பெயர் கைலாசகோனா. கைலாசநாதர் கோயில் தாண்டி ஒரு 0.4 கிமீ நடந்திருப்போம். எதிரே கைலாச கோனா அருவி.

ஜலம் பார்த்துக் கண்ணில் ஜலம் வந்துவிட்டது. பெரிதாக எதிர்பார்த்துப் போனால், குழந்தைகள் ‘உச்சா’ போவதுபோல் மெல்லிசாகக் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. ஆனால், அருவி அமைந்திருந்தே அழகே மனதுக்கு ரம்மியமாக இருந்தது. சம்மருக்கு இது கிடைக்கிறதே பெருசு என்று பெருமையாக இருந்தது.

கோனே குளியல்

குற்றாலம் எஃபெக்ட்டில் சிலர் ‘மொழு மொழு’ தொப்பையோடு ஆயில் பாத்துக்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். அருவிக்குப் பார்த்து ஏற வேண்டும். பாசி படர்ந்து வழுக்கிக் கொண்டிருந்தது.

பார்ப்பதற்குத்தான் மெல்லிசாக இருக்கிறது அருவி. அருவிக்குத் தலையைக் கொடுத்தால், ஏதோ ஒரு ஜென்நிலை கிடைக்கிறது. வலிக்கவும் இல்லை; ‘என்னடா குளியல் இது’ என்று கடுப்பும் வரவில்லை. இருந்தாலும், என் போன்ற குளியல் பார்ட்டிகளுக்கு இது போதவில்லை.

என் நண்பர் ஒருவரிடம் டிப்ஸ் கேட்டிருந்தேன். கோனேவில் குளித்து முடித்துவிட்டுக் கீழே இறங்கினால், கோயிலுக்கு முன்பு அப்படியே இடப்பக்கம் திரும்ப வேண்டும். குறுகலான மலைப்பாதை அப்படியே மேலேறியது. கற்கள், மேடுகள் என்று செமையான ட்ரெக்கிங். பெரிய பெரிய பாறைகள் படிகள் மாதிரியே இருந்தன. இயற்கையின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் மூச்சு வாங்கத்தான் செய்தது. ஆனால், பாதை அம்சமாக இருந்தது. வழி தெரியாமல் போனால், அம்சம் துவம்சமாகி விட வாய்ப்புண்டு. இந்த ட்ரெக்கிங்கில் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்.

கோனே ட்ரெக்கிங்
ஆந்திரா கோனே ஃபால்ஸ்
குரங்குகளிடம் கவனம்

கொஞ்சம் பாதை மாறினாலும், அவ்வளவுதான். ஏதோ ஒரு மலை உச்சிக்குச் சென்று, சில ஆயிரம் அடி உயரத்தில் வெயிலில் செல்ஃபி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்ச நேரம் ட்ரெக்கிங் முடிந்த பிறகு, ஹாலிவுட் படங்களில் ஏதாவது ஒரு விஷுவலைப் பார்த்து ஷாக் ஆவார்களே… அதுபோன்றதொரு ஷாக்கிங். பெரிய அகழி போன்று ஒரு தடாகம் இருந்தது. கீழே தீர்த்தம்போல விழுந்து கொண்டிருந்த அருவிக்கு இதுதான் சோர்ஸ். பார்த்தவுடனேயே டைவ் அடிக்க வேண்டும்போல் இருந்தது. நீச்சல் பார்ட்டிகளுக்குச் சரியான சாய்ஸ்தான். ஆனால், ஆழம் ரொம்ப அதிகம் இல்லை. எனவே, டைவ்வில் கவனம். தொப்பென்று விழுந்தோம். வெயிலுக்குப் பரம சுகமாக இருந்தது. குளித்துவிட்டு மலை உச்சியில் இருந்து பார்த்தேன். திருப்பதி மலை என்று நினைக்கிறேன். கீழே அதே ஃபோர்ஸில் இறங்க ஆரம்பித்தோம். அதே ‘குழந்தை உச்சா’ அருவியில் இப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. பாவமாக இருந்தது.

சிவன் கோயிலுக்குப் பிறகு குரங்குகள்தான் கோனேவில் ஹைலைட். பஸ் கட், ஸ்பைக்கி, ஷார்ட் கட், பவுல் கட் என்று வெரைட்டியான ஹேர்ஸ்டைல்களில் குரங்குகள் கோனேவை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தன. ஒரு மூத்த குரங்கார் ஒருவர், ஒரு பைக்கின் டேங்க் கவரைத் தன் ஸ்டைலில் பிரித்து, ஒரு BS-4 பைக்கின் RC புக்கை எடுத்துப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தின்பண்டம் கிடைக்காத விரக்தியில், ஆர்சி–யைக் கசக்கிப் போட்டார். ஆர்சி புக்கை ஸ்மார்ட் கார்டாக்கிய மத்திய அரசுக்கு நன்றி. இப்போது மூன்றாவது பாராவைப் படிக்கவும்.

பைக்கில் வருபவர்கள் டேங்க் கவரில் தின்பண்டங்கள் வைப்பதைத் தவிர்த்தல் நலம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ‘ஐய்யய்யோ… என் காரோட ஆன்டெனா’ என்று பதறிக் கொண்டிருந்தார் ஒரு கார் உரிமையாளர். சேட்டைக்காரக் குரங்கொன்று ஒரு செடான் காரின் ஆன்டெனாவில் சறுக்கிச் சறுக்கி, பார் கம்பியில் தண்டால் எடுப்பதுபோல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தது.

குளித்து முடித்து வந்தபோது, கோழி வெந்து முடிந்து, செ‘மத்தியான’ சாப்பாடு தயாராகி விட்டிருந்தது. குரங்குகள் தொல்லைதான் தாங்க முடியவில்லை. நம் வாய்க்குள் கையை விட்டுப் பிடுங்கி எடுக்க மட்டும்தான் குரங்குகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மற்றபடி உரிமையோடோ, அதிகாரத்தோடோ உணவைப் பகிர்ந்து உண்ணத் தொடங்கின.

நாட்டுக்கோழி ஆந்திரா மீல்ஸ்
ஆந்திரா கோனே ஃபால்ஸ்
கோனேவில்
தனி அருவி

அருவிக்கு நுழையும் முன்பு கீழே கம்பு அதிரசம், முறுக்கு, சீடை போன்றவற்றை விற்கும் பாட்டிகள், கையில் எப்போதும் தடியோடுதான் வியாபாரம் செய்கிறார்கள். குரங்குகளுக்குத் தெரியாமல் சில கம்பு அதிரசங்களையும், முறுக்குகளையும் பார்சல் செய்து கொண்டோம்.

கோனேவில் காட்டுக்கு நடுவே தங்குவதற்கும் அற்புதமான சாய்ஸ் உண்டு. ஹரிதா எனும் ரெஸார்ட்டுகள் ஆந்திரா முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு ஓட்டல்’ மாதிரி ஆந்திர அரசாங்கமே நடத்துவதுதான் ஹரிதா ரெஸார்ட்டுகள். 950 ரூபாயில் இருந்து 2,500 வரை மலிவான விலையில் ரெஸார்ட்டுகள் இங்கே கிடைக்கின்றன. அடுத்த வாட்டி ப்ளான் பண்ணிட வேண்டியதுதான் என்று மொபைலில் குறித்துக் கொண்டேன்.

கோனேவில் இருந்து 2 கி.மீ திரும்பவும் ரிட்டர்ன் ஆகி, சும்மா ஒரு ஏரியாவில் காரை நிறுத்தி போட்டோ ஷூட் எடுக்கலாம் என்று காரை நிறுத்தினால்… அருவிச் சத்தம் மனசிலிருந்து இறங்கவில்லை. சினிமாவில் வருவது மாதிரி பிரமையாக இருக்குமோ என்று நினைத்தால்… பக்கத்தில் நிஜமாகவே சலசலப்பு. ‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில் வருவதுபோல் லேசாக 400 மீட்டர் த்ரில்லிங்கோடு நடந்து போனால், அட… யாரும் இல்லாத ஏரியாவில், ஏரியாவையே சில்லிட்டபடி ஜில்லென விழுந்து கொண்டிருந்தது மற்றோர் அருவி. பார்ப்பதற்கு கோனேவின் ஒண்ணு விட்ட தம்பி மாதிரி ஒத்தையில் இருந்தது. அங்கேயும் ஒரு மினி குளியல்.

‘இது என்ன பிரமாதம்? இது மாதிரி கோனேவில் ஏகப்பட்ட அருவி இருக்குண்ணா… சீஸன் அப்போ வந்தீங்கன்னா, உங்களுக்கு கோனேவை விட்டுப் போக மனசே இருக்காது’ என்றார் ஆந்திராவில் கும்பகோணம் காபிக் கடை வைத்திருக்கும் தமிழ்நாட்டுவாசி ஒருவர்.

அப்போ கோனே ஃபால்ஸ் போக என்ன சீஸன்? மழை நேரங்கள் தவிர்த்து தண்ணீர் குறைவாக விழுமே ஒழிய, முறட்டு வறட்சியிலும் பகட்டில்லாமல் பட்டையைக் கிளப்புகிறது கோனே அருவி!

டிகிரி காபி

இதை நோட் பண்ணுங்க!

சென்னையில் இருந்து ஒரு நாள் டூருக்கு அற்புதமான இடம் – ஆந்திர மாநிலம் சித்தூர். சித்தூரில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாறு அருவிகள் உண்டு. நாகலாபுரம், அர்ரே அருவி, உப்பலமடுகு, தலகோனா, வரதய்யபாளம், சத்திகூடு மடுகு, நானியாலா, கங்கண்ணசிரசு என்று எக்கச்சக்க அருவிகள் உண்டு. சென்னையில் இருந்து கைலாசகோனாவுக்கு அதிகாலையில் கிளம்பினால், மாலை இருட்டும்போது வீட்டுக்கு வந்துவிடலாம். திருப்பதி போகும் சாலையில் இடதுபுறம் திரும்பினால் கைலாசகோனா. இங்கு தங்கும் ரெஸார்ட்டுகள் சில உண்டு. ஆந்திர அரசாங்கத்தின் ஹரிதா ரெஸார்ட் மிகவும் மலிவு. ரூ.950-ல் இருந்து 2,500 வரை வாடகை. மீன், இறால் போன்ற கடல் உணவுகளை நீங்களே வாங்கிவந்து கொடுத்தால், சமைத்துத் தர ஆள் உண்டு. நாட்டுக்கோழி, மட்டன் போன்றவற்றை அங்கேயே செலெக்ட் செய்து கொள்ளலாம். குரங்குகள் தொல்லை மிக மிக அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க! டூரிஸ்ட்களின் கார்/பைக் சாவி முதற்கொண்டு ஆட்டையைப் போட்டு அலைக்கழித்த சம்பவங்கள் கைலாசகோணாவில் நிறைய உண்டு.

என்ன பார்க்கலாம்?

சித்தூர், நகரியில் இருந்து

* தடா அருவி

உப்பலமடுகு என்பதுதான் பெயர். ட்ரெக்கிங், அருவி, நீச்சல் என்று ஜமாய்க்கலாம். நடக்கத் தெம்பு உள்ளவர்கள் மட்டும் கிளம்பலாம்.

* கவுண்டின்யா வனச்சரகம்

வனவிலங்குகள் பார்க்க அருமையான இடம். யானைகள் அதிகம் என்கிறார்கள்.

* சதாசிவ கோனா அருவி

ட்ரெக்கிங், அருவிக் குளியல்தான் இங்கும் பிரசித்தம். எங்களுக்கு நிறைய கிளைகள் உண்டு என்பதுபோல், உள்ளுக்குள்ளே இரண்டு மூன்று கிளைகள் கொண்ட அருவி.

* மூலகோனா அருவி

பெரிதாக யாரும் அறிந்திராத டூரிஸ்ட் ஸ்பாட். நீச்சல் எக்ஸ்பெர்ட்டுகளுக்கான அருமையான இடம். இங்கும் இரண்டு கிளை அருவிகள் உண்டு.

டாப் வியூவில்…

* மாமண்டூர் அருவி

சென்னை – கடப்பா ஹைவேஸில் இருக்கிறது. நிறைய குளங்கள், ஓடைகள் என்று இயற்கை விரும்பிகளுக்கு அற்புமதமான ஸ்பாட்.

* தலக்கோனா

செப்டம்பர் முதல் ஜனவரி வரை அருமையான சீஸன். மேலே போகப் போக, அருமையான வியூவில் அற்புதமான குளியல் போடலாம்.

* வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்

இங்கு ஜங்கிள் சஃபாரி உண்டு. தலைக்கு 500 ரூபாய் கட்டணம். காலை 6 முதல் மாலை 4 மணி வரை சஃபாரி உண்டு. விலங்குகள் பார்க்கலாம்.

* பூபதேஸ்வரா கோனா அருவி

T.P கோட்டா எனும் கிராமத்தில் இருக்கும் அருவி. இயற்கையோடு இயைந்த மூலிகை மணம் கமழும் அருவி.

* சுவாமி சித்தேஸ்வரா கோனா அருவி

நாகலாபுரத்தில் இருக்கும் அருவிகளில் ஒன்று. இங்கு ட்ரெக்கிங் போக தனிப் பயிற்சி வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.