மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்திருக்கிறது. தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளில் பகுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் கொரோனாவின் தீவிரம் குறையவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் 28-ம் தேதியில் இருந்து இரவு நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார். நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனை டீன்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து உத்தவ் தாக்கரே கலந்தாலோசித்தார்.

உத்தவ் தாக்கரே

கூட்டத்திற்கு பிறகு உத்தவ்தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 28-ம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுகிறது. கோயில்கள், பீச், பார்க் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் இரவு 8 மணிக்கு மூடப்படும். அந்த நேரத்தில் ஷாப்பிங் மால்கள் கட்டாயம் அடைத்து இருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே நாளில் 36,902 பேருக்கு கொரோனா பாதித்து இருக்கிறது. பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்த அளவுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா என்பதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்யவேண்டும்.

முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த விரும்பவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படு வாய்ப்பிருக்கிறது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேவையான மருந்து மற்றும் படுக்கைகள் இருப்பதை மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்யவேண்டும். இது தவிர கடைகள், தியேட்டர்கள், கோயில்கள் போன்றவை திறந்திருக்கும் நேரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

Also Read: கொரோனா 2வது அலை… எதிர்கொள்ள கைகொடுக்கும் இயற்கை… மீண்டும் இந்த வழிகளைக் கையிலெடுப்போமா?

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் அதிக அளவு கொரோனா தாக்கம் இருக்கும் மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்ளில் கொரோனா விதிகளின் படி பணி நேரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். இதற்காக சோதனைகள் செய்யவேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. அதை இன்னும் விரைவுப்படுத்தவேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கவேண்டும். செயற்கை சுவாசம், படுக்கைகள், சோதனை சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.” என்று முதல்வர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.