முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, இழிவு செய்யும் வகையில் பேசியதாக தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது அ.தி.மு.க தரப்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பரப்புரையில் ஆ.ராசா பேசும் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவ, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பிட்டு பேசும் போது ஆ.ராசா பயன்படுத்திய வார்த்தைகளே சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த ஆ.ராசா,“ நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகின்றனர். அரசியலில் இருவரின் வளர்ச்சி பற்றி, குழந்தைகளாக இருவரையும் வைத்து ஒப்பீடு செய்து பேசினேனே தவிர, முதலமைச்சரை அவதூறாக பேசவோ, அவருக்கு களங்கம் விளைவிக்கவோ நான் நினைக்கவில்லை.” என்றார்.

ஆ.ராசா

இந்த நிலையில், கண்ணியக் குறைவான பேச்சை தலைமை ஏற்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பரப்புரை செய்யும்போது நமது மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரப்புரையில் ஈடுபடும்போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.

தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.