இங்கிலாந்தோ உலக சாம்பியன்ஸ் எனும் பெயருக்காகவாவது, ஒருநாள் தொடரை வென்றாகவேண்டும் என்கிற முனைப்போடு 1-1 எனத் தொடரை சமநிலையை எட்டுவதற்கான நாளாக இதை மாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது.

காயங்கள்!

களத்தில் வீரர்களுக்கு காயமேற்படுவது புதிதில்லையெனினும், போன போட்டியில் மட்டுமே இருபக்கமும் சேர்த்து, நான்கு வீரர்களுக்கு காயமேற்பட்டிருந்தது. இந்தியாவின் பக்கம் ரோஹித் ஷர்மாவுக்கு பேட்டிங் செய்யும்போது முழங்கையிலும், ஷ்ரேயாஸுக்கு ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்தின் பக்கமோ, ஃபீல்டிங்கின்போது, மார்கன், சாம் பில்லிங்ஸ் இருவருக்குமே காயம் ஏற்பட்டது. இதில் ஷ்ரேயாஸ் மற்றும் மார்கன் தொடரை விட்டு வெளியேறுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாம் பில்லிங்ஸைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்பது மட்டும் தற்போதைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றமே மாறாதது!

தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில், இம்முறை அது காயத்தால் நிகழ்கிறது. ஷ்ரேயாஸுக்கு பதிலாக, டி20-ல் அற்புதமாக ஆடிய சூர்யகுமார் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் பெரும்பாலும், இந்தப் போட்டியில் ஆடுவார் என்றே தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை அவர் ஆட முடியாத நிலை வந்தால், ஓப்பனராக கில் இறங்கலாம்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம் | #INDvENG

இங்கிலாந்தின் பிளேயிங் லெவன்!

டெஸ்ட் போட்டியில், ரொட்டேஷன் பாலிசி எனும் பேரில், பெரிய மாற்றங்களைச் செய்து கொண்டே இருந்த இங்கிலாந்து, லிமிடெட் ஓவர் போட்டிகளில், பெரும்பாலும் பெரிய மாற்றமின்றியே விளையாடி வந்தது. ஆனால், இந்தப் போட்டியில், மார்கனும் சாம் பில்லிங்ஸும் காயத்தால் களமிறங்க முடியாத நிலையில், அவர்களுக்குப் பதிலாக முறையே, லிலிங்ஸ்டோனும், மலானும் களமிறக்கப்படுகின்றனர். இதில் லிவிங்ஸ்டோன் தனது அறிமுகப் போட்டியில் ஆடுகிறார். மலானுக்கு இது இரண்டாவது ஒருநாள் போட்டி. டி20-ல் நம்பர் 1 ஆக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், மலான் இதுவரை, ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் ஐயர்லாந்துக்கு எதிராக, 2019-ல் ஆடி, 24 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் ஒருநாள் போட்டியில் ஆட, மறுபடியும் ஒரு வாய்ப்பு, அவருக்கு இப்போதுதான் வந்துள்ளது. ரூட் விட்டுச் சென்ற வெற்றிடத்தை, மலான் இந்தப் போட்டியில் நிரப்புவார் என ஆருடங்கள் கணிக்கப்பட்டாலும், அதன் உண்மைத்தன்மையை இன்றைய போட்டியே வெளியே கொண்டு வரும். கேப்டனாக பட்லர் அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்வார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பவர்ப்ளே ஓவர் பரிதாபங்கள்!

இந்தியா பவர்ப்ளே ஓவர்களில் ரன்களைக் குவிக்கத் தவறுவது, நடந்து முடிந்த டி20 தொடரில் தொடங்கி, தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், கடைசி பத்து ஓவர்களில், 112 ரன்கள் வந்தது பெரிய விஷயமாகக் கொண்டாடப்பட்டாலும், 317 என்பது இங்கிலாந்தால் விரட்டி அடிக்கப்படக்கூடிய ஸ்கோராகவே பார்க்கப்பட்டது. இன்னமும் 40 – 50 ரன்கள் சேர்த்திருக்கப்பட வேண்டும். எந்த இடத்தில் இந்தியா அந்த ரன்களைக் கோட்டை விட்டது எனப் பார்த்தால், அது தொடக்கத்தில்தான். முதல் பத்து ஓவர்களில், விக்கெட்டைப் பறிகொடுக்காது பார்த்துக் கொண்டாலும், வெறும் 39 ரன்களே சேர்க்கப்பட்டது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ரோஹித்தின் காயத்தால் ரன்ரேட் மட்டுப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், இது தட்டிக்கழிக்கச் சொல்லப்படும் ஒரு சாக்கு மட்டுமே. ஏனெனில், டி20-லும் இதுதான் நடந்தது. உலகக் கோப்பைக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தியா, கவனம் செலுத்த வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

லிவிங்ஸ்டோன் | #INDvENG

இங்கிலாந்தின் மிடில்ஆர்டர்!

இங்கிலாந்து ஓப்பனிங்கிற்கு எந்த ஒப்பனையும் தேவைப்படவில்லை. பத்து ஓவர்களில், 89 ரன்களைக் குவித்திருந்தனர் இங்கிலாந்தின் ஓப்பனர்கள். இந்தக் கூட்டணி உடையும் முன்பு, இந்திய வீரர்களின் கண்களில் மரணபீதியே தென்பட்டது. ஆனால், இங்கிலாந்தை இக்கட்டை நோக்கி, இடித்துத் தள்ளியது மிடில் ஆர்டர்தான். சங்கிலித் தொடராக ஒன்றன்பின் ஒன்றாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. முதல் விக்கெட்டை பதினைந்தாவது ஓவரில் பறிகொடுத்த இங்கிலாந்துக்கு, எஞ்சியிருந்த விக்கெட்டுகளை வெறும் 28 ஓவர்களில் இழந்தது. இங்கிலாந்து இன்றைய போட்டியில் இத்தவற்றைக் கருத்தில் கொண்டு களைந்தெறிந்தே களம்காணும்.

ஸ்பின் சோகங்கள்!

டெஸ்ட் தொடரில், இந்திய இங்கிலாந்து ஸ்பின்னர்கள் கொத்துக்கொத்தாக விக்கெட் வேட்டை நிகழ்த்தினார்கள். அதன்பின், டி20 தொடரில், ஸ்பின்னர்களின் பர்ஃபாமென்ஸ், சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. புனே மைதானத்தில், போட்டி போகப்போக சுழல் பந்து எடுபடும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், ஓவர் கணக்குக்காகப் பந்து போடுவது போலவே இருந்தது, இருபக்க ஸ்பின்னர்களின் நிலைமையும். இருபக்கமும் ஆதில், மொயின், குல்தீப் என இம்மூவருமே ஒரு விக்கெட்கூட எடுக்காத நிலையில், பார்ட் டைம் பௌலரான க்ருணால் மட்டுமே ஒரு விக்கெட்டை எடுத்தார். எனவே குல்தீப்புக்குப் பதிலாக சஹாலுக்கும், இங்கிலாந்தின் பக்கம், மார்க் பேட்டின்சனுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம்.

க்ருணால் பாண்டியா | #INDvENG

கோலோச்சுவாரா கோலி?!

2017-ம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவுக்கு வந்திருந்த போது, இந்தியா இங்கிலாந்தை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முறையே, 4-0, 2-1, 2-1 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது. அப்படி ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது, நான்கு வருடங்கள் கழித்து‌. அது மட்டுமில்லாமல், இதற்கடுத்து இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என இங்கிலாந்திடம் இழந்திருந்தது. 2019-ம் வருட உலகக் கோப்பையிலும் அவர்களிடம் உதைப்பட்டிருந்தது. வாங்கியதைத் திரும்பக் கொடுப்பதுதானே கோலியின் ஸ்டைல். நான்கு வருடங்களுக்குப்பின் 2017-ல் நடந்ததைப் போல, மறுபடியும் ஒரு வாஷ் அவுட் தொடரை இங்கிலாந்துக்கு இந்தியா பரிசளிக்குமா என்ற ஆவல் இப்போது எழுந்துள்ளது.

ரூட், மார்கன் உள்ளிட்ட ஆளுமைகள் இல்லாத இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறதென்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், இந்தியாவின் பக்கமும், பும்ரா, ஷமி, ஜடேஜா என ஒரு மினி படையே காணாமல்தான் போய் உள்ளது.

எனவே காட்ஸில்லா வெர்ஸஸ் கிங் காங்காக, அனல் தெறிக்க இருக்கும் இரண்டாவது போட்டி, எதிர்பார்ப்பை இன்னொரு லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. சென்னையில் சாதித்து, அகமதாபாத்தை ஆக்கிரமித்த இந்தியா, புனேயிலும் படைபலம் காட்டுமா?! பொறுத்திருந்து பார்ப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.