`புதுசு’.

இந்தச் சொல்லுக்கே ஒரு தனி கிக் உண்டு.

புதிதாக நமக்கு என்ன கிடைத்தாலும் கொண்டாடுவோம். புது உடை, புது பைக், புது ஆண்டு, புது வேலை… என எந்த விஷயமாக இருந்தாலும் அது புதியது என்றால் அப்படித்தான். அப்படியிருக்க, புதியதாக ஒரு உறவு கிடைத்தால்? ஒரு மனிதன் கிடைத்தால்? ஒரு வாழ்க்கை கிடைத்தால் கொண்டாடாமல் இருக்கலாமா? அதைத்தான் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழையும் மனதும் செய்யும். தவறில்லை. ஆனால், கொன்டாட்டம் தொடர சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது அந்தக் கொண்டாட்டத்தைக் குறைக்கும் விஷயமல்ல; நீண்டகாலத்துக்கு அந்தக் கொண்டாட்டம் தொடர தேவையான விஷயம். புதிதாக ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்ன என்பதுதான் இந்த வாரம் நம் சிலபஸ்.

கடந்த காலத்தைப் பற்றிக் கொஞ்சம்:

இது உங்கள் முதல் ரிலேஷன்ஷிப்பாக இருக்கலாம்; அல்லது ஆறாவது ரிலேஷன்ஷிப்பாக இருக்கலாம். அது விஷயமே இல்லை. முதலில், முந்தைய ரிலேஷன்ஷிப்பை உங்கள் தோல்வியாக நினைக்காதீர்கள். பிரேக் அப் செய்துவிட்டதால் அதைத் தவறெனவும் நினைக்கத் தேவையில்லை. `இந்த வயசுல இத்தனை ரிலேஷன்ஷிப்பா’ என்ற கேள்வியையும் அசால்ட்டாக புறந்தள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கை; உங்கள் காதல்; உங்கள் ரிலேஷன்ஷிப். இதில் நீங்களும் உங்கள் பார்ட்னரும் மட்டும்தான் முக்கியம்.

relationship

அப்படியென்றால் முந்தைய ரிலேஷன்ஷிப்களைப் பற்றி பார்ட்னரிடம் சொல்லிவிட வேண்டுமா என்றால்… ஆமாம். அதுதான் பாதுகாப்பான விஷயம். மறைப்பதால், அது பின்னால் பிரச்னைகளுக்குத்தான் கொண்டு செல்லும். விரிவாக, என்ன நடந்தது, ஏன் பிரிந்தீர்கள் என்பதெல்லாம் சொல்ல வேண்டுமென்றில்லை. ஆனால், முன்னர் நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருந்தால் அதைச் சொல்லிவிடுவதுதான் சரி. (இந்தியச் சூழலில் திருமண உறவில் இதைச் செய்வது சற்று சிக்கல்தான்.) அதுவும் நீங்கள்தான். அவற்றோடு உங்களை ஏற்பதுதான் காதல்.

இன்னொன்று. பழைய ரிலேஷன்ஷிப்போடு இந்தப் புதிய ரிலேஷன்ஷிப்பை ஒப்பிடாதீர்கள். அதை மட்டும் எப்போதும் செய்யாதீர்கள்.

புது பேட்டர்ன்ஸ்:

எந்த ரிலேஷன்ஷிப்பிலும் முதல் சில மாதங்கள் மிக மிக முக்கியம். அதுவரை சற்று தூரத்திலிருந்து இருவர் வாழ்க்கையையும் இருவரும் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் நெருங்கி வரும்போதுதான் அதுவரை கண்ணில் படாத பல விஷயங்கள் தெரியும். அவற்றைச் சரியாக எதிர்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் அந்த ரிலேஷன்ஷிப்புக்கு முக்கியம்.

Pistha Novie

கொஞ்சம்கூட பொருத்தமில்லாத ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். கார்த்திக்-நக்மா நடித்த `பிஸ்தா’ என்றொரு படம். அதில், நக்மாவுக்கு அமைதியான, பிரச்னையே செய்யாத ஒருவன் தேவை. சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் கார்த்திக்கை அவர் பார்க்க, `இவந்தான் நம்ம ஆளு’ எனத் திருமணம் செய்ய முடிவு செய்துவிடுவார். கார்த்திக்கும் சூழ்நிலைகள் காரணமாகச் சரியென்பார். மலைக்குச் சென்று திரும்பியதும் திருமணம். அடுத்த நாள்தான் கார்த்திக் பெரிய பிஸ்தா, கிரிமினல் என்பதே தெரிய வரும். இது சாத்தியமா, அங்கு காதல் இல்லையே என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், பெரும்பாலான ரிலேஷன்ஷிப்ஸ் சந்திக்கும் பிரச்னை இது. காரணம், ஆணோ, பெண்ணோ… காதலில் விழுந்திருக்கும் ஒருவர் பிஸ்தா படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் கார்த்திக் போலதான் இருப்பார். மலைக்குச் செல்லும் நிகழ்வுதான் ரிலேஷன்ஷிப்புக்கு பழகுவது. அதன் பின்னர் அவரின் இயல்பான குணம் வெளியே தெரியும். சில சமயம் அது இன்னும் அழகாக இருக்கும்; சில சமயம் அது பிஸ்தாவாக அமையும். நாம் புரிந்துகொள்ள வேண்டியது, அந்த மலையேறும் வைபவம் நடந்தே தீரும் என்பதுதான்.

இன்னொரு விஷயம். அந்த முதல் சில மாதங்களில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ சில பேட்டர்ன்களை செட் செய்வோம். அதுதான் அடுத்த வரவிருக்கும் நாள்களுக்கான கைடுலைனாக அமைந்துவிடும். அதை உடைப்பதோ மீறுவதோ பின்னர் சிரமம். செய்தாலும் சண்டையில் முடியும் சாத்தியம் அதிகம்.

அலைபாயுதே படத்தில் ஒரு காட்சி. மாதவனும் ஷாலினியும் திருமணம் செய்த பின், ஒரு நாள் ஷாலினி மருத்துவமனையில் இருந்து தாமதமாக வீட்டுக்கு வருவார். சாவி இல்லாமல் காத்திருக்கும் மாதவன் `ஏன் லேட்? சீக்கிரம் வர மாட்டியா?’ என அன்றைய நாளின் எல்லா ஏமாற்றங்களையும் சொற்களாக ஷாலினியிடம் காட்டிவிடுவார். ஷாலினியும் அது தன் மீதான வெறுப்பல்ல என்பதைப் புரிந்துகொள்ளாமல் `முன்ன எனக்காக பீச்ல வெயிட் பண்ணப்ப அதுவே சுகம்னு சொல்வ’ எனக் கேட்பார். உடனே மாதவன், `அது அப்ப. கல்யாணத்துக்கு முன்ன’ எனச் சொல்லிவிடுவார். அப்புறம் என்ன? டிஷ்யும் டிஷ்யும்தான். இதில் இருவருமே தவறு செய்திருக்கிறார்கள். இருவரில் ஒருவராவது நிதானமாக இருந்திருந்தால், இன்னொருவர் தாமாக முன் வந்து மன்னிப்பு கேட்டிருப்பார். ஆனால், அன்றாட வாழ்க்கை நமக்கு அந்த நிதானத்தை எல்லா நாளும் தந்துவிடாது. அந்த நாள் தந்த அத்தனை கசப்புகளையும் நாம் காட்ட முடிவது பார்ட்னரிடம்தான்.

இங்கே திருமணம் என்பதால் ஏமாற்றங்கள் அதிகமாக இருக்கலாம். மற்ற ரிலேஷன்ஷிப்களில் அதனதன் வரையறைக்கு ஏற்ப இருக்கலாம். ஆனால், `மலையேறிய’ பின் மாற்றம் இருப்பது இயல்பு என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Alaipayuthey Movie

Also Read: ஆண்ட்ரியா சொன்ன அந்த `ரிலேஷன்ஷிப் மிஸ்டேக்’… நீங்களும் செய்றீங்களா? #AllAboutLove – 6

உடனே சொல்லுங்க… அடிக்கடி சொல்லுங்க:

ரிலேஷன்ஷிப்பில் நாம் நினைப்பவை மட்டுமே நடக்குமென சொல்லவே முடியாது. அப்படி கசப்பான நிகழ்வுகள் நடந்தால் அதைப் பற்றிய உங்கள் மனநிலையை உடனே பார்ட்னரிடம் சொல்லிவிடுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் சினிமா, ஞாயிற்றுக்கிழமை பீச் என சிலர் வழக்கம் வைத்திருப்பது போல, ரிலேஷன்ஷிப்பின் தொடக்கத்தில் இது போன்ற விஷயங்களைப் பேசவும் நேரம் ஒதுக்கலாம். அதை எப்போதும் தொடரவும் செய்யலாம். உதாரணமாக,

`என் கூட இருக்கிறப்ப மொபைல் தேவையில்லாம எடுக்காத. நானும் எடுக்க மாட்டேன்’,

`கால் வெயிட்டிங்க்ல போனா யார்கூட பேசிட்டிருந்தன்னு கேட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு’

இப்படி உங்களை உறுத்தும் விஷயங்களைச் சரியான காரணத்துடன் டிஸ்கஸ் செய்யலாம். அதில் அவருக்கு ஏதும் பிரச்னை இருந்தால், உதாரணமாக `என் வேலைல மணிக்கணக்கா வாட்ஸ்அப் பாக்காம இருக்க முடியாதே’ என அவர் சொன்னாலும் இருவரும் விவாதித்து ஒரு முடிவை எட்டலாம். ஆனால், அதைப் பேசாமலே விட்டால் வேலை விஷயமாக வாட்ஸ்அப் பார்ப்பதையே இன்னொரு பார்ட்னர் சந்தேகப்படும் அளவுக்குச் செல்லலாம்.

இன்னும் நிறைய இருக்கின்றன. உங்கள் பார்ட்னரை மட்டுமே அதிகம் சந்தித்த நீங்கள் இனி அவர் குடும்பம், நண்பர்கள் என நிறைய பேரைச் சந்திக்க நேரிடலாம், இனிமையான தருணங்களை மட்டுமே கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை சின்ன சின்ன கசப்பான மொமென்ட்களைக் கொடுக்கத் தொடங்கலாம், இருவரும் மற்ற எல்லாவற்றையும்விட உங்கள் காதலுக்கென அதீதமாகக் கொடுத்த கவனமும் நேரமும் ரிலேஷன்ஷிப்புக்குள் சென்ற பின் கொஞ்சம் மிஸ் ஆகலாம். நீங்கள் கற்பனை கூட செய்திடாத ஒரு முகத்தை உங்கள் பார்ட்னரிடம் பார்க்கலாம் என நிறைய இருக்கின்றன. புதிய ரிலேஷன்ஷிப் என்றானதும் இதற்கெல்லாம் தயாராக இருப்பது உங்கள் ரிலேஷன்ஷிப்பை நீண்டகாலம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

Love

Also Read: `காதலா, கரியரா?’ – இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் இதுவாக மட்டும் இருக்க வேண்டாம்! #AllAboutLove -7

இறுதியாக ஒன்று. ஓர் ஆணின் உண்மையான இயல்பு என்பது அவனிடம் அதிகாரம் இருக்கும்போது வெளிப்படுவதுதான்; போலவே ஒரு பெண்ணின் உண்மையான இயல்பு என்பது எந்தப் பிரச்னையும் இல்லாதபோது வெளிப்படுவதுதான். எல்லா விதியும் போல இதற்கும் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், இது பொதுவான அளவுகோல். உங்கள் பார்ட்னரைப் பற்றி இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தச் சூழலில் கூடுதல் கவனத்துடன் பாருங்கள். ஆரம்பகட்டத்தில் அதிகமாகவே பாருங்கள். அது பல ஏமாற்றங்களைத் தவிர்க்கும்.

– காதலிப்போம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.