செல்வியோட மெயில் ரொம்பவே எமோஷனலா இருந்துச்சு. “ஒருவேளை நீங்க இந்த மெயிலைப் படிக்கும்போது நான் என்னவாயிருப்பேன்னுகூட என்னால யோசிக்க முடியலே… அப்படியொரு துயரத்தை நான் அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்னு அவங்க எழுதியிருந்ததைப் படிச்சப்போ மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.”

செல்விக்குத் திருமணமாகி அஞ்சு வருஷமாச்சு. ரெண்டு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு.

“என் கணவர் ரொம்ப நல்லவர் சார். பெருசா எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. என்னைக்காவது ப்ரண்ட்ஸ்கூட பார்ட்டிக்குப் போனா மது அருந்துவாரு. திருமணமாகி மூணு வருஷம் சொர்க்கம் மாதிரி இருந்துச்சு.

திருமணம் முடிஞ்சு சில மாசத்திலேயே மாமனார்-மாமியார் எங்களுக்கு வீடு பிடிச்சுக்கொடுத்து தனிக்குடித்தனம் அனுப்பிட்டாங்க. அவ்வளவு அன்பாவும் அக்கறையாவும் இருப்பார். வாராவாரம் வெளியே கூட்டிக்கிட்டுப் போறது, எதிர்பாராத பரிசுகள் வாங்கித்தர்றதுன்னு வாழ்க்கை அவ்வளவு நல்லாருந்துச்சு…

பெண்

எங்கிருந்துதான் அந்த மனுஷன் மனசுக்குள்ள குடியேறுச்சோ தெரியலே சந்தேகம். கொஞ்சம் கொஞ்சமா குத்தலா பேச ஆரம்பிச்சார். நல்ல சேலை கட்டினா, பூ வச்சுக்கிட்டா, அலங்காரம் செஞ்சுக்கிட்டா, ‘ஏன் திடீர்னு இன்னைக்கு இவ்வளவு அலங்காரம்… யாராவது ஸ்பெஷலா வர்றாங்களா’ன்னு கேப்பார். யாரையாவது நிமிர்ந்து பாத்துட்டா ‘ஏன் அவனையே பாத்துக்கிட்டிருக்கே’ன்னு கேப்பார். தொடக்கத்துல இயல்பா ஏதோ எமோஷன்ல நம்மேல இருக்கிற அன்புல பேசுறார்னு நினைச்சேன். நாளாக நாளாக நேரடியாவே பேச ஆரம்பிச்சுட்டார். அவர் அலுவலகம் விட்டு வர்றபோது, வாசல்ல நின்னுக்கிட்டிருந்தா ‘யாருக்காகடி நிக்குறே’ன்னு கேட்பார். ‘காபி டம்ளர் கழுவாம இருந்தா ‘எவன்டி வந்துட்டுப் போனான்’னு கேப்பார். அலுவலகம் விட்டு வந்தவுடனே படுக்கையைச் செக் பண்றது, வீட்டுக்குள்ள ஏதாவது அடையாளம் இருக்கான்னு தேட ஆரம்பிச்சுடுவார்.

ஒரு கட்டத்துல எதிர்வீட்டு அண்ணன், பால்காரர், பூக்காரர்னு யார் வந்தாலும் அவங்களோட இணைச்சுப் பேச ஆரம்பிச்சுட்டார். பேச்சு ஒரு கட்டத்துல அடி உதைன்னு மாறிடுச்சு. உடம்பு முழுவதும் தழும்புகள் சார். அவர் பேசுறதையெல்லாம் கேட்டுக்கணும். பதில் பேசினா கண்மூடித்தனமா அடிப்பார். சிகரெட்டால சூடெல்லாம்கூட வச்சிருக்கார். வெளியில சொன்னா அசிங்கமாயிருமேன்னு எல்லாத்தையும் எனக்குள்ளே போட்டு அடக்கி வச்சிருக்கேன்.

உண்மையச் சொல்லணும்னா நான் ரெண்டு முறையும் அவர் மூணு முறையும் தற்கொலை முயற்சி செஞ்சிருக்கோம். குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சா கவலையா இருக்கு சார். நானும் என்னையும் என் அன்பையும் நிரூபிக்க நிறைய முயற்சி செஞ்சுட்டேன். ஒரு பயனும் இல்லை.” செல்வியோட மெயில் கண்ணீரால நிறைஞ்சிருக்கு.

அடுத்து அவங்க எழுதியிருக்கிற விஷயம் உண்மையிலேயே உலுக்குது.

பெண்

அந்த மனுஷன் மனசுக்குள்ள எப்படித்தான் அந்த விஷவிதை விழுந்துச்சோ… தாம்பத்யத்தைக்கூடக் கொச்சைப்படுத்த ஆரம்பிச்சார். வெளியில சொல்லக்கூசுற கொடுமையெல்லாம் செஞ்சிருக்கார். என்னை எப்படி நிரூபிக்கிறதுன்னு தெரியாம தளதளன்னு இருந்த தலைமுடியைக்கூட மொட்டை அடிச்சுக்கிட்டேன். ஆனா அந்த மனுஷன் திருந்தல…” செல்வியோட நிலை உண்மையிலேயே பரிதாபமாத்தான் இருக்கு.

செல்வி இப்போ குழந்தையோட அம்மா வீட்டுக்கு வந்துட்டதா மெயில்ல சொல்லியிருக்காங்க. உண்மையில சந்தேகம் மாதிரி கொடூர நோய் வேறெதுவும் இல்லை. மனசுக்குள்ள புகுந்துட்டா ஒட்டுமொத்த மனுஷத்தன்மையையும் அது அழிச்சிடும். சந்தேகத்துக்கு அடிப்படை தவறான புரிதல். நல்லாக் கவனிச்சிங்கன்னா, திருமணங்கிற பந்தமே நம்பிக்கைங்கிற முடிச்சுலதான் இருக்கு. அந்த நம்பிக்கை தளர்ந்தா படிப்படியா உறவு சீர்குலைஞ்சிடும்.

மனசுக்குள்ள சின்ன விதையா விழுகிற சந்தேகம், விருட்சமா மாறி கண்ணை மறைச்சிடும். சாதாரணமா ஒருத்தரைப் பார்த்தாலோ, இயல்பா சிரிச்சாலோ அதுபத்தின கற்பனை பெரிசாகி, உச்சபட்சமான வன்முறையில இறங்கிடுவாங்க. சிலபேரு தன்னை சிதைச்சுக்குவாங்க… சிலபேர் தன் இணையைத் துன்புறுத்துவாங்க. இது ஏதேனும் ஒரு கட்டத்துல சரியாகலேன்னா, தன்னுணர்வு இல்லாத சைக்கோ நிலைக்குக்கூடப் போகலாம்.

சந்தேகத்துக்கு அடிப்படை, இணைமீதான அதிகபட்ச காதல். தனக்கே மட்டுமான ஒருத்தரை மத்தவங்க சொந்தம் கொண்டாடிக்கூடாதுங்கிற பரிதவிப்பு. இன்னொரு காரணம், தாழ்வு மனப்பான்மை. தன்னைவிட மனைவி அழகா இருக்காளோங்கிற எண்ணம். தன்னைக் கீழ்த்தரமா நினைச்சிடுவாளோங்கிற பயம். இதுக்கு மேல இன்னொரு காரணமும் இருக்கு. தாம்பத்யத்துல மனைவியைத் திருப்திப்படுத்த முடியாதவங்களும் சந்தேகவயப்படுவாங்க.

பெண்

சின்னதா துளி விதையா விழுகிற சந்தேகம் நாளாக நாளாக எந்த மருந்தாலயுமே குணப்படுத்த முடியாத நோயாயிடும். ஒரு மனநிலையில, மனைவியை ரொம்பத் துன்புறுத்துறோமேன்னு ஒரு எண்ணம் வரும். அப்போ, எதிர்பாராத வகையில அன்பைக் கொட்டுவாங்க. ‘இனிமே இப்படியெல்லாம் செய்யவே மாட்டேன்… மன்னிச்சுக்கோ’ம்பாங்க. வேறொரு மனநிலையில, தன்னை ஏமாத்துறாளோன்னு ஒரு எண்ணம் வரும். அப்போ அதிகபட்ச வன்முறையில இறங்குவாங்க.

கிட்டத்தட்ட சந்தேகப்படுறவங்களோட மனநிலை எரிமலை மாதிரியிருக்கும். அழுத்த அழுத்த திடீர்னு ஒருநாள் வெடிப்பாங்க. தன் இணையோட நெருங்கிய உறவுகள், ஏன் ரத்தபந்தங்களைக்கூட இணைச்சு சந்தேகப்படுவாங்க.

உண்மையில் செல்வியோட நிலை கவலைக்குரியதா இருக்கு. சந்தேகத்தோட உச்சபட்ச வேதனைகளை அவங்க அனுபவிச்சிருக்காங்க. தன் கணவன் மேல இருக்கிற அன்பையும் காதலையும் வெளிப்படுத்த என்னென்னவோ வழிகளை எல்லாம் அவங்க முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா, அந்த மனுஷன் மனசுல இருந்த அழுக்கு நீங்கவேயில்லை.

செல்வியோட பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்துகிட்ட செல்வியோட பிரச்னையைச் சொன்னேன்.

“நீங்க நினைக்கிற மாதிரி இல்லை… இல்லைன்னு நிரூபிச்சுக்கிட்டே இருந்தாலும் அவர் அதை நம்புற நிலையில் இருக்கப்போவதில்லை. அவரை ஒரு மனநல மருத்துவர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போகணும். அவரை அன்பாப் பேசிப் புரியவச்சு அதற்கான முயற்சியில் இறங்கணும். மனநல மருத்துவரால நிச்சயம் அவரை மீட்கமுடியும். குணப்படுத்தமுடியும்” என்கிறார் அவர்.

சந்தேகப்படுறவங்களை மனநோயாளிகள்னு சொல்ல முடியாது. அது ஒருவித உச்ச உணர்ச்சி. அன்பு, காதல்னு நம் மனசுக்குள்ள இருக்கிற உணர்வு ஓரிரு இழைகளில் தடம்மாறி உருவாகுற ஆவேச நிலை. இதைச் சரி செய்ய முடியும். செல்வி அதற்காக நிறைய முயற்சி செஞ்சிருக்கார். நீ நினைக்கிற மாதிரி எதுவுமேயில்லைன்னு நிரூபிக்க தன் தலைமுடியைக்கூட எடுத்துட்டு வந்து நின்னிருக்கார். அவங்க கணவரால அந்த மாயையில இருந்து வெளியே வரமுடியலே.

இந்த விஷயத்தில செல்வி இன்னும் தைரியத்தோடவும் தன்னம்பிக்கையோடவும் நடந்துக்கணும். தன் கணவனை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட செல்வி, இந்த மனுஷனை எப்படியும் திருத்திடலாம்ங்கிற நம்பிக்கையில தன்னளவுல நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அதுக்கெல்லாம் பயனில்லாமப் போயிருக்கலாம். இனிமே நீ வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு அம்மா வீட்டுக்குப் போற முடிவை நிச்சயம் அவங்க சாதாரணமா எடுத்திருக்க மாட்டாங்க.

பெண்

இன்னும் ஒரு முயற்சி செய்து பாருங்க செல்வி. கொஞ்சம் சிரமமாக்கூட இருக்கலாம். ஸ்வாதிக் சொன்னமாதிரி அவரை ஒரு மனநல மருத்துவர்கிட்ட அழைச்சிட்டுப் போங்க. நிச்சயம் அவர் மனம் திரும்புவார். அன்புக்கு அன்பா, உயிருக்கு உயிரா தன்னை நேசிக்கிற மனைவியை இப்படித் துன்புறுத்திட்டோமேன்னு அவர் வருந்துவார்.

இல்லை… இந்தத் துயரத்தையெல்லாம் சகிச்சுக்கிட்டு இனிமே அந்த மனுஷன்கூட வாழமுடியாது… அந்த மனுஷன் திருந்தப்போறதில்லைன்னு ஒரு முடிவெடுத்தா, நீங்க சாதிக்க இங்கே நிறைய வெளியிருக்கு செல்வி. உங்க குழந்தையோட எதிர்காலத்தை இலக்கா வச்சுக்கிட்டு உங்க பாதையில போகலாம். அது உங்க உரிமை.

புரிதலோட இருக்கணும் பாஸ்… நம்பிக்கையை விட்டுக்கொடுத்திட்டா எல்லா இழைகளும் அறுந்திடும். உறவுகள் அர்த்தமில்லாமப்போயிடும். வாழ்க்கையை இழந்துட்டு வேறெதைத் தோடப்போறோம்!

வாசகர்களே… உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.