1967-ல் நடந்த பொதுத்தேர்தல் தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றி எழுதிய ஒன்று. இந்திய அரசியல் வரலாற்றில் கேரளாவில் 1957-ல் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியாக கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்திருந்தது. அதன்பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியாக தமிழகத்தில்தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. கம்யூனிஸ்ட் கூட தேசியக் கட்சிதான். ஆனால், திமுக ஒரு மாநிலக் கட்சி. இதன்மூலம் இந்த வெற்றியின் சரித்திர முக்கியத்துவத்தை நாம் இன்னும் அதிகமாக உணர்ந்துகொள்ளலாம். 1963-ல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றதும் கூட காங்கிரஸின் இந்த பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்றும்கூட ஒரு பார்வை உண்டு.

ஆனால், எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு. அதுதான் திரைத் துறை மூலம் மக்கள் மனதிற்கு வெகு நெருக்கமாக திமுக சென்று அமர்ந்தது என்கிற உண்மை. முதல்வராக பொறுப்பேற்றார் அண்ணா. அவர் திராவிடக் கொள்கைகளை மேடைகளில் எப்படியெல்லாம் முழங்கினாரோ, அதேயளவு திரையிலும் முழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மு.கருணாநிதி ‘பராசக்தி’யாக தொடங்கி, கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் தமிழின் சிறப்பையும், தமிழன் வெகுண்டெழுந்து ஆகவேண்டிய கட்டாயத்தையும், மூடநம்பிக்கைகள் வாழ்வை சிதைக்கும் விதத்தையும், இந்தியை ஒதுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் வண்ணம் தன் கதை – வசனங்களை அமைத்து வெற்றிபெற்றார். தன் வசீகரமான சிரிப்பினாலும், அசாத்தியமான உடல்மொழியாலும், மக்களை காக்க வந்த நாயகன் என்கிற பிம்பத்தாலும், இறவாப்புகழ் பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன் பரங்கிமலை தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

image

இந்த இடத்தில நாம் எஸ்.எஸ்.ராஜேந்திரனைப் பற்றி சற்று அறிந்து கொள்ளுதல் நலம். எப்படி சிவாஜி கணேசன் ‘பராசக்தி’யில் அறிமுகமனாரோ, அப்படியே அந்தப் படத்தில் இவரும் அறிமுகமானார். எம்ஜிஆரை விடவும் திமுகவில் மூத்தவர். 1962-ல் நடந்த பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்தான். தான் சம்பாதிக்கும் அனைத்தையும் கட்சிக்காக செலவிட்டவர். தனது படங்களில் எல்லாம் திராவிட கருத்துகளை பரப்புவதையே கொள்கையாக வைத்திருந்தவர். ஆனாலும் எம்ஜிஆர் என்கிற பெரும் பிம்பத்தின் நிழலில் இவர் கரைந்து போனது காலம் செய்த சோகம். அதேபோன்று கட்சியின் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த கலைஞருடன் எஸ்.எஸ்.ஆருக்கு சுமுகமான உறவு வாய்க்கவில்லை. சினிமாவிலும் துணைக் கதாபாத்திரங்களே அதிகளவு கிடைத்ததால், என்னதான் சிறந்த குரல் வளமும், நடிப்புத்திறமையும் இருந்தும் கூட மற்ற திராவிட கழக நடிகர்களைப்போல் சோபிக்க இயலாமல் போய்விட்டார்.

எத்தனையோ வருட திராவிடக் கனவு 1967-ல் நிறைவேறினாலும்கூட அதன் முழு பலனை அண்ணாவால் அனுபவிக்க இயலவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் உணவுப் பஞ்சத்தால் தவிப்பதை கண்டு துயருற்ற அந்த எதையும் தாங்கும் இதயம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை கொண்டுவந்தது. இனி வந்தது விடிவுகாலம் என மக்கள் அண்ணாவை நம்பியிருக்க, 1969-ல் அறிஞரின் ஆவியை பூத உடலிலிருந்து பிரித்தெடுத்தான் காலன். எழுதி எழுதி தீர்த்த பேனா ஒன்று ஓய்வெடுத்தது. மக்கள் நலனே உயிர்மூச்சு என்று வாழ்ந்த அவரின் நாசி தன் இறுதிமூச்சை வெளியேற்றியது. கொள்கை தவறா வாக்கு கொண்டு மேடையெங்கும் முழங்கிய அவரின் குரல் அடங்கியது. மொத்த தமிழகமும் இருளில் மூழ்கியதாய் தோன்றியது.

image

அண்ணாவின் மரணத்திற்கு பிறகு நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக இருந்தார். பின்னர் தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். கட்சியின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். அறிஞர் அண்ணாவின் கனவை சுமந்துகொண்டு இந்த குழு தொடர்ந்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றது. இடையில் 1968-ல் எம்.ஆர்.ராதா ஒரு சிறு வாக்குவாதத்தின் முடிவில் எம்ஜிஆரை நோக்கி இரண்டுமுறை கைத்துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த எம்ஜிஆர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆறு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சையில் இருந்தபொழுதே தேர்தலிலும் போட்டியிட்டு, அந்த தேர்தலிலேயே அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்கிற பெருமையும் பெற்றார்.

எல்லாம் சுமுகமான முறையில் நடந்துகொண்டிருந்த பொழுதுதான் எம்ஜிஆரின் திரைக் கவர்ச்சி தி.மு.கழகத்திற்குள் பெரும் பூகம்பங்களை விதைக்க ஆரம்பித்தது. எம்ஜிஆரின் அபரிதமான மக்கள் செல்வாக்கும், செல்லும் இடமெல்லாம் அவருக்கு கிடைக்கும் முதல் மரியாதையும் கட்சியில் பலருக்கும் புகைச்சலை கொடுக்கத் தொடங்கியது. திரைக் கவர்ச்சி மூலம் கிடைத்த பலன் இது என்பதை உணர்ந்த கருணாநிதி, தனது மூத்த மகன் மு.க.முத்துவை திரைப்படங்களில் நடிக்கவைத்தார். கிட்டத்தட்ட எம்ஜிஆரின் உடல்மொழியை நகலெடுத்ததைப்போல் மு.க.முத்து திரைப்படங்களில் தோன்றினார். இது ஒருபுறம் இருக்க, கட்சியில் ஊழல் பெருத்துவிட்டது என்றும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது என்றும் எம்ஜிஆர் நேரடியாகவே குற்றம்சாட்டி சில மேடைகளில் பேசத் தொடங்க, கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரும் பிளவு கட்சிக்குள் நிகழத்தொடங்கியது.

image

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்ஜிஆர், அண்ணாவின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டும், திராவிட கட்சியின் வளர்ச்சி இனி எவராலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தும் திமுகவில் ஐக்கியமானார். கருணாநிதியின் வசனத்தில் எம்ஜிஆர் திரையில் தோன்றி நடத்திய மாயாஜாலங்களை நாம் ஏற்கெனவே கண்டோம். எம்ஜிஆரின் எல்லா திரைப்படங்களிலும் அண்ணாவை புகழ்வது போன்ற வரிகள் கொண்ட பாடல்கள் ஒன்றாவது இடம்பெற்றுவிடும். எம்ஜிஆரின் உடை கூட கருப்பு, சிவப்பு நிற கொடியை நினைவூட்டும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படியாக கட்சியையும், ஆட்சியையும் வளர்க்க பாடுபட்ட எம்ஜிஆர், எதிர்கேள்வி கேட்டதன் விளைவாக 1972-ல் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இன்னொரு புதிய சரித்திரம் அங்கே எழுதப்பட்டது.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை உடனே அறிவித்தார். 1972 முதல் 1977 வரையிலான இடைப்பட்ட காலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் எம்ஜிஆர் முழுமூச்சாக செயல்பட்டார். இந்த காலகட்டங்களில் அவர் நடித்த எல்லா திரைப்படங்களிலுமே ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து பலமான கேள்விகள் பலவும் அவரால் காட்சிகள் மற்றும் பாடல்கள் மூலம் தொடர்நது கேட்கப்பட்டது. இவரின் கேள்விகள் ஒவ்வொன்றும் மக்கள் சார்பாக கேட்கப்படும் கேள்வியாகவே கருதப்பட்டது. மக்களின் குரல் பெரிய திரையில் சலனப்படமாக ஒலிக்கிறது என்கிற எண்ணமே எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் காரணமாக அமைந்தது.

1973-ல் எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியாக தயாராக இருந்தது. ஏற்கெனவே இருந்த அரசியல் அதிருப்தி காரணமாக இந்தப்படம் வெளியாவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தினார்கள். மிகுந்த பொருட்செலவில், உலகெங்கும் பல இடங்களில் சென்று எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை அடையும் என்று எம்ஜிஆர் அறிந்திருந்தார். சென்னை நகரில் எந்தப் பிரச்னையும் இன்றி படம் வெளியானாலும் கூட, மதுரை மீனாக்‌ஷி திரையரங்கில் வெளியிட பெரும் சிக்கல் நிலவியது. தி.மு.கழகத்தை சேர்ந்த மதுரை உறுப்பினர்கள் படத்தை வெளியிட விடாமல் தடுக்க மிகவும் பிரயத்தனம் செய்தனர். ஆனால், எம்ஜிஆர் ரசிகர்களின் கட்டுக்கோப்பான பாதுகாப்பில் படப்பெட்டி திரையரங்கை வெற்றிகரமாக சென்றடைந்தது. அதுமட்டுமின்றி படம் தமிழகம் முழுக்க வசூலில் பெரும் புரட்சியே செய்தது. வெள்ளிவிழா கடந்து ஓடி மக்களை மகிழ்வித்தது.

உண்மையில் எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் எம்ஜிஆரின் அரசியல் பெருவெற்றிக்கு மிகப்பெரும் காரணங்களாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. அதைப்பற்றிய விரிவான பார்வை அடுத்த அத்தியாயத்தில்.

திரை நீளும்…

– பால கணேசன்

முந்தைய அத்தியாயம்: திரையும் தேர்தலும் 10: கதாபாத்திரம் உதயசூரியன்… கதாநாயகன் எம்.ஜி.ஆர்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.