நடிகர், இயக்குநர், வசனகர்த்தா, நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல பரிணாமங்களில் ஜொலித்த விசு கடந்தாண்டு இதே நாளில்தான் மறைந்தார்.

ஒரு ரசிகராக அவருக்கு அறிமுகமாகி சுமார் 35 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாகப் பழகி வந்தவர் மதுரயைச் சேர்ந்த ரவி. அவரிடம் பேசினேன்.

‘’விசு இயக்கிய முதல் படமான ‘கண்மணி பூங்கா’ சமயத்துலயே அவருக்கும் எனக்குமான தொடர்பு ஆரம்பமாகிடுச்சு. ’சம்சாரம் அது மின்சாரம்’ தேசிய விருது வாங்குனது தெரியும். ஆனா அவர் இயக்கிய முதல் படமான ‘கண்மனிப் பூங்கா’வின் ரிசல்ட்?

அந்தப் படம் ஓடலை. பத்திரிக்கைகள்ல ’அந்தத் தோல்வியால விரக்தியா இருக்கார்’ங்கிற மாதிரி செய்தி பார்த்துட்டு, அவருக்கு ஆறுதல் சொல்லி ஒரு கடிதம் எழுதினேன். ஒரு வாரம் கழிச்சு பதில் கடிதம் எழுதினார். அங்க தொடங்கியது எங்க நட்பு.

தொடர்ந்து அவருடைய படங்கள் பார்த்துட்டு என்னுடைய விமர்சனத்தை கடிதமா எழுதுவேன். அவரும் பதில் எழுதுவார். அப்படியே போயிட்டிருந்தப்ப திடீர்னு ஒரு நாள் ‘காரைக்குடில ஷூட்டிங்குக்கு வர்றேன். அங்க வாருமய்யா, சந்திக்கலாம்’னார். ஆனா, அப்ப நான் வேலை பார்த்திட்டிருந்த அலுவலகத்துல லீவு கிடைக்காம என்னால போக முடியலை. ’வரமுடியாமப் போச்சு… மன்னிச்சுடுங்க’னு கடிதம் எழுதினேன்.

‘ஒரு சினிமாக்காரன் கூப்பிட்டு வர முடியலைனு சொல்ற முதல் ஆளு நீர்தான்யா’னு கமென்ட் அடிச்சார்.

அடுத்த ரெண்டு வருஷத்துல அதாவது பேச ஆரம்பிச்சு ஏழு வருஷம் கழிச்சு, சென்னையில அவர் வீட்டுக்கே போனேன். வீட்ல எல்லோர்கிட்டயும் அறிமுகப்படுத்தி நல்லா உபசரிச்சு அனுப்பினார்,

விசு வீட்டில் ரவி

அதேபோல என் கல்யாணம் மதுரையில நடந்தபோது கூப்பிட்டேன். ஆனா அந்த டைம்ல ஏதோ முக்கியமான வேலையால வரமுடியலைன்னு உதவியாளர் ஒருத்தர்கிட்ட கிஃப்ட் கொடுத்து அனுப்பியிருந்தார்.

அவருக்கும் எனக்குமிடையிலான இந்த நட்புப் புயணத்துல மறக்க முடியாத இன்னொரு சம்பவம் 1992-ம் வருஷம் நடந்தது. ‘நீங்க நல்லா இருக்கணும்’னு ஒரு படம் எடுத்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்தப் படத்துல சிறப்புத் தோற்றத்துல வருவாங்க.

அந்தப் பட ரிலீஸின் போது என்னைக் குடும்பத்துடன் சென்னைக்குக் கூப்பிட்டவர், ‘முன்ன மாதிரி வராம இருந்துட்டா, முதலைமைச்சர் கூட உட்கார்ந்து படம் பார்க்கிற வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது’னு சொல்லியிருந்தார்.

அடிச்சுப் புடிச்சு சென்னைக்கு வந்தோம். அங்க படத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போட்டுக் காண்பிச்சாங்க. முதல்வர் அமர்ந்திருந்த சீட்டுக்கு ரெண்டு வரிசை பின்னாடி நானும் என் மனைவியும் அமர்ந்து படத்தைப் பார்த்தோம்.

அப்பல்லாம், பிரபலமான ஒரு நடிகர், இயக்குநர் ஒரு ரசிகனை இந்தளவு தன் மனசுல நிறுத்தி, அவனை மகிழ்விக்க நினைக்கிறாரேனு வியந்தேன்.

ரவி

அவருடைய கடைசி நாட்கள்ல, ஃபோன் வந்துட்டதால வாட்ஸ் அப்ல பேசிட்டிருந்தோம். அப்ப முக்கியமான விஷயங்களையெல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணுவார். ‘சம்சாரம் அது மின்சாரம் பார்ட் – 2 ஸ்க்ரிட் ரெடியா இருக்கு. பொண்ணு அமெரிக்காவுல இருக்கறதால ‘இங்கேயே கூட எடுக்கலாம்ப்பா’னு சொல்றா. ஸ்க்ரிப்டை அவகிட்ட ஒப்படைச்சிட்டேன். ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சுகன்யா… இவங்க பண்ணினா சரியா இருக்கும்னு தோணுது, பார்க்கலாம்’னு சொல்லியிருந்தார். ஆனா, காலம் அவருடைய ஆசையை நிறைவேத்தாமக் கூட்டிட்டுப் போயிடுச்சு’’ என்று கலங்கினார் ரவி.

”அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் ஒருநாள் ஃபோன் பண்ணி, ‘கண் சரியா தெரிய மாட்டேங்குது, அதனால இனி வாட்ஸ் அப்ல பதில் வரலைன்னா வருத்தப்படாதீரும்’னு சொன்னார். அப்பவே எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. கடைசியா அவர் தவறிய தகவலை செய்தியில பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன். கால் நூற்றாண்டுக்கும் மேல பழகிட்டிருந்த என்னுடைய விஐபி நண்பரின் முகத்தைக் கடைசியா ஒரு தடவ பார்த்திடலாம்னா அப்ப பார்த்து கொரானா வர என்னுடைய அந்த ஆசையும் நிறைவேறலை’’ என்று வருந்தினார் ரவி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.