பிறப்பும் பின்னணியும்:

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை கிராமத்தில் 1951-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பிறந்தார் பேச்சிமுத்து என்கிற பன்னீர்செல்வம். திருவில்லிப்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இவரின் பெற்றோர் ஓட்டக்காரத்தேவர் – பழனியம்மாள், அங்குள்ள தங்களின் குலதெய்வமான பேச்சியம்மன் நினைவாக இவருக்கு பேச்சிமுத்து எனப் பெயரிட்டு அழைத்தனர். பின்னாளில் அதை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொண்டார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கவிதா பானு என்ற மகளும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

கல்வியும் தொழிலும்:

சொந்த ஊரிலுள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆரம்பகாலத்தில் இவரின் தந்தையுடன் சேர்ந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார் பன்னீர்செல்வம். பின் சொந்தமாக பால் பண்ணை ஒன்றையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து டீக்கடை ஒன்றையும் நடத்திவந்தார்.

அரசியல் வருகையின் ஆரம்பகாலம்:

(எம்.ஜி.ஆர் ரசிகன் டூ அ.தி.மு.க தொண்டன்:)

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்த பன்னீர்செல்வம், அவர் கட்சி ஆரம்பித்தபின் அ.தி.மு.கவின் உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டார். 1982-ம் ஆண்டு கட்சியில் இவருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஓ.பி.எஸ். – ஜெயலலிதா

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு அ.தி.மு.க ஜெயலலிதா, ஜானகி என இரு அணியாகப் பிரிய ஜானகி அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் பன்னீர்செல்வம். இதனால் ஜானகி அணியில் பெரியகுளம் நகரச் செயலாளர் ஆக்கப்பட்டார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்த பின்னர், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அதனைத்தொடந்து, 1993-ம் ஆண்டு பன்னீர்செல்வத்துக்கு பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2000-ம் ஆண்டில் தேனி மாவட்டச் செயலாளராகவும் உயர்ந்தார் பன்னீர்செல்வம்.

வெற்றி மீது வெற்றி வந்து:

சட்டமன்ற உறுப்பினராக…

2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். முதல்முறை எம்.எல்.ஏ ஆனபோதே அவருக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும், பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் முதல்வராகும் வாய்ப்பும் கிடைத்தது.

சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக…

2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பன்னீர்செல்வம். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடையவே, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியும், அவை முன்னவர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பன்னீர்செல்வதுக்கு, இம்முறையும் நிதி அமைச்சர் பதவி மற்றும் அவை முன்னவர் பொறுப்பும் பின்னர் கழக பொருளாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.

முதல்வராக…

2001-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்டது. அந்தச்சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக முன்மொழிய, சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2001 செப்.21 முதல் 2002 மார்ச் 1 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்.

மீண்டும், 2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட, தனது முதல்வர் பதவியை மீண்டும் இழக்க நேர்ந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2014 செப்.29 முதல் 2015 மே 22 வரை முதல்வராகப் பணியாற்றினார்.

2016-ம் ஆண்டு டிச 5-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த காரணத்தால், 2016 டிச 6-ம் தேதி மூன்றாவது முறை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2017 பிப்.15ம் தேதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.

தர்மயுத்தம் எனும் பெயரில்…

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிகழவே, தர்மயுத்தம் எனும் பெயரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.கவின் புதிய தலைமைகளாக இருந்த சசிகலா-தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்.

மேலும் தன்னிடம் வலுக்கட்டாயமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரியதாகவும் குற்றம் சுமத்தினார். இதனால் சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. ஒரு அமைச்சர், 7 எம்.எல்.ஏக்கள், 10 எம்.பிக்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

துணைமுதல்வராக…

இதற்கிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் பல்வேறு அரசியல் போராட்டங்களுக்கு நடுவே 2017 ஆகஸ்டு 21-ல் பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் ஒன்றிணைந்தன. அதன் விளைவாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், தமிழகத் துணைமுதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சாதனைகளும் விமர்சனங்களும்:

பன்னீர்செல்வம் இதுவரையில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்தேர்தலிலேயே அமைச்சர், முதல்வர் என பல்வேறு உயர் பதவிகளையும் வகித்து வந்திருக்கிறார். மேலும் தடையிலிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் இயற்றியது, கொரோனா தொற்றுகாலத்தில் தனது சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது இவரின் சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மிகத் தீவிரமாக எதிர்த்த மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச்சட்டம், உதய் மின் திட்டம் போன்றவற்றை பன்னீர்செல்வம் அனுமதித்தது. தொடர்ந்து நீட் தேர்வு, முத்தலாக் மசோதா, குடியுரிமை மசோதா, சுற்றிச்சூழல் மசோதா, புதிய கல்விக்கொள்கை, புதிய வேளாண்சட்ட திருத்தம் போன்று மாநில உரிமைகளை பறிக்கும் சட்டங்களுக்கு ஆதவான நிலைப்பாட்டில் இருப்பது, குடும்ப அரசியல், சொத்துகுவிப்பு என ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன.

Also Read: டி.டி.வி.தினகரன் வாழ்க்கை வரலாறு – அரசியல் என்ட்ரி முதல் அமமுக பொதுச்செயலாளர் வரை

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.