பாஜகவின் ‘கேரள குஜராத்’ என்றால், அது நேமம் தொகுதிதான். கடந்த முறை இங்குதான் பாஜகவின் ஓ.ராஜகோபால் வெற்றிபெற்று பாஜகவின் ஒற்றை எம்எல்ஏவாக கேரள சட்டப்பேரவைக்குள் சென்றார். அதனால், கேரளாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கடைசி நேரத்தில் வென்றது. இந்த முறையும் இந்தத் தொகுதியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் இரு கூட்டணிகளும் நேமம் தொகுதிக்கு முக்கியவத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

காங்கிரஸ் தனது முன்னாள் மாநிலத் தலைவரும், சிட்டிங் எம்.பி.யுமான கே.முரளீதரனை நேமம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் சிபிஎம் 2011-ல் இதே தொகுதியில் வென்ற வி.சிவான்குட்டியை நிறுத்தியுள்ளது. எப்போதும் நேமம் தொகுதியை ‘கேரள குஜராத்’ என அழைக்கும் பாஜகவோ, முன்னாள் மிசோரம் ஆளுநரும் மூத்த தலைவருமான கும்மனம் ராஜசேகரனை களமிறக்கியுள்ளதால் மும்முனை போட்டியாக மாறி இருக்கிறது. கும்மனம் ராஜசேகரன் 2019 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மூன்று பிரதான கட்சிகளும் வலுவான வேட்பாளர்களை களமிறங்கியுள்ளதால் நேமம் தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் ஒரு பகுதி தொகுதிக்குள் வருகிறது இந்த நேமம் தொகுதி. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால், இந்தத் தொகுதியில் வென்று, கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்தலில் வென்ற முதல் எம்எல்ஏ என்ற வரலாற்றை உருவாக்கினார்.

2016 தேர்தலில், ராஜகோபால் 47.46% வாக்குகளைப் பெற்றார். அவருடைய பிரதான போட்டியாளரான சிபிஎம்மின் வி.சிவான்குட்டி 41.39% வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் தனது யுடிஎஃப் கூட்டாளியான ஜனதா தளம் (யு)-க்கான இடத்தை விட்டுகொடுத்தது. அந்தக் கட்சி சார்பில் களம் கண்ட வி.சுரேந்திரன் பிள்ளைக்கு 9.7% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியின் கீழ் நேமம் தொகுதி வந்தாலும், அந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் இந்த இடத்தை வென்றபோது அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தார்.

எனினும், நேமம் சட்டப்பேரவை பிரிவில் மட்டும் பாஜகவின் கும்மனம் ராஜசேகரன், சஷி தரூரை விட 12,041 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். ராஜசேகரனுக்கு 58,513 வாக்குகளும், சசி தரூர் 46,472 வாக்குகளும் பெற்றனர். எல்.டி.எஃப் 33,921 வாக்குகள் மட்டுமே பெற்றது. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும், திருவனந்தபுரம் மாநகராட்சியின் 23 பிரிவுகளில், நேமம் தொகுதியின் இடங்கள் உட்பட பாஜக 14 இடங்கள் வென்றது. எல்.டி.எஃப் மீதமுள்ள ஒன்பது இடங்களை பிடித்தது.

காங்கிரஸில் இருந்து மடை மாறிய வாக்கு வங்கி!

நேமம் தொகுதி முதலில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. 2001 மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.சக்தன் இந்தத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். இதே ஆண்டுகளில் பாஜக இங்கு 16,872 வாக்குகள், 6,705 வாக்குகள் என்ற ரீதியில்தான் வாக்குகளை பெற்றது. ஆனால், 2011 தேர்தல் அதை மாற்றியமைத்தது.

2011-ஆம் ஆண்டில், சிபிஎம் வேட்பாளர் வி.சிவன்குட்டி 42.99% வாக்குகளைப் பெற்றார். அப்போதும் பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜகோபால் தோற்றாலும் 37.49% வாக்குகளைப் பெற்றார். அந்தநேரத்தில் யுடிஎஃப் வேட்பாளர், சோசலிஸ்ட் ஜனதா (ஜனநாயக) கட்சியின் சாருபாரா ரவி, 17.38% வாக்குகளை மட்டுமே பெற்றார். பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தல், யுடிஎஃப் வாக்கு வங்கியானது 9.7% ஆகக் குறைந்தது. காங்கிரஸ் வாக்குகளை அப்படியே பாஜக தனது வாக்குகளாக மடைமாற்ற 2016 தேர்தலில் எளிதாக வென்றது.

1.92 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை நேமம் தொகுதி கொண்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் உயர் சாதி இந்துக்கள். இந்தத் தொகுதியில் 30,000 முஸ்லிம் வாக்குகளும், அதற்கு சமமான நாடார் வாக்குகளும் உள்ளன. சிபிஎம், காங்கிரஸ் மற்றும் பாஜக அனைவருமே இந்த முறை சாதி இந்து நாயர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் நாடர்களின் ஆதரவைத் தவிர, மற்ற சமூகத்தின் வாக்குகள் முரளீதரனுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. பாஜக இந்துக்கள் மற்றும் கடந்த முறை ராஜ்கோபால் செய்த பணிகளையும் சமீபகாலமாக பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சியை நம்பியும், கும்மனம் ராஜசேகரின் பிரபலத்தை நம்பியும், களமிறங்கிறது. இதனால் இப்போது இருந்தே நேமம் தொகுதி எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக மாறி இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.