“Hello… Antony here… Is this Priya?” என்று ஹைஸ்டைல் ஆங்கிலத்தில் பேசும் ஆண்டனியால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் பெரிது. அப்படி, அவனால் பாதிக்கப்பட்ட ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரால்… இப்போது ஆண்டனி புழல் சிறையின் கம்பிகளை தரிசித்துக்கொண்டிருக்கிறான்.

189 உறுப்பு நாடுகள், 170 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள், 130 -க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் என தனித்துவமான உலகளாவிய கூட்டமைப்பான உலக வங்கியின் (The World Bank) தரமணி கிளையில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த இளம் பெண் ரம்யாவுக்கு ஃபிப்ரவரி மாதம் அமெண்டா என்பவர் ஃபோனில் அழைத்திருக்கிறார். உலக வங்கி வேலைக்கான விஷயமாக தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு முதல் சுற்று நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார் அமெண்டா.

“கங்கிராஜூலேஷன்ஸ். முதல் சுற்று நேர்காணலுக்கு தேர்வாகியுள்ளீர்கள். வங்கியின் சீனியர் ஆஃபீஸர் உங்களை இண்டர்வ்யூ செய்வார். வெஸ்டர்ன் டிரஸ் கோடில் வரவேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். வங்கியில் வேலை, கைநிறையச் சம்பளம் என்ற கனவோடு ரம்யா சென்றார். அங்கு ஏ.சி அறையில் ஆபீஸர் போல தோரைணையாக அமர்ந்திருந்த ஆண்டனி, தன்னுடைய உதவியாளர் மூலம் ரம்யாவை உள்ளே அழைத்தான். ரம்யாவை உட்காரச் சொல்லிவிட்டு அவர் நீட்டிய ஃபைல்களை பார்த்தபடி இன்டர்வியூக்கான கேள்விகளைக் கேட்க தொடங்கினான்.

ஆண்டனி

சந்தேகத்துக்கே இடமில்லாத அவனது தோரணையும், ஆங்கில உச்சரிப்பும் ரம்யாவை யோசிக்கவே விடவில்லை. ஆண்டனியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தார். குடும்பம் சம்பந்தமாக சில கேள்விகளையும் கேட்டுள்ளான். பொதுவாக பெரிய நிறுவனங்களில் குடும்பம் சம்பந்தமாக பெர்சனல் கேள்விகளைத் தவிர்த்துவிடுவார்கள். இதையறிந்திருந்தாலும், சமாளித்து பதில் சொன்ன ரம்யா, இண்டர்வ்யூவை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அடுத்த சில நாட்களில் ஆண்டனியே ரம்யாவின் எண்ணுக்கு அழைக்கிறான். “முதற்கட்ட இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகிவிட்டதால், இனி நானே நேரடியாகத் தொடர்பு கொள்வேன்” என்று சொன்னவன், அடுத்தக்கட்ட இண்டர்வ்யூவுக்கு தேதியையும் சொன்னான். “அதே தி.நகர் நட்சத்திர ஹோட்டல்தான். இந்த முறை இன்னும் மாடர்ன் டிரஸ்ஸில் நீங்க இண்டர்வ்யூக்கு வரணும்” என்றிருக்கிறான்.

இந்தமுறை இன்னும் அகலமான புன்னகையுடன் வரவேற்ற ஆண்டனி, வேலை தொடர்பாக இரண்டொரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு ரம்யாவின் உடை, அங்க அளவுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார். “இந்த பேங்க் வேலையெல்லாம் எதுக்கு… நீங்க மாடலிங்கே பண்லாமே” என்றும் பேசியுள்ளான். தைரியமான பெண்ணான ரம்யா சமாளித்து பேசி வெளியே வந்துவிட்டார்.

இரண்டு முறை இண்டர்வ்யூ நடந்தபோதும் ஆண்டனியின் அலுவலகத்தில் ஏழுட்டு பெண் உதவியாளர்கள். டிப்டாப் உடையில் ஆண்டனி. காவலுக்கு பவுன்சர்கள் என்றிருந்ததால் சந்தேகம் கொள்ளாத ரம்யா, இரண்டாவது சுற்று இண்டர்வ்யூவில் ஆண்டனி பேசிய தொனியிலும், நடந்து கொண்ட விதத்திலும் மனதுக்குள் நெருடலாக உணர்ந்தார். எனவே அடுத்தநாள், ஆண்டனியின் எண்ணை ட்ரூகாலரின் சோதித்திருக்கிறார். அது ஒரு டிராவல்ஸின் பெயரைக் காட்டியுள்ளது. அஃபீஷியலாக இதை டீல் செய்த முடிவு செய்து, சென்னை தரமணியிலிருக்கும் உலக வங்கிக்கு அழைத்து விசாரித்திருக்கிறார். எதுவும் இண்டர்வ்யூ நடக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு, நடந்தவற்றையும், ஆண்டனி அநாகரிகமாக பேசியவற்றையும் குறிப்பிட்டு வங்கியின் பெயரைச் சொல்லி இப்படி ஒரு மோசடி நடப்பதை வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறார். அதிர்ச்சியடைந்த வங்கியின் மேலாளர், ஆண்டனி குறித்து தரமணி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாலை ராம் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, கடந்த வாரத்தில் அவனைக் கைது செய்திருக்கிறார்கள்.

மோசடி

இது குறித்து காவல்துறை உயரதிகாரியிடம் பேசினோம்: “ஆண்டனியின் செல்போன் நம்பரைக் கொண்டு சைபர் க்ரைம் போலீஸார் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். சொந்த ஊர் திருச்சி. சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி படித்திருக்கிறான். 39 வயதாகும் ஆண்டனிக்கு திருமணமாகவில்லை. ஆன்லைனில் வேலைக்காக விண்ணப்பிப்பவர்களில் பெண்களின் விவரங்களை ஹாக் செய்து சேகரித்து, பிறகு அவர்களுக்கு போன் செய்து இன்டர்வியூ கார்டை அனுப்பி தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைப்பான். பின்னர் அந்தப் பெண்களிடம் அன்பாக பேசி காதல் வலை விரிப்பான். அவனை முழுமையாக நம்பும் பெண்களிடமிருந்து பேசிப்பேசி பணத்தைக் கறந்துவிட்டு தலைமறைவாகி விடுவான்.

தி.நகர் ஸ்டார் ஹோட்டலில்தான் ஆஃபீஸ். இதுபோல இண்டர்வ்யூ நடக்கும் நாட்களில், வி.ஐ.பி எஸ்கார்ட் போல இரண்டு பவுன்ஸர்கள் உடனிருப்பார்கள். ஏழெட்டு பெண் உதவியாளர்களை நாள் சம்பளத்துக்கு என்று பேசி இருத்திக் கொள்வான். அவர்களில் ஒரு பெண் மட்டும் இவனது காதலி. ஏற்கனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டனியிடம் பணிபுரிந்த பெண்ணொருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரளித்திருந்தார். அதில் கைதாகி, மேல் முறையீடு காரணமாக அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையாகியிருக்கிறான்.

எப்ஃஐஆர்

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியுமென்பதால் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றியுள்ளான். இந்த வேலைக்காகவே 28 செல்போன்கள், 42 சிம்கார்டுகள், 3 லேப்டாப்கள், 4 டேப்லாய்டுகள், 10 வாக்கி டாக்கிகள், 100 கிரெடிட் கார்டுகள், சொகுசு கார் ஆகியவற்றை ஆண்டனி பயன்படுத்தி வந்திருக்கிறான்” என்றார்.

”பெண்களின் அழகை முதலில் வர்ணிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களைப் புகழ்ந்து நாலு வார்த்தை பேசினால் போதும். எப்படிப்பட்ட பெண்களும் வலையில் வீழ்ந்துவிடுவார்கள்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளான் ஆண்டனி. இவனைப் போன்றவர்களை அடையாளம் கண்டு நீதிக்கு முன் நிறுத்த இன்னும் பல ரம்யாக்கள் முன்வரவேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.