சென்னையில் சினிமாவுக்கான ஸ்டுடியோ, உலகின் முதல் சினிமா வந்த சில ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.

1900-ல் லூமியர் சகோதரரும், எடிசனும், இன்னும் சிலரும் சினிமாவைக் கண்டுபிடித்ததற்காக உரிமை கொண்டாடிய நேரத்தில், 1916-ல் சென்னை வேப்பேரியில் நடராஜ முதலியார் ஒரு ஸ்டுடியோ கட்டி, தமிழின் முதல் பேசா படத்தை எடுத்தார். ‘கீசக வதம்’ என்று படத்துக்குப் பெயர். அது பேசாத படம் என்பதால் தமிழ்ப்படம் என்பதைவிட உலகப் படம் என்பதுதான் சரியாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் புரசைவாக்கத்தில் ‘சீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டுடியோவைக் கட்டி, சீதா கல்யாணம் என்ற படத்தை எடுத்தார் நாராயணன் என்பவர். அவருடைய மனைவி மீனா அந்தப் படத்துக்கு சவுண்டு என்ஜினீயர். சினிமா வளர்ந்தது. சென்னையில் ஸ்டுடியோக்கள் அப்படித்தான் பெருகின.

ஒரு காலத்தில் சென்னையில் 16 சினிமா ஸ்டுடியோக்கள் இருந்தன. நான் சொல்லும் ‘ஒரு காலத்தில்’ என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன். ஜெமினி, ஏவி.எம்., விஜயா வாகினி, பிரசாத், அருணாசலம், மோகன், செந்தில், ஏ.ஆர்.எஸ். கார்டன், கற்பகம், பரணி, கோல்டன், வீனஸ், சத்யா ஸ்டூடியோ, டி.ஆர். கார்டன் நிறைய நினைவில் நிற்கின்றன. நான் ஷூட்டிங் ஸ்பாட் சென்று எழுதிய படப்பிடிப்புத் தளங்களே இன்று பல செயல்பாட்டில் இல்லை. மேலே சொன்ன ஸ்டுடியோக்களில் ஜெமினி ஸ்டுடியோவுக்குள் மட்டும் நான் ரிப்போர்ட்டிங் செய்தது இல்லை. அப்போது அது அபார்ட்மென்டாக மாறியிருந்தது. ஜெமினி கலர் லேப் மட்டும் வெகு நாட்களுக்கு இயங்கியது.

மற்றபடி பெரும்பாலான ஸ்டுடியோக்கள் இப்போது இல்லை என்று சொல்லிவிடலாம். அல்லது எஸ்.ஜே. சூர்யா பாணியில் ‘இருக்கு ஆனா இல்லை’. ஏவி.எம்., பிரசாத் இரண்டும் மட்டும் பெரும்பாலும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்காக இயங்குகின்றன.

80-களின் இறுதியில் அல்லது 90-களின் தொடக்கத்தில் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்றால், ரஜினி, கமல் தவிர மற்ற யாரையும் சுலபமாகப் பார்த்துப் பேசலாம். விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றவர்கள் எங்களுக்கு விஷயதானம் செய்பவர்கள். ‘கோபி செட்டிபாளையம் போயிருந்தோம். ஒரே மழை.. ரெண்டு சீன் கூட எடுக்க முடியலை’ என்று ஒரு நடிகர் வாயை விட்டால் அது எங்களுக்கு பிட் செய்தி.

நடிக்கும் படங்கள், சொந்த விஷயம், படப்பிடிப்பில் நடந்த சம்பவம் என்று பேசிக்கொண்டே போனால் அது பேட்டி. பிரசாந்த், அஜீத், விஜய் என புதிதாக நடிக்க வந்தவர்கள் ஒரு பக்கம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு தொடங்கி தாமு, சாப்ளின் பாலு வரை யாராவது கண்ணில் சிக்குவார்கள். நடிகைகளில் ராதிகா, குஷ்பு, கௌதமி, கஸ்தூரி, மீனாட்சி, மௌனிகா, வினோதினி என்பது எங்கள் நடிகைகளின் பட்டியல்.

விஜயா வாகினி

ஸ்டுயோக்களில் நுழைந்தால் இரண்டு பேட்டிகள், 10 பிட்டுகள் இல்லாமல் வெளியே வரமாட்டோம். அவ்வளவு படப்பிடிப்புகள் நடக்கும்.

இது தவிர, வீடு போன்ற அமைப்புகளில் இருந்த குஷால்தாஸ் கார்டன் (நாட்டாமை, சந்திரமுகி பேலஸ் அங்குதான் இருந்தது), மணி மகால், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடம், வாசன் ஹவுஸ், அப்பு ஹவுஸ், ரோகிணி கார்டன், ஃபிலிம் சிட்டி என பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்.

திரும்பிய பக்கம் எல்லாம் நடிகர்கள் என இருந்த காலம். இப்போது சென்னையில் படப்பிடிப்பு என்பதே அபூர்வம். கோடம்பாக்கம் ஏரியா என்றாலே அது சினிமாக்காரர்களின் இடம் என மாறியது. கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கம். இப்போது சாலிகிராமம், வளசரவாக்கம், போரூர் என்று போய்க்கொண்டிருக்கிறது.

சில ஸ்டுடியோ குறிப்புகள்…

ஏ.வி.எம் ஸ்டுடியோ

காரைக்குடி அருகே தேவக்கோட்டை ரஸ்தாவில்தான் ஏவி.எம். ஸ்டுடியோ பிறந்தது. அல்லி அர்ஜுனா, நாம் இருவர், வேதாள உலகம் போன்றவை அங்கு தயாரிக்கப்பட்டவைதான். வடபழனி ஏரியாவில் பல ஸ்டுடியோக்கள் ஒரே இடத்தில் இருந்ததால் நடிகர்களுக்க்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஏவி.எம் இங்கே மாற்றிக்கொண்டு வந்தார்.

பட்சிராஜா ஸ்டுடியோ

கோவையில் இயங்கிய இந்த ஸ்டுடியோ மிக பழமையான ஸ்டுடியோ. கடைசியாக இங்கு எடுக்கப்பட்ட படம் நடிகர் திலகம் நடித்த, நான் பெற்ற செல்வம், ஸ்ரீவள்ளி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. கோவையில் இந்த ஸ்டுடியோ உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ்

சேலம் ஏற்காடு சாலையில் ஒரு காலத்தில் கம்பீரமாக காட்சியளித்த (இன்று ஆர்ச் மட்டுமே அதனை நினைவூட்டிக்கொண்டிருக்கிறது) இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம். 99 திரைப்படங்களை அந்த ஸ்டுடியோவில் தயாரித்தார் என்றால் சாதாரண விஷயம் இல்லை.

தமிழின் முதல் வண்ணத் திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் இவர் தயாரித்ததுதான்.

பகுதி 6க்கு செல்ல க்ளிக் செய்க

Also Read: மெட்ராஸ் வரலாறு: சென்னையில் தமிழக அரசு நடத்திய ஜல்லிக்கட்டு பற்றி தெரியுமா? – பகுதி 6

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.