விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று, அதனைக் கீழே கொட்டும் சம்பவம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், விலை வீழ்ச்சி காரணமாக, டிராக்டரில் ஏற்றிவரப்பட்ட வெண்டைக்காய்களை வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் கொட்டிச் சென்றனர் விவசாயிகள். அச்சம்பவம் மாவட்டம் முழுவதும் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, போதிய விலை கிடைக்கவில்லை என்பதால், தேனி அருகே கொத்தமல்லியை சாலையில் வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சாலையில் கிடக்கும் கொத்தமல்லியை எடுத்துச் செல்லும் நபர்.

Also Read: தொடர் மழை… பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான பயிர்கள்… கண்ணீரில் தேனி விவசாயிகள்!

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை, பள்ளபட்டி, கோடாங்கிபட்டி, கொடுவிலார்பட்டி, அம்மச்சியாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சில நூறு ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லிச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கிலோ ரூ.200க்கு விற்பனையான கொத்தமல்லி, கடந்த மாதம் ரூ.100க்கு விற்பனையாகி வந்துள்ளது. இந்நிலையில், வரத்து அதிகரித்ததன் காரணமாக, கடந்த சில நாட்களாக, கொத்தமல்லி விலை கிலோ ரூ.12ற்கும் கீழே குறைந்தது. இதனால், வியாபாரிகள், கொத்தமல்லியை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

”கொத்தமல்லி, 40 முதல் 45 நாள்கள் பயிர். தரமான விதையை வாங்கி, உரம், ஊட்டச்சத்து என கொடுத்து வளர்த்தால், சந்தையில் வரத்து அதிகரித்து எங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. எங்களிடம் கிலோ ரூ8 வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சந்தையில் ரூ 12’க்கு விற்கப்படுகிறது. கொத்தமல்லியை வளர்க்க செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை. சிலர், கொத்தமல்லியை பறிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். விலை பிரச்னை சரியாகிவிடும் என நாட்கள் கடந்து அறுவடை செய்கிறார்கள்.

கொத்தமல்லி

அப்போது மல்லித்தழைகள் முற்றிவிடும். தண்டு பெரிதாகிவிடும். இளம் மல்லித்தழைகளுக்கு தான் சந்தையில் கிராக்கி இருக்கும். முற்றிய மல்லித்தழைகளை பார்த்தாலே மக்கள் வாங்க மாட்டார்கள். இப்படியான பிரச்னைகள் இருப்பதால், சில மாதங்களுக்கு கொத்தமல்லியை தவிர்க்கலாம் என திட்டமிட்டிருக்கிறோம். இந்நிலை சரியாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம்” என்றார் உப்புக்கோட்டைப் பகுதி விவசாயி ஒருவர்.

சாலையில் கொட்டப்பட்ட கொத்தமல்லியை, அப்பகுதியினைக் கடக்கும் சிலர், அள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.