இந்தியாவில் சமூக த்ரில்லர் திரைப்படங்கள் நிறைய வந்தாலும்கூட, அதில் கவனிக்கப்படக் கூடிய அளவில் திரைக்கதை உள்ள படங்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில், வழக்கமான ‘த்ரில்லர்’ படங்கள் பெரும்பாலும் நாயக பிம்பம் பெரிதாக்கப்படும் படங்களாகவே இருக்கும். இன்னும் குறிப்பாக, நாயகன் அல்லது நாயகி காவல்துறை அதிகாரியாய் இருந்து குற்றங்களை கண்டுபிடிப்பவராக இருப்பார். குற்றவாளியே நாயகனாய் இருக்கும் படங்களிலோ நெஞ்சைத் தொடும் ஒரு பின்னணிக் கதையை வைத்து, நாயகன் செய்தது நியாயம் என்று ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். இதெல்லாம் வழக்கமான வணிகப் படங்களாகவும் இருக்கும்.

இதையெல்லாம் மீறிய, அதுவும் வெற்றிகரமாக மீறிய படம் 2013-ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கி, மோகன்லால் நடித்து வெளிவந்த ‘த்ருஷ்யம்’. கதையின்படி தன் குடும்பத்தார் அறியாமல் செய்த ஒரு கொலையை மறைக்க, நாயகன் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதை மிகச் சிறப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருந்தார். இதே படம் இதே பெயரில் இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும், ‘பாபநாசம்’ என்கிற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் தமிழிலும் வெளிவந்து எல்லா மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. வழக்கமாக ஒரு ‘த்ரில்லர்’ படத்தின் மிகப் பெரிய திருப்பம் ஒன்று தெரிந்துவிட்டால், இரண்டாம் முறை அந்தப் படத்தை பார்ப்பதற்கான ஈர்ப்பு எழாது. ஆனால், மாறாக இந்தப் படம் மறுமுறை பார்த்தாலும் சலிக்காத ஒரு சுவாரஸ்யத்தைக் கொண்டிருந்தது.

ஒரு சாதாரண மனிதன் மிகப் பெரிய ‘சிஸ்டத்தை’ எதிர்த்து ஒரு திட்டம் தீட்டி, அதில் வெற்றிகொள்ளும் அதே பழைய சூத்திரம்தான் கதை என்றாலும் கூட, அதை மீறிய அந்த சுவாரஸ்யமே படத்திற்கு கிடைக்கும் வெற்றி. அப்படி சுவாரஸ்யமாகத் தொடங்கி முடிந்த ஒரு படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பது என்பது நிஜமாகவே கத்தியின் மீது நடப்பது போன்றதுதான். காரணம், சற்று பிசகினாலும் முதல் பாகம் அளவிற்கு படம் இல்லை என்று நிச்சயமாக எளிதில் நிராகரித்து விடுவார்கள். அதையும் மீறி முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இருந்ததா என்பதை விரிவாக அலசலாம் வாருங்கள்.

image

இரண்டாம் பாகம் எடுப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அதே கதையின் தொடர்ச்சியாக எடுப்பது; இல்லையென்றால், அந்தக் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு புதிதாக ஒரு கதை சொல்வது. ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் முதல் கதையின் தொடர்ச்சியைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். அந்த நதிக்கரையில் வைத்து கொலை செய்யப்பட்ட இளைஞனின் பெற்றோர் முன்பு நின்று, தான் தவறு செய்திருந்தாலும்கூட, அது தன் குடும்பத்தை காப்பதற்காக செய்த செயலே என்பதை ஜார்ஜ் குட்டி விளக்கம் சொல்லிவிட்டு நகர்வதுடன் படம் முடியும். ஆனால், காவல்துறை அவ்வளவு எளிதாக தங்கள் சந்தேகங்களை கிடப்பில் போடுவதில்லை. அதிலும் கொலையுண்ட இளைஞனின் தாய் ஒரு காவல்துறை அதிகாரி. இப்போது அந்த ஊர் காவல் நிலையத்தில் இருப்பது அந்தத் தாயின் நெருங்கிய நண்பன். ஆக, ஜார்ஜ் குட்டியை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். என்றேனும் ஒருநாள் அவன் தனது தவறை தன் வாயாலேயே சொல்வான் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ரகசிய போலீஸும் கூட அவர்கள் அருகிலேயே இருக்கிறது. ஆனால்ம், இறந்த இளைஞனின் உடல் கிடைத்தால் மட்டுமே மேற்கொண்டு வழக்கை புதுப்பிக்க முடியும். அதற்காகவே காத்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த உடல் இருக்குமிடம் தெரிந்துவிடுகிறது. அது காவல்துறையின் கையிலும் கிடைத்து விடுகிறது. மீண்டும் ஜார்ஜ்குட்டி கைது செய்யப்படுகிறான். காவல்துறை இம்முறை ஜார்ஜ் குட்டிக்கும், அவன் குடும்பத்திற்கும் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக பெரிய வலை ஒன்று விரிக்கிறது. அதில், ஜார்ஜ்குட்டி சிக்குவான் என்று எல்லாரும் எதிர்நோக்கி இருக்க, அங்கே ஒரு ‘மேஜிக்’ யுத்தமாகிறது. இந்தப் போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை.

மிகவும் நிதானமாகவே படம் ஆரம்பிக்கிறது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஜார்ஜ்குட்டியும் அவன் குடும்பமும், அதுபோக அந்த ஊரில் இருக்கும் தேநீர் கடை, ஆட்டோ ஓட்டுனர்கள், போலீஸ்காரர்கள் என எல்லாரும் இயல்பாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அதுபோக எந்தக் காவல்துறை அதிகாரியை கண்டாலும் அல்லது காவல்துறை வாகனத்தை கண்டாலும் ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தார் பயப்படுவதையும் பதிவு செய்கிறார்கள். இப்போது ஜார்ஜ்குட்டி ஒரு திரையரங்கின் உரிமையாளர். அதுபோக சினிமா ஒன்று எடுக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும், புதிதாக ஒரு நண்பரோடு சேர்ந்து கள் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாகிறார். இதற்கு முன்பு ஜார்ஜ்குட்டியை தங்களில் ஒருவராக பார்த்த ஊர்மக்கள் இப்போது அந்நியமாகப் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்தக் காட்சிகள் எல்லாமே நிதானமாக நகர்கிறது. சொல்லப்போனால் இடைவேளை வரை எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு படமாகத்தான் இது நகர்கிறது.

image

ஆனால், படத்தின் இறுதி நாற்பது நிமிடம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் வந்து நம்மை திக்குமுக்காட செய்துவிடுகிறது. ஜார்ஜ் குட்டி படிக்காத பாமரன் என்றாலும்கூட அவன் தனது குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்படுகையில் அவனை மிஞ்சும் அறிவாளி உலகில் இல்லை என்பதைப்போல் நடந்துகொள்வான் என்பதை அழுத்தம் திருத்தமாக அந்தப் பகுதிகளில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பகுதியில் ஏற்படும் எல்லா சலிப்புக்கும் சேர்த்து இரண்டு மடங்காக இந்த நாற்பது நிமிடங்கள் நமக்கு பெரும் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. சற்று மிகையாக சொல்லவேண்டுமென்றால், இந்திய த்ரில்லர் சினிமாவில் சாதாரணமாக நாம் கற்பனை செய்ய முடியாத காட்சிகள் அவையெல்லாம். ஆனால், அதை முடிந்தளவு கவனமாக, ‘லாஜிக்’கோடு கூறியிருப்பது இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அந்த வகையின் ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தின் பெயரை இந்தப் படம் காப்பாற்றிவிடுகிறது என்பதே உண்மை.

நாயகன் மோகன்லால் அதே உணர்ச்சிகளற்ற முகபாவங்களோடு படம் முழுதும் வருகிறார். உண்மையில் முதல் பாகத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்ட ஒரு விஷயம் இது. ஆனால், ஜார்ஜ்குட்டி ஏன் அப்படி உணர்ச்சியற்ற முகத்தோடு வலம் வரவேண்டும் என்கிற கேள்விக்கு இரண்டாம் பாகம் தெளிவான பதிலை கொடுக்கிறது. எளிதில் உணர்ச்சியை வெளிக்காட்டாததாலேயே ஜார்ஜ்குட்டியால் இவை யாவையும் சாதிக்க முடிகிறது. எமோஷனில் கரைந்து விடாத ஒரு தெளிவான மூளை அவருடையது என்பதே அதன் பொருள். மேலும், அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காத ஒருவன் என்பதையும் உணரலாம். நாயகியாக வரும் மீனா மற்றும் இரண்டு பிள்ளைகள் என யாருக்கும் பெரிதாக வேலையில்லை. மாறாக, காவல்துறை அதிகாரியாக வரும் முரளி கோபி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது விசாரணை முறைகளும், அவரது உடல்மொழியும் ரசிக்கும்படி இருந்தது.

image

பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் படத்தை விட்டு சற்றும் நகராத கருவிகளாக இருந்ததைப் பாராட்டி ஆகவேண்டும். படத்தின் முதல் பகுதி மிகவும் நிதானமாக நகர்வதை படத்தொகுப்பாளரால் தடுக்க இயலவில்லை என்பதே உண்மை. காரணம், அந்தப் பகுதியில் அறிமுகமாகும் பல புதிய கதாபாத்திரங்கள் எதற்கு என்கிற ரகசியம் இரண்டாம் பகுதியில்தான் மொத்தமாக வெளிப்படுகிறது. அதன் விளைவாக ஏற்படும் பாதிப்பு இது.

உண்மையில் ‘த்ரிஷ்யம்’ மாதிரியான திரைப்படங்கள் இந்திய சினிமாவில் எப்போதேனும் தோன்றும் பொக்கிஷங்கள். அதன் அழகை சிதைக்காமல் ஒரு இரண்டாம் பாகம் எடுப்பது நிஜமாகவே சிரமமான காரியம். அதை இயக்குனர் வெற்றிகரமாகவே செய்திருக்கிறார் என்பதே பெரும் ஆறுதல். படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். அது ஒரு தத்துவமாகவே நம்மைத் திணறடித்து சிந்திக்கவைக்கும். இங்கே குற்றமும் தண்டனையும் குறித்த புரிதலும் நமக்குக் கிட்டும்.

படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்!

– பால கணேசன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.