மாடித் தோட்ட விவசாயத்தைப் பற்றி இதுவரை பல விஷயங்களைப் பேசி இருக்கோம். இந்தத் தடவை ஒரு முக்கியமான பொருளைப் பற்றிப் பார்க்கலாம். மாடித் தோட்டம் அமைக்கப் பலருக்கும் ஆர்வம் இருக்கு. ஆனா, அதுக்குத் தேவையான ‘இயற்கை உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி இதெல்லாம் நம்மளால தயார் செய்ய முடியாது. அது பெரிய வேலையா இருக்கும்’ அப்படின்னு யோசிக்குறவங்கதான் அதிகம்.

`பாஸ்ட் புட்’ காலத்துல இதுக்கெல்லாம் நேரம் இல்லைப்பானு சொல்ற ஆளுங்களும் பயன்படுத்துற மாதிரி ஒரு இன்ட்ஸ்டென்ட் இடுபொருள் பற்றித்தான் சொல்லப்போறேன். டவுன்ல மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் எங்கப் போய்த் தேடுறது. அதுனாலயே விருப்பம் இருந்தாலும் வீட்டுத்தோட்டம் அமைக்காம இருக்கேன். அதுக்கு மாற்று ஏதாவது கிடைச்சா நாங்களும் மாடித்தோட்டம் அமைத்திடுவோம்னு சொல்ற மக்களே… கவலையே படாதீங்க. நீங்கத் தேடின மாற்றம் இந்த ஒரு பொருள்ல இருக்கு.

Waste Decomposer

டபிள்யூ.டி.சி(WDC)ன்னு சொல்ற வேஸ்ட் டி கம்ப்போசர்தான் அந்தப் பொருள். இந்திய அளவுல விவசாயத்துல புரட்சி பண்ணிட்டு இருக்க இந்த WDC. மாட்டுச் சாணம் கிடைக்காதவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்னே இதைச் சொல்லலாம். மாட்டுச் சாணத்துல இருந்து சில மூலக்கூறுகளைப் பிரிச்சு, இதைத் தயார் பண்ணியிருக்காங்க. உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இருக்க தேசிய இயற்கை விவசாய மையத்தின் (NCOF)இயக்குநர் கிருஷ்ணன் சந்திராதான் இதைக் கண்டுபிடிச்சார்.

இன்னிக்கு இந்திய விவசாயத்தில பெரிய புரட்சி பண்ணிட்டு இருக்க இந்த WDC. இதோட விலை 20 ரூபாய்தான். இந்த விலையில ஒரு டப்பா வாங்கினால் போதும். பிறகு, அதுல இருந்தே ஒவ்வொரு தடவையும் நாமளே வேஸ்ட் டி கம்போசர் தயார் பண்ணிக்கலாம். இதோட விலைதான் குறைவு. ஆனா, இதோட பலன்கள் ரொம்ப அதிகம். இதுவரைக்கும் விவசாயத்துல பயன்படுத்திட்டு இருந்த இந்த WDC இப்ப வீட்டுத்தோட்டத்துலயும் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க.

Also Read: மாடித்தோட்டத்தை வளமாக்கும் வெங்காயத்தோல் & வாழைப்பழத்தோல்… எப்படி? – வீட்டுக்குள் விவசாயம் – 24

இதைப் பயன்படுத்துறதால பூச்சி, நோய் தாக்குதல் குறையுதுன்னு மாடித்தோட்ட விவசாயிகள் சொல்றாங்க. குறிப்பா, அசுவினி பூச்சிக்கு வேப்ப எண்ணெய் மருந்தைவிட இதுக்கு நல்ல பலன் கிடைக்குதுன்னு சொல்றாங்க. மண்ணுல நுண்ணுயிர்கள் பெருகி, மண் வளமாகுது. நாம செடிகளுக்குக் கொடுக்குற இடுபொருள்களைப் பயிருக்கு முழுமையா எடுத்துக் கொடுக்குற நுண்ணுயிர்கள் அதிகமா உருவாகுது. அதுனால செடியோட வளர்ச்சி நல்லா இருக்குன்னு சொல்றாங்க.

விதைக்குறதுக்கு முன்ன விதைகளை 30 நிமிடம் WDC-ல ஊறவெச்சு, நடவு செஞ்சா, வழக்கத்தைவிட முளைப்புத்திறன் அதிகமாகும். ஒரே சீராக நாற்றுகள் வளரும். செடிகள் பூ எடுக்குற நேரத்துல இதைத் தெளிச்சா அதிக பூக்கள் பூக்கும். இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. மண்ணுல கார அமிலத்தன்மையை நிலைநிறுத்தும். அதே போலக் குப்பைகள்ல WDC தெளிச்சா சீக்கிரமா மக்கிடும்.

Also Read: 510 ரூபாய்க்கு அரசின் மாடித்தோட்டம் கிட்… என்னென்ன இருக்கும்? – வீட்டுக்குள் விவசாயம் – 23

20 ரூபாய்கு கிடைக்குற ஒரு டப்பா WDC ஜெல் மாதிரி இருக்கும். இதை அப்படியே நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதைத் தண்ணியில கலந்து வேஸ்ட் டி கம்போசர் கரைசலா மாத்திதான் பயன்படுத்தணும். 100 லிட்டர் பேரல் எடுத்துக்கணும். அதுல 95 லிட்டர் தண்ணிய ஊத்தணும். ஒரு கிலோ நாட்டு வெல்லம் இல்லைன்னா நாடு சர்க்கரை எடுத்துக்கணும். அதை 5 லிட்டர் தண்ணியில கரைச்சு, பேரல்ல இருக்க தண்ணியில ஊத்தணும். வேஸ்ட் டி கம்போசர் டப்பாவுல பாதி அளவுக்கு ஜெல் எடுத்துப் பேரல்ல போடணும்.

பிறகு, ஒரு குச்சியை வெச்சு, நல்லா கலக்கி விடணும். கலக்கி முடிச்சுட்டு, காட்டன் துணியால பேரல் வாய் பகுதியை மூடிக் கட்டி வெச்சிடணும். தினமும் காலையிலயும் சாயங்காலமும் துணியை அவுத்து நல்லா கலக்கிவிட்டு மறுபடியும் மூடி வெச்சிடணும். இப்படி செஞ்சிட்டு இருந்தா 7 நாள்ல பயன்படுத்துற நிலைக்கு வேஸ்ட் டி கம்போசர் கரைசல் தயாராகிடும். இந்த 7 நாள்ல அதிகளவுல நுண்ணுயிர்கள் உற்பத்தியாகி இருக்கும். அந்த நுண்ணுயிர்கள்தான் மண்ணுக்கும் பயிருக்கும் நல்லது செய்யப்போற நுண்ணுயிர்கள்.

200 லிட்டர் தண்ணியில வேஸ்ட் டி கம்போசர் கரைசல் தயாரிக்கும் முறை குறித்து இந்தப் படம் மூலமா விளக்கமா தெரிஞ்சுகலாம். தண்ணியோட அளவுக்கு ஏற்ப வெல்லம் அளவு, வேஸ்ட் டி கம்போசர் அளவு மாறும். அதைக் கவனத்தில் வெச்சுக்குங்க.

கரைசல் தயாரிப்பு

ஒரு தடவை தயாரிச்ச 100 லிட்டர் வேஸ்ட் டி கம்போசர் கரைசலை முழுக்க பயன்படுத்திடக் கூடாது. அதுல 10 லிட்டர் திரவம் எடுத்து அதுல மறுபடியும் ஒரு கிலோ வெல்லம், 90 லிட்டர் தண்ணி சேர்த்து வெச்சா, 7 நாள்ல மறுபடியும் கரைசல் தயாராகிடும். இது ரொம்ப ரொம்ப சுலபமான வேலைதான். இப்படித்தான் இதை ஒவ்வொரு முறையும் பெருகிக்கொண்டே போகும். அதை எடுத்துப் பயன்படுத்திகிட்டே இருக்கலாம். ஆக, 20 ரூபாய்க்கு வாங்குனா ஆயுசுக்கும் பயன்படுத்தலாம்.

இதை எப்படிப் பயன்படுத்துவது

இதைச் செடிகளுக்கு வேர் வழியாகவும் கொடுக்கலாம். இலை வழியாகவும் கொடுக்கலாம். தயாரான வேஸ்ட் டி கம்போசர் கரைசலையும் அப்படியே பயிர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. நாம தயாரிச்ச வேஸ்ட் டி கம்போசர் கரைசல் ஒரு லிட்டர் எடுத்தா, அதுல 3 லிட்டர் தண்ணி கலந்து பயன்படுத்தணும்னு தேசிய இயற்கை விவசாய மையம் சொல்லுது. நம்ம தமிழ்நாட்டு மாடித்தோட்ட விவசாயிங்க 1 : 5 அதாவது ஒரு லிட்டர் வேஸ்ட் டி கம்போசர் கரைசல்ல 5 லிட்டர் தண்ணி கலந்து பயன்படுத்துறாங்க.

15 நாளைக்கு ஒரு தடவை இதைச் செடிகளுக்குக் கொடுத்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். பூச்சி, நோய் தாக்குதல் குறையும். இதைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து விவசாயிகள் இதைத் தலைக்கு மேலே வெச்சு கொண்டாடுறாங்க. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை அதிகமான பயன்களைக் கொடுக்கிற வேற எந்த ஒரு இயற்கை இடுபொருள் இல்லன்னுதான் சொல்லணும்.

கத்திரி

எங்கு கிடைக்கும்?

தேசிய இயற்கை விவசாய மையம் தற்போது இதன் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. விற்பனை உரிமையை ஒரு தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. இணையதளம் மூலமாகவும் கிடைக்கிறது. இணையதளங்களில் 45 ரூபாய் விலையில் விற்பனை செய்கிறார்கள். ஏற்கெனவே வேஸ்ட் டி கம்போசர் தயாரித்து பயன்படுத்தும் விவசாயிகளிடம் ஒரு லிட்டர் வாங்கி அதில், வெல்லம், தண்ணீர் சேர்த்தும் தயார் செய்துகொள்ளலாம்.

இது மாடித்தோட்ட தொடரின் 25 பகுதி. இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது. மாடித்தோட்டம் தொடர்பாகத் தங்களுக்கு எழும் கேள்விகளை அனுப்புங்கள். அதற்கான விளக்கம் தரப்படும். தொடரைப் பற்றிய தங்கள் கருத்துகள், கேள்விகளைக் கமென்டில் பதிவு செய்யுங்கள்.

நன்றி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.