பெங்களூருவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 செயற்பாட்டாளர்களுக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

கைதுக்கான காரணம், பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்:-

செயற்பாட்டாளர்கள் நிகிதா ஜேக்கப், சாந்தனுவுக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், குடியரசுத் தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் வன்முறை தூண்டப்பட்டதாக குற்றம்சாட்டும் டெல்லி காவல்துறை, ட்விட்டரில் உலவிய “டூல்கிட்”டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன விதமான ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும்? போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என்பன போன்ற விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட். அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார். பின்னர் அதனை கிரட்டா தன்பெர்க் நீக்கிவிட்டார்.

image

ஆனால், இந்த டூல்கிட்டை எடிட் செய்து, திஷா ரவி தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பெங்களூருவில் திஷா ரவியை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிரடியாக கைது செய்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திஷா ரவி 5 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனியார் கல்லூரியில் பட்டம் பெற்ற திஷா ரவி, காலநிலை மாற்றம் தொடர்பாக ‘Fridays for Future India’ என்ற விழிப்புணர்வு அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். சுற்றுச்சூழலை காக்க வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் வேலைநிறுத்தம் என்ற நூதனப் போராட்டத்தை நடத்தியவர். மரம் நடுவது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்று சூழலியல் செயற்பாட்டாளராக பிரபலமானவர். போராட்டங்களுக்கு டூல்கிட் உருவாக்கியதிலும், அதை பரப்பியதிலும் முக்கிய சதிகாரராக செயல்பட்டதோடு, இதற்காக வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி பரப்பியது, Poetic Justice Foundation என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்பியது என திஷா மீது டெல்லி காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இதே குற்றச்சாட்டுகளுடன் சமூக செயற்பாட்டாளர்களான மும்பையைச் சேர்ந்த நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு ஆகியோரை காவல்துறையில் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டுடன் தேடிவருகிறார்கள். இவர்களில் நிகிதா ஜேக்கப், கைதில் இருந்து 4 வாரங்களுக்கு விலக்கு அளிக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.