‘மாஸ்டர்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எவ்ளோ நாளைக்கு பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸையே குறை சொல்வீங்க?’ என்று விஜய் பேசும் வசனமும் அந்தக் காட்சியும் பாராட்டுகளைக் குவித்துள்ளது. பலர் இச்சிறப்பான காட்சிகளை நீக்கியதற்காக அக்கறையுடன் விமர்சிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தில் டெலிட்டட் சீன்கள் நீக்கப்பட்டது குறித்து லோகேஷ் கனகராஜிடம் பேசினோம்,

மாஸ்டர் படத்தில் பாராட்டுக்களை குவித்துள்ள டெலிட்டட் சீனை நீக்க என்ன காரணம்?

படத்தின் ஃப்ளோ பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சிலக் காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம். படத்தின் நீளமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு, விஜய் சார் இந்த மாதிரி பேச ஆரம்பிப்பது செகெண்ட் ஆஃப்ல இருந்துதான். அப்போது, கேரக்டர் முழுமையாக மாறியபிறகு, இந்தக் காட்சிகள் வைத்தால் நேர்கோடாகிவிடும். இப்படி, அந்தக் காட்சி இடம்பெறாமல் போனதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பலமுறை யோசித்து யோசித்து எடுத்த முடிவு இது. ஆனால், இந்த முடிவு மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு.

image

அந்தக் காட்சிகளை படத்தில் வைத்திருக்கலாமே என்று இப்போது தோன்றியதா?

எல்லோரும் அந்தக் காட்சியை பாரட்டுகிறார்கள் எனும்போது படத்தில் வைத்திருக்கலாமே என்றுதான் நினைக்கத்தோன்றும். கண்டிப்பாக தோன்றுகிறது. எடுத்த முடிவு எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி சரியாக இருக்காதில்லையா? அதனால், நீக்கப்பட்ட காட்சிகளை வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

டெலிட்டட் சீன் வெளியான பிறகு விஜய் என்ன சொன்னார்?

விஜய் சாரிடம் இன்னும் பேசவில்லை. இப்போதுதான் நான் ஊரிலிருந்து வந்தேன்.

image

சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை பார்த்தீர்களா?

படம் முடிந்தும் விட்டது ரிலீஸும் ஆகிவிட்டது. அடுத்தப் படத்திற்கான நிறைய வேலைகள் இருப்பதால் சரியாக சமூக வலைதளங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், என் உதவி இயக்குநர்கள் உட்பட அனைவருமே டெலிட்டட் சீனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். அதில், ரொம்ப சந்தோஷம்.

தினந்தினம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனையில் உங்கள் தனிப்பட்ட பார்வை என்ன?

சினிமாவில் மட்டுமல்ல; நிஜத்திலும் ஒரே கருத்துதான். இந்தப் பிரச்சனையில் எல்லோருக்கும் ஒரே கருத்துதானே இருக்க முடியும்? படம் எடுப்பதால் மட்டும் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்? பெண்களுக்கு எந்த விதத்தில் துன்புறுத்தல் வந்தாலும் அத்தனையையும் எதிர்க்க வேண்டும். படைப்பாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே மாதிரி கோவம்தான்; ஒரே நியாயம்தான்.

image

பெண்கள் உடை குறித்த காட்சி என்பதால் ஆணாதிக்கவாதிகள் மத்தியில் சர்ச்சை அதிகமாக வரும் என்று நினைத்து காட்சிகளை எடுத்துவிட்டீற்களா?

நீங்கள் கேட்கும் கேள்வியில் இருந்துதான் இந்த வார்த்தையெல்லாம் எனக்கு தெரிகிறது. இதுகுறித்து, யாரும் எதுவும் சொல்லவுமில்லை;  பேசவுமில்லை; எதிர்க்கவுமில்லை. மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய நல்ல காட்சி இது. அப்படி சர்ச்சையாகும் என்று நாங்கள் நினைத்திருந்தால், தற்போது டெலிட்டட் சீனில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லையே?  படத்தில்தான் வைக்க முடியவில்லை. டெலிட்டட் சீனாகவாவது மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்து விடலாம் என்பதால்தான், தற்போது வெளியிட்டோம்.

– வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.