எரிகின்ற அடுப்பில் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் மெல்ல மெல்ல சூடேறுவதை போல, தமிழகத்தின் அரசியல் களம், தேர்தல் எனும் நெருப்பால் நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டே போகிறது. அரசியல் களத்தில் ஒவ்வொரு நிகழ்வும் அதன் சூட்டை ஒரு டிகிரி கூட்டிக் கொண்டே செல்கிறது. அப்படியான ஒன்றாகத்தான் சசிகலாவின் தமிழக எண்ட்ரி அமைந்திருக்கிறது.

தண்டனை காலம் முடிந்து சசிகலா வெளியே வந்தவுடன் தமிழக அரசியல் களத்தில் என்னமாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்பது குறித்து அத்தனை விவாதங்கள் இதுநாள்வரை நடந்து வந்தது. எல்லாமே ஒரு கணிப்புதான். சசிகலா மனிதில் என்ன இருக்கிறது, அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்துதான் அவரது வருகையின் தாக்கம் இருக்கும் என்றே கணிக்கப்பட்டு வந்தது. எந்த இடத்தில் சசிகலா விவகாரம் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது என்றால், மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள இல்லத்திற்கு சசிகலா அதிமுகவின் கொடியுடன் கூடிய ஜெயலலிதாவின் காரில் கிளம்பி சென்ற போதுதான். நிச்சயம் சசிகலா ஒரு முடிவுடன் இருக்கிறார் என்பதை அது வெளிப்படுத்தியது. அதிமுகவை உரிமைகோரும் எண்ணம் அவர் மனதில் இருப்பதும் ஓரளவுக்கு அது உறுதிப்படுத்தியது.

image

அன்று சசிகலா ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் சென்றதுதான் அவரது தமிழக வருகை நாளில் எதிர்பார்ப்பை கூட்டியது. எல்லோரையும் அவரது வருகையை கவனிக்க வைத்தது. அந்த கொடிதான் அதிமுக அமைச்சர்களையும் தூங்கவிடாமல் செய்துவிட்டதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டியது. ஒரு ஆளும்கட்சி டிஜிபி அலுவலம் வரை சென்று சசிகலாவுக்கு எதிராக அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என புகார் அளித்தது மிகவும் துரதிஷ்டவசமானது. ஒருவகையில் சசிகலா மீதான அவர்களின் அச்சத்தை வெளிப்படுத்தும் வகையிலே இருந்தது எனலாம்.

டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது. அதிமுகவில் ‘ஸ்லீப்பர்செல்’ கிடையாது. சில ‘எட்டப்பன்கள்’ உள்ளார்கள். அதிமுக – அமமுக இணையாது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க 100% வாய்ப்பே இல்லை. சசிகலாவுக்கும் – திமுகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுகவின் ‘பி’ டீம் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று, டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது. சட்டப்படி மட்டுமே இந்த விவகாரத்தை அதிமுக அணுகி வருகிறது” என்று ஒரு காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே தற்போது உள்ள அதிமுக தலைமை எண்ணுகிறது என்பதை அந்தப் பேட்டி வெளிப்படுத்துகிறது.

அமைச்சர்களின் புகாரை அடுத்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தும் விவகாரம் மெல்ல மெல்ல சூடேறத் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், “சசிகலா அதிமுக உறுப்பினர்தான். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற உரிமை தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்படியான நிலையில் சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை உள்ளது” என்கிறார்.

image

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சசிகலா தமிழக எல்லைக்குள் வரும் போது மற்றொரு காருக்கு மாறி ட்விஸ்ட் கொடுத்தார். அதுவும் அதிமுக நிர்வாகி ஒருவருடைய கார். அதிமுக கொடியுடன். அதனால், சட்ட ரீதியாக சசிகலாவை ஒன்றுமே செய்ய முடியாது. சசிகலாவை இந்த மூவ் பலருக்கும் வியப்பை கொடுத்தது. அதனால், கொடி விவகாரம் மேலும் சூடேறி முன்னிலைக்கு வந்துவிட்டது.

இதனால் சசிகலா சட்டப்படி அதிமுக கொடியை பயன்படுத்த முடியுமா? முடியாதா? இதுகுறித்து அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் போலீசுக்கு சென்றது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சொல்லும் கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்.

image
இதுகுறித்து பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன் கூறுகையில், “எந்த கட்சியிலாவது கட்சி நிர்வாகி தவிர மற்றவர்கள் கொடியை பயன்படுத்தக் கூடாது என சட்டம் உள்ளதா என்பதை விளக்க வேண்டும். சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தபோதுதான் சிறைக்கு செல்கிறார். பின்னர்தான் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து சசிகலா தொடர்ந்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை முடிக்க சசிகலா தரப்போ அரசு தரப்போ முயலவில்லை. அது முடிவதற்கு முன்பு இந்த பிரச்னை எழுகிறது.

தமிழகம் வரும்போது சசிகலா காரை மாற்றுகிறார். இதன்மூலம் அவருக்கே மனசாட்சி உறுத்துகிறது என்பது தெளிவாகிறது. ஜெயலலிதா போல் நாம் வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அறிந்துள்ளார். ஆனால் அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா பயணம் செய்யக்கூடாது என்று இதுவரை சட்டப்பூர்வமான தடை ஏதும் கிடையாது. வழக்கு முடியும்வரை கொடியை பயன்படுத்துவேன் என்றுதான் சசிகலா சொல்வார். அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது. தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறது அதிமுக” என்றார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ஆர்.மணி கூறுகையில், “அமைச்சர்கள் ஏன் டிஜிபி அலுவலகம் செல்ல வேண்டும். நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாமே. அதிமுக பயப்படுகிறது. இது ஒரு அரசியல் பிரச்னை. இதற்கு சட்டத்தீர்வு தேட முடியாது. ஒரு வாரத்திற்குள் பெரிய மாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

பத்திரிகையாளர் எஸ்.பி. லஷ்மணன் கூறுகையில், “பொதுக்குழுவுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழுவை ஏற்க முடியாது என்றுதான் சசிகலா நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது அடிப்படை முகாந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிமுகவின் வங்கி கணக்கு விவரங்களை சசிகலா பார்வையிடலாம் எனவும் அதிமுக ஆவணங்களை தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் திருத்தக்கூடாது எனவும் கூறியது. மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

image

இதனால் சட்டப்பூர்வமாக சசிகலாவிற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. ஒருவர் தண்டனை பெற்று சிறைக்கு சென்றால் தாமாகவே உறுப்பினர் பதவி பறிபோய்விடும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். எந்த விதி இப்படி சொல்கிறது. அப்படியென்றால் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைக்கு சென்றபோதே அவரின் அதிமுக உறுப்பினர் பதவியே பறிபோகிறது. அதன்பின்னர் அவரை ஏன் பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி எழுகிறது. ஜெயலலிதா காரில் இருந்து அதிமுக கொடியை கழற்றிய காவல்துறையும் அதை கையில் வைத்திருக்க கூடிய எடப்பாடி அரசும் வெட்கப்பட வேண்டும்” என்றார். பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஜெயக்குமார் சொல்வது கண்டிப்பாக அவரது விருப்பம்தான். சசிகலாவிற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. எந்த நீதிமன்றமும் சசிகலா பொதுச்செயலாளர் இல்லை என்று சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.