“இனி ஒரு வார்த்தை பேசினால் மரியாதை கெட்டுவிடும்” என்று அபி சொன்னவுடன் சும்மா இருப்பாரா, கெளசல்யா? பத்ரகாளியாகவே மாறிவிட்டார். “தப்பு செஞ்சதோட இல்லாம, குரலை உசத்தி வேற பேசுவீயா? கையை நீட்டிப் பேசினா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இப்படியெல்லாம் பேசற தகுதியை நீ எப்பவோ இழந்துட்டே. இனி நீ எப்படி வாழறேன்னு பார்க்கறேன்” என்கிறார்.

Vallamai Tharayo

`அபி சொல்வதை முழுவதுமாகக் கேட்ட பிறகு ஒரு முடிவுக்கு வரலாமே’ என்கிறார் கெளசல்யாவின் கணவர். “எவனோடவோ போய் தங்கிட்டு வந்தவளோட சேர்ந்து என் தம்பியை வாழச் சொல்றீங்களா? அவ்வளவு மானம் கெட்டவங்களாயிட்டோமா? ஊர்ல எல்லாரும்தான் வேலைக்குப் போறாங்க. இவள மாதிரியா நடந்துக்கறாங்க? சித்து, இனி இவ உனக்கு வேண்டாம்டா. டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிடுவோம்” என்று சித்தார்த்தை இழுத்துக்கொண்டு செல்கிறார் கெளசல்யா.

கொஞ்சம் கூட சொந்த புத்தி இல்லாதவனாக அக்கா பின்னால் செல்கிறான் சித்தார்த்.

அதைப் பார்த்து அபியின் அம்மாவும் அப்பாவும் பதறுகிறார்கள். மாப்பிள்ளை காலில் விழுந்து, மன்னிக்கும்படி கேட்கச் சொல்கிறார்கள்.

“என்னால முடியாதும்மா. நான் என்ன தப்பு செஞ்சேன், காலில் விழ? அவரும்தான் ஐடியில் வேலை செஞ்சார். எத்தனை நாள் லேட்டா வந்திருக்கார். நடுராத்திரியில் கூட எத்தனையோ பெண்கள்கிட்ட பேசியிருக்கார். ஒரு நாளாவது நான் அவரைச் சந்தேகப்பட்டிருப்பேனா? என்னை மட்டும் எப்படிச் சந்தேகப்படலாம்?”

Vallamai Tharayo

“நீ சொன்னதையே சொல்லிட்டு இருக்காம போடி. இந்த ஊர்ல நாங்க எப்படி தலைநிமிர்ந்து வாழ முடியும்? நாங்க சொல்றதைக் கேட்காதே… இந்த ஹர்ஷிதாவும் அனுவும் சொல்றதைக் கேட்டு, இன்னிக்கு எந்த நிலைக்கு வந்து நிக்கறேன்னு பாரு” என்று புலம்புகிறார் அபியின் அம்மா.

“சும்மா சும்மா என் ஃபிரெண்ட்ஸைக் குற்றம் சொல்லாதீங்க. எப்பவும் அவர் அக்கா சொல்றதைத்தான் கேட்கறார். நானும் நாலு வருஷம் அவங்க சொன்னதைக் கேட்டுட்டுதானே இருந்தேன். தனியா போன பிறகாவது எனக்குன்னு ஒரு கருத்து, சுதந்திரம் எல்லாம் கிடைக்கும்னு பார்த்தேன். கிடைக்கல. அபின்னு அவர் கூப்பிட்டாலே என்ன பிரச்னை இழுக்கப் போறார்னு பயந்துட்டுதான் இருப்பேன். வாயைத் திறக்கக் கூடாதுன்னு நீங்க வளர்த்திருக்கிறதால வந்த பிரச்னை. இனியும் அப்படி இருக்க முடியாது.”

வயதான காலத்தில் அபியையும் பேரக்குழந்தைகளையும் எப்படிக் கவனிப்பது என்கிற பெற்றோரின் பயமே, எவ்வளவு பிரச்னை இருந்தாலும் மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழ வலியுறுத்துகிறது.

“நான் ஒரு முடிவு எடுத்துட்டேன். நானும் படிச்சிருக்கேன். என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக்க என்னால முடியும். ஹர்ஷிதா, வாங்க கிளம்பலாம்” என்கிறாள் அபி.

`கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே’ என்கிறாள் ஹர்ஷிதா. `அபி நல்ல முடிவு எடுத்திருக்கா, அவளைத் தடுத்து, இந்த வீட்டில் முடக்கிட வேண்டாம்’ என்கிறார் சேதுராமன்.

Vallamai Tharayo

குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஹர்ஷிதாவுடன் அபி கிளம்பும்போது, அபியின் அம்மா மயங்கி விழுகிறார். அபி பதறி ஓடி வருகிறாள்.

“நீ இருந்தால் டிராமா இன்னும் அதிகமாகும். உன் பெரியப்பா, பெரியம்மா வந்துடுவாங்க. அப்புறம் உன்னால எதுவும் செய்ய முடியாது. கிளம்பு. நான் பார்த்துக்கறேன்” என்கிறார் சேதுராமன்.

அபி கிளம்புகிறாள்.

இனி என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

– எஸ்.சங்கீதா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.