முதல்வன் பட பாணியில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி, கடந்த 24 – ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த ஜெய்சுந்தர் என்ற இளைஞர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சமூகவலைதளங்கள் மூலம் டேக் செய்து, ‘ஒருநாள் முதல்வராக மக்கள் பணி செய்ய நான் தயார். தங்களின் சாதகமான பதிலுக்கு காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ஜெய்சுந்தரின் டிவிட்டர் பதிவு

Also Read: கரூர்: மண்பானைச் சமையல்… குழந்தைகளுடன் செல்ஃபி! – ராகுல் காந்தியின் ஒரு நாள் விசிட்

கரூர் திண்ணப்பா நகரைச் சேர்ந்தவர் ஜெய்சுந்தர். பொறியியல் பட்டதாரியான இவர், காந்திகிராமம் பகுதியில், ‘கரூவூர் கரம் ஸ்டால்’ என்ற பெயரில் நொறுக்குத்தீனி உணவகத்தை நடத்தி வருகிறார். அதோடு, சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தனது வீட்டு காம்பவுண்டு கேட்டில், ‘எனது ஓட்டு விற்பனைக்கல்ல’ என்று பெயிண்டால் எழுதி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில்தான், தமிழக முதல்வரை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் டேக் செய்து, ‘மானமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒருநாள் முதல்வராக மக்கள் பணி செய்ய நான் தயார். தங்களின் சாதகமான பதிலுக்கு காத்திருக்கிறேன்’ என்று சேலஞ்ச் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெய்சுந்தர்

இதுகுறித்து, ஜெய்சுந்தரிடம் பேசினோம்.

“பொறியியல் படிச்சுட்டு கொஞ்சகாலம் தனியார் கம்பெனிகளிலும், அரசு தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராகவும் வேலைப் பார்த்தேன். ஆனால், வேலை பளு காரணமாக அதை ரிசைன் செஞ்சுட்டு, காந்திகிராமம் பகுதியில் கரம் ஸ்டால் வச்சு நடத்திக்கிட்டு வர்றேன். இடையில், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் தலைமையிலான மக்கள் பாதை இயக்கத்திலும் நகர அமைப்பாளராக இருந்து, பல்வேறு சமூக விசயங்களை செஞ்சுக்கிட்டு வந்தேன்.

அதோடு, கடந்த இரண்டு தேர்தல்களின்போது, என் வீட்டு முன்னாடி உள்ள காம்பவுண்டு கேட்டில், ‘என் வாக்கு விற்பனைக்கல்ல’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்தேன். அதோடு, அதை மக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரமா செஞ்சேன். இந்த நிலையில் தான், வர்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள், இளைஞர்களிடம், ‘வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம்’ என்பதை வலியுறுத்தவும், கொரோனா நோய் தடுப்பு மருந்தை மக்கள் போட்டுக்கொள்ள தேவையான விழிப்புணர்வை செய்யவும் ஏதாவது ஒரு வகையில் செயல்படணும்னு நினைச்சேன். இந்த நிலையிதான், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, ஒருநாள் முதல்வரான செய்தி கிடைத்தது. இந்த ஐடியாவை முன்னாடியே நான் யோசிச்சிருந்தேன்.

ஜெய்சுந்தரின் தேர்தல் விழிப்புணர்வு

அதனால், தமிழக முதல்வர், துணை முதல்வர், உத்தரகண்ட் மாணவி என எல்லோரையும் டேக் செய்து, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் முதல்வரிடம், ‘ஒருநாள் முதல்வராக நான் பணியாற்ற விரும்புகிறேன்’ என்று அனுமதி கேட்டு பதிவு போட்டுள்ளேன். நேற்றுதான் அந்த பதிவை போட்டேன். அதோடு, ‘இளைஞர் சவால்’ என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கியிருந்தேன். அப்படி எனக்கு ஒருநாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் தேர்தல் குறித்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஆனால், இதுவரை அதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை. முதல்வர் பார்வைக்கு போனதா என்று தெரியவில்லை. அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என்றார் உற்சாகமாக!.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.