ஆடி அமாவாசையும், தைப்பூச நாளும் பொதுவாக சித்தர்களையும் மகான்களையும் வழிபட ஏற்ற நாள் என்கின்றன ஆன்மிக நூல்கள். ஞானத்தை அள்ளி வழங்கும் பூச நன்னாளில் சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதிகளை தரிசித்தால் ஞானமும் யோகமும் ஸித்திக்கும் என்பது ஐதிகம். அதிலும் குறிப்பாகத் தைப்பூச நாளோடு தொடர்பு கொண்ட இந்த ஜீவன் முக்தர்களை இந்நாளில் தரிசிப்பது எல்லாவிதமான யோகங்களையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய ஞானிகள் சிலரின் தரிசனம் குறித்து தியானிப்போம்.

கமல முனி

கமலமுனி

27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு சித்தர்கள் என நமது ஆன்மிகம் வகுத்து வைத்துள்ளது. அவ்வகையில் பூச நட்சத்திரத்துக்குரிய சித்த புருஷர் கமலமுனி. இவர் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். நான்முகனே கமலமுனியாக அவதரித்து ஞானக் கருத்துக்களைப் பாமரர்களுக்கும் போதித்தார் என்று சொல்வதுண்டு. திருமூலரின் பிரதான சீடரான இவர் கமலமுனி முந்நூறு, ரேகை சாஸ்திரம் போன்ற பல்வேறு நூல்களை இயற்றியவர். குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் போன்றோர் இவருடைய சீடர்கள். சுமார் 4,000 ஆண்டுகள் இவர் சூட்சும உடலோடு இவர் மண்ணில் அருள்வார் என்று கூறப்படுகிறது. சித்துக்களில் தன்னிகரற்றவர் என்று போற்றப்படும் இவரை வணங்கினால் யோகக் கலையில் தேர்ச்சி பெறலாம். தை மாத பூச நாள் தொடங்கி 12 பூச நாள்கள் இவரை வழிபட்டு ஆராதித்தால் எண்ணியவை ஈடேறும் என்பர். ராஜாக்களில் சிறந்தவரான தியாகராஜா ஆட்சி புரியும் திருவாரூரில்தான் கமலமுனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. திருவாரூர் அம்மன் சந்நிதி அருகே வலதுபுறமாக கமலமுனியின் ஜீவசமாதி உள்ளது. தைப்பூச நன்னாளில் இவரை வணங்கி அருள்பெறுவோம்.

திருவாரூர் குருதட்சிணா மூர்த்தி சுவாமிகள்

பூச நட்சத்திரத்துக்குரிய சித்த புருஷர்களில் திருவாரூர் குருதட்சிணா மூர்த்தி சுவாமிகளும் ஒருவர். திருவாரூர் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் 1835- ம் ஆண்டு ஜீவசமாதி ஆன இந்த மகான் தீராத நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர். திருச்சிக்கு அருகே பிறந்து திருவண்ணாமலையில் ஈசனின் அருளால் ஞானம் அடைந்து பல அற்புதங்கள் செய்த சித்தபுருஷர் இவர். இவரைத் தைப்பூச நாளில் தரிசித்து தியானம் செய்து வேண்டினால் ஞானம் ஸித்திக்கும். வியாழக்கிழமை இவருடைய ஜீவசமாதி ஆலயத்தில் விசேஷமானது.

சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள்

சூட்டுக்கோல் ராமலிங்கசாமி

சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் தைப்பூச நாளில் முக்தி அடைந்த பெரும் சித்தர். இவருடைய ஜீவசமாதி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது. சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடரே புகழ்பெற்ற சூட்டுக்கோல் மாயாண்டி சித்தராவார். சூட்டுக்கோல் ராமலிங்கசாமி அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு சூட்டுக்கோல் நன்மை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரும் கேடயமாகவும், தீமைகள் செய்யும் கொடியவர்களுக்கு தண்டனை தரும் ஆயுதமாகவும் இருந்தது என்பார்கள். இந்த சித்தரை தைப்பூச நன்னாளில் வணங்கி வேண்டினால் தகுந்த நியாயம் கிடைக்கும்; நீதி தவறி உங்களுக்கு எவரேனும் தீங்கு செய்திருந்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்கும். மேலும் நியாயம் உங்கள் பக்கம் இருந்தால் எந்த வழக்கிலும் வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வள்ளலார்

ராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இந்த மகான், பசிப்பிணி போக்க உதவிய வள்ளல் தன்மையால் வள்ளலார் என்று போற்றப்படுகிறார். இவர் வடலூரில் மேட்டுக்குப்பம் என்ற ஊரில் இப்போதைய ஸித்தி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் 1874-ம் ஆண்டு ஜனவரி 30 – ம் நாள் தைப்பூச நன்னாள் நள்ளிரவில் இறைவனோடு ஜோதி வடிவமாகிக் கலந்துவிட்டார். இன்றும் அவரது பக்தர்களுக்கு ஜோதி வடிவில் எப்போதும் தோன்றி அருள்பாலித்து வருகிறார். எவ்வுயிர்க்கும் கருணை காட்டிய அந்த ஞான வள்ளலை தைப்பூச நாளில் வடலூரில் தரிசனம் செய்தால் அமைதியும் ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை. தைப்பூசத் திருநாளில் வடலூர் வள்ளலார் திருக்கோயிலில் கறுப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு என்ற 7 வகை மாயத் திரைகளை விலக்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி என்ற இறைவனை தரிசிப்பது என்பது ஜீவன் முக்தியை அடைய உதவும் சிறந்த வழி என்று போற்றப்படுகின்றது.

அம்மணி அம்மாள்

பெண் சித்தர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் அம்மணி அம்மாள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பெட்டியான அந்த காலத்திலேயே காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்த மகா யோகினி இவர். இன்றும் இவர் திருவண்ணாமலை திருத்தலத்தில் ஈசான்ய லிங்கத்தின் எதிரே ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். தன்னை நாடி வந்து வணங்கும் எல்லோருக்கும் அருள் செய்யும் அம்மையாக விளங்கி வருகிறார். திருவண்ணாமலைக்கு அருகே சென்னசமுத்திரத்தில் ‘அருள்மொழி’ என்ற பெயரில் பெண்ணாக அவதரித்து சிவன் மீது அளவில்லாத அன்பு கொண்டு துறவறம் மேற்கொண்டவர். திருமணத்தின் மீது பற்றில்லாது குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இவர், இறந்துபோன மூன்றாம் நாள் மீண்டும் பெற்றார். அதிலிருந்து சொல்லொணாத அற்புதங்கள் பல புரிந்தவர். அதில் உச்சமாக விபூதியைக் கூலியாகக் கொடுத்து திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார். 171 அடிகள் உயரம் கொண்ட அந்த பிரமாண்ட கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்ற பெயரில் இன்றும் அவரை நினைவு கூர்ந்தபடியே உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் தான் வந்த வேலைகளை முடித்துக்கொண்ட இந்த சித்த பெண்மணி கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே தைப்பூச தினத்தன்று ஜீவன் முக்தி அடைந்தார். வரும் தைப்பூச நன்னாளில் இவரை வணங்கி வேண்டினால் மங்கல நிகழ்வுகள் யாவும் தடையின்றி நிறைவேறும் என்பர்.

Also Read: புண்ணியம் தரும் பூசம்… அறிந்துகொள்ள வேண்டிய தைப்பூசத் திருவிழாவின் மகத்துவங்கள்!

நவகோடி சித்தர்கள்

சித்தர்களின் நட்சத்திரம் என்று போற்றப்படும் போகரும் கோரக்கரும் ஒரு தைப்பூச நன்னாளில்தான் பழநியில் முருகப்பெருமானின் நவபாஷாண சிலையை நிறுவினார்கள் என்பர். அதன்பிறகு போகருடைய ஆசிரமத்தையும் முருகப்பெருமானின் கோயிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் வடக்குப்பொய்கை நல்லூர் சென்று ஜீவசமாதி அடைந்தார் கோரக்கர். பழநியம்பதியிலேயே யோக நிலையில் அமர்ந்தார் போகர். எனவே தைப்பூச நாளில் பழநிக்கு செல்பவர்கள் போகரையும் வடக்குப்பொய்கை நல்லூர் செல்பவர்கள் கோரக்கரையும் தரிசிப்பது ஞான, முக்தி நிலையை எட்டுவார்கள் என்பது நம்பிக்கை.

கோரக்கர்!

இவை மட்டுமின்றி தைப்பூச நாளில் ஸ்ரீரமண மகரிஷி, பாம்பன் சுவாமிகள், சக்கரை அம்மாள் போன்ற மகான்களையும் தரிசிப்பது நலம் பயக்கும். குறிப்பாக உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகான்களை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. வைகாசி மாத பூச நாளில் ஜீவன் முக்தி அடைந்த வல்லநாட்டு சுவாமிகளையும், ஆவணி மாத பூச நாளில் ஜீவன் முக்தி அடைந்த யூகிமுனிகளையும் வணங்கலாம். 63 நாயன்மார்களில் நமிநந்தியடிகள் (வைகாசி பூசம்), முனையடுவார் நாயனார் (பங்குனி பூசம்), செருத்துணை நாயனார் (ஆவணி பூசம்) ஆகிய மூவரையும் வழிபடுவதும் நலமே அளிக்கும் எனலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.