போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஈழத்தமிழர்களின் கண்ணியத்தை நிலைநாட்டிடும் வகையிலான நிர்வாக மற்றும் அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈழத்தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திற்கு எதிராக இலங்கை அரசுகள் நடந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றங்கள் குறித்து சுதந்தரமான விசாரணை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்க, பிரதமர் உறுதி செய்திடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், இலங்கையில் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தவும் பிரதமர் மற்றும் தூதரக அளவில் தக்க நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM