‘சர்கார்’ படத்தில் விஜய்க்கும் அவரது கார் டிரைவருக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடலில், “இப்போதெல்லாம் ஒரு பிரச்னைக்கு தீர்வு தேவை இல்லை, இன்னொரு பிரச்னைதான் வேண்டும்” என்பார். அதுபோல இப்போது பிரச்னைகள் வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேடிங் சமாச்சாரமாகிவிட்டது. எந்த ஒரு விஷயமும் முதலில் பூதாகாரமாக வெளிப்பட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறது. போராட்டத்தை ஆரம்பிக்கும் போராளிகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் மறைந்து போகிறார்கள். எந்த ஒரு புரட்சிக்கும் ஒரு காலக்கெடு உண்டு. அந்த டைம்லைன் முடியும்போது அதுவும் காலாவதியாகி பரணில் தூக்கிப் போடப்பட்டு விடுகிறது. சூழலியல் பிரச்னைகள், அதுதொடர்பான போராட்டங்கள், போராளிகளுக்கும் இதுதான் நிலை.

கிரெட்டா தன்பெர்க்

டெக்னாலஜி என்றால் என்னவென்றே தெரியாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு புரட்சி, அமெரிக்க கிளர்ச்சி எனப்பல போராட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. காரணம் அன்று மக்கள் ஒன்றாக இணைந்தார்கள். ஒரு முடிவு கிடைக்கும் வரை போராடினார்கள். ஆனால் இன்று இது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதனாலேயே புரட்சிக்களுக்கான ஆயுளும் மிகவும் குறுகிவிட்டது. அப்படி ஒன்று நடந்தது என்பதே மறந்து எல்லோரும் அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுகிறோம். அப்படிப்பட்ட புரட்சியாக, போராட்டமாக கிரெட்டா தன்பெர்க்கின் போராட்டமும் வீணாகிவிட்டதோ என்கிற கவலை இப்போது சூழலியல் ஆர்வலர்களைச் சூழ்ந்திருக்கிறது.

School Strike for Climate என்ற பெயரில் 2018-ல் சூழலியலில் ஒரு பெரும் புரட்சி ஒன்றை தொடங்கிய 15 வயது பெண் கிரெட்டா அதன் பின் என்ன ஆனார், தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அவர் முன்னெடுத்த போராட்டம் இப்போது எந்த அளவில் உள்ளது?

ஜனவரி 3, 2003-ல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பிறந்த கிரெட்டாவின் தாயார் மலேனா எர்ன்மேன், ஒரு ஓபரா பாடகி. அவரது தந்தை ஸ்வாண்டே தன்பெர்க், ஒரு நடிகர். கிரீன்ஹவுஸ் விளைவின் மாதிரியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஸ்வாண்டே அர்ஹீனியஸின் பரம்பரையில் வந்தவர் கிரெட்டா.

மே 2018-ல், 15 வயதான கிரெட்டா ஒரு உள்ளூர் செய்தித்தாளில் காலநிலை மாற்றம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை முதல் பரிசை வென்றது. இங்கிருந்துதான் கிரெட்டாவின் சூழலியல் பயணம் தொடங்கியது. 2015-ம் ஆண்டில் பாரிஸில் உலகத் தலைவர்கள் ஒப்புக் கொண்ட கார்பன் உமிழ்வு இலக்கை ஸ்வீடிஷ் அரசாங்கம் பூர்த்தி செய்யும் வரையான ஓர் ஆர்ப்பாட்டத்தை ஸ்வீடிஷ் நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் ஆரம்பித்தார் கிரெட்டா.

கிரெட்டா தன்பெர்க்

தனது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்ற கிரெட்டா காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஏற்ற சட்டங்களை இயற்ற ஸ்வீடிஷ் அரசைத் தூண்டினார். செப்டம்பர் 2018-ல் நடந்த ஸ்வீடிஷ் தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்பு, நாட்டின் பாராளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டம் மேற்கொள்ளும் பொருட்டு தன் பாடசாலை கல்வியைத் துறந்தார். அதை “ஸ்கோல்ஸ்ட்ரெஜ் ஃபார் கிளிமடெட்” (காலநிலைக்கான பள்ளி வேலைநிறுத்தம்) என்று அடையாளப்படுத்தினார்.

ஆர்பாட்டத்தின் முதல் நாள் அவர் தனியாக இருந்தபோதிலும், அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவரோடு பலர் கை கோக்கத் தொடங்கினார். ஒன்று பத்தாக்கி, பத்து நூறாகி, நூறு லட்சங்களாகி சர்வதேசத்தின் கவனம் மெல்ல மெல்ல இவர் மேல் குவியத் தொடங்கியது. கிரெட்டா பேசுபொருளானார்!

அதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் World Economic Forum, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்தின் நடளுமன்றங்களுக்கு முன்பாகவும் உரை நிகழ்த்தினார். வளி மாசு ஏற்படாத ஒரு பந்தயப்படகில் இரண்டு வாரப்பயணமாக 2019 செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகளின் சூழலியல் மாநாட்டுக்கு கலந்துகொள்ள சென்றபோது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். மில்லியன் கணக்கான மாணவர்கள் உலகெங்கிலும் இருந்து இவருக்கு ஆதரவாகத் திரண்டபோது சர்வதேசமுமே கிரெட்டாவை திரும்பிப் பார்த்தது.

சூழலியல் மாற்றம் தொடர்பான பிரசாரத்தைத் தொடரவும், முக்கிய சூழலியல் மாநாடுகளில் கலந்துகொள்ளவும், உலகெங்கிலும் உள்ள மாணவர் போராட்டங்களில் பங்குகொள்ளவும், இவர் 2019-ம் வருடம் முழுதுமே பள்ளிக்குச் செல்லவில்லை.

கிரேட்டா தன்பெர்க்

ஸ்வீடிஷ் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கிரெட்டா மீண்டும் பள்ளிக்குத் திரும்பினார். ஆனாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டத்தைத் தொடர்ந்தார். இந்த நாட்கள் Friday for Future என அழைக்கப்பட்டன. அதை தொடர்ந்து யுகே, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பின்லாந்து, மற்றும் நெதர்லாந்து போன்ற உலகின் பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் தத்தம் நாடுகளில் இருந்தவாரே இந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை மேற்கொண்டனர்.

டைம்ஸ் பத்திரிகையின் ‘Person of the year’ விருது உட்பட பல விருதுகளையும், பல கோடி ஆதரவாளர்களையும் சம்பாதித்த கிரெட்டாவின் போராட்டம் இறுதி வெற்றியை கண்டதா என்றால் இல்லை என்பதைத்தான் பதிலாகச் சொல்லமுடியும்.

எப்போதுமே ஆதரவாளர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும்போது அதற்கு எதிர்ப்பாளர்களும் இருப்பதுதானே உலக மரபு. அதன் படி கிரெட்டாவின் செயல் பலரின் கண்டனங்களுக்கும், ஏளனங்களுக்கும் உள்ளானது. அதில் முக்கியமாக அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைப் பற்றி, “அவரது கோபத்தை முதலில் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற கேலியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ”இவர் கருணை உள்ளம் கொண்ட ஒரு மோசமான டீனேஜர்” என்ற கிண்டலும், அமெரிக்க ட்ரஷரி செயலாளர் Steven Mnuchin-ன், “முதலீட்டாளர்களுக்குச் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு இவரை பொருளாதாரம் படிக்கச் சொல்லுங்கள்” போன்ற நையாண்டிகளும் அவரது போராட்டங்களில் பிரச்னையை உண்டு பண்ணின.

கிரெட்டா தன்பெர்க் தபால்தலை!

சரி, போராட்டத்தின் ஊடாக கிரெட்டா என்ன சாதித்தார்?

161 நாடுகளில் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் எனக்கோரி, வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய காலநிலை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் என்ற பெருமையை பெற்றார். உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் இவரின் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து பூமியைக் காப்பாற்ற தேவையான அவசர மாற்றத்தை அரசிடம் இவர்கள் தொடர்ந்து கோரிக்கொண்டே உள்ளனர்.

2019-2020ல் பரவிய கொரோனா நோய்த் தொற்றால் கிரெட்டாவின் இயக்கங்களும் ஸ்தம்பித்து போனது. ட்ரான்ஸ்-சைபீரிய ரயில்வே வழியாக ஆசியாவிற்கு பயணிக்க இருந்த அவரது திட்டம் தடைப்பட்டது. எனினும் டிஜிட்டல் செயல்பாட்டின் மூலம் அவர்களது முயற்சிகளை மையப்படுத்தியிருக்கிறார் கிரெட்டா. சமீபத்தில் கிரெட்டாவைப் பெருமைப்படுத்தும் விதமாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது ஸ்வீடிஷ் அரசு.

ஆனாலும், காலநிலை மாற்றம் தொடர்பான எந்தவொரு அரசாங்கத்தின் கொள்கைகளிலும், எவ்வித மாற்றங்களும் கிரெட்டாவின் போராட்ட செயற்பட்டால் இதுவரை நிகழவில்லை.

கிரெட்டாவின் முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாததற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?

கிரெட்டாவின் முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு “How dare you!” என ஆரம்பித்து, “இது எனக்கு தெரியாது, நான் ஒன்றும் சயின்டிஸ் அல்ல” போன்ற பதில்களே பெரும்பாலும் கொடுத்திருப்பார். அதனாலேயே அவரது கோபமும் வார்த்தைகளும் கேலிக்கு உள்ளாயின.

இரண்டாவது, எந்தவொரு மாணவ புரட்சியும், முக்கிய தலைவர்களின் ஆதரவும், பக்கபலமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியாது. ஏனெனில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தாலும், அவர்களுக்கு மேலே உள்ள அரசு அது சார்ந்த தீர்மானங்கள் எடுக்க தவறும் பட்சத்தில் அந்த முறையீடு அடுத்த கட்டத்திற்கு நகராது முடக்கப்படும்.

Greta Thunberg

இறுதியாக, டெக்னாலஜி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த யுகத்தில் மக்கள் யாரும் ஒன்று பட தயாராக இல்லை. அதேபோல மக்களுக்குப் புதுப்புது பிரச்னைகள் தேவைப்படுகின்றன. போராட்டங்களைப் பணமாக்கப் பார்க்கும் அரசியலும், செய்திகளை whatsapp Forwardடுகளாக மட்டுமே பார்க்கும் மக்களும் இருக்கும் சூழலில் இவ்வாறாரான ஒரு புரட்சி உடனடியாக வெற்றி ஈட்டுமா என்றால் வாய்ப்பில்லை ராஜாதான்!

ஆனால், கிரெட்டாவின் குரல் யாருக்குக் கேட்டதோ இல்லையோ, கொரோனா வைரஸின் காதில் தெளிவாகக் கேட்டுள்ளது. ஓட்டு மொத்தமாக உலகத்தையே வீட்டுக்குள் சிறைப்படுத்தி வைத்து விட்டு சூழலியலைச் சிறிதளவேனும் சுத்தப்படுத்தி விட்டது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.