“எல்லாருக்கும் தை 1-ம் தேதிதான் பொங்கல் திருவிழா. எங்களுக்கு மட்டும் தை 2-ம் தேதிதான் பொங்கல் திருவிழா. ஊரே கூடி, மந்தையில பொங்கல் வச்சு, எங்க பென்னிகுவிக் சாமிக்கு படைச்சி கொண்டாடுவோம்.” என்கின்றனர் தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு போக நெல் சாகுபடிக்கு மிக முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.

பொங்கல் வைக்கும் பாலார்பட்டி மக்கள்

இன்னும் இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முல்லைப்பெரியாறு அணை, கடந்த 1895-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அணையினை கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டினார். கட்டுமானப்பணியின் போது, காட்டாற்று வெள்ளத்தால் அணை உடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனது சொந்தப் பணத்தில் அணையினைக் கட்டி முடித்ததாகவும் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட வறட்சியினால், பல லட்சம் மக்கள் மாண்டு போயினர். அச்சூழலில், பென்னிகுவிக் தன்னுடைய முயற்சியால் முல்லைப்பெரியாறு அணை கட்டியது தென் மாவட்ட மக்களை நிம்மதியடையச் செய்தது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி வளமானது. இதனை மறக்காத கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள், பென்னிகுவிக்கின் பிறந்தநாளான ஜனவரி 15-ம் தேதி, அவரை மனதில் நினைத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த வழக்கமானது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சுருளிப்பட்டி மற்றும் பாலார்பட்டி கிராம மக்கள் `பென்னிகுவிக்’ பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

ஓ.பி.எஸ்

தேனி மாவட்ட கிராம மக்கள், பென்னி, பென்னிகுவிக், ஜான் பென்னி போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவதையும், வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் பென்னிகுவிக் படத்தினை இடம் பெறச் செய்வதுமாக உள்ளனர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்பது தேனி மக்களின் நீண்ட கால கோரிக்கை. அதை ஏற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2006-ம் ஆண்டு, லோயர்கேம்பில் பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்து, அவரே நேரடியாக வந்து மணிமண்டபத்தை திறந்துவைத்தார். இந்நிலையில், பென்னிகுவிக்கின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என 2018-ம் ஆண்டு அறிவித்தது தமிழக அரசு. கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் முதன் முறையாக, பென்னிகுவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நேற்று, பென்னிகுவிக்கின் 180-வது பிறந்தநாளை, உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக, துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., பாலார்பட்டிக்கு வந்து, மாட்டு வண்டியில் ஏறி, விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை கிராம மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து, பொங்கல் பானையில் அரிசியை இட்டு, நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தார் ஓ.பி.எஸ்.

மாட்டுவண்டியில் வந்த ஓ.பி.எஸ்

பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜிதா நம்மிடையே பேசும் போது, “வருசா வருசம் நாங்க பென்னிகுவிக்கை நினைச்சு பொங்க வைப்போம். எங்க பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுறது எங்களுக்கு சந்தோசம். அதுவும், இந்த வருசம் எங்க ஊர்ல கொண்டாடுறது ரொம்ப சந்தோசம். இத நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

ஹேப்பி பென்னிகுவிக் பொங்கல்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.