2020 -ம் ஆண்டு முழுவதையும் கொரோனா வைரஸ் எடுத்துகொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரம் 2021-ம் ஆண்டில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் தயார் நிலையில் இருக்கிறது. நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், ‘ஆஸ்ட்ராஜெனகா’ நிறுவனம் இணைந்து, ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் புனேயை சேர்ந்த, ‘சீரம்’ இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ‘கோவாக்சின்’ எனப்படும் தடுப்பூசியை, உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது.

உலகின் மிகப் பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு, இந்த தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக போடுகிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது போன்ற வழிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மோடி

முதல் நாளில், 2,934 மையங்களில், மூன்று லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், “தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது இப்போது கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், ஒன்று அல்ல, இரண்டு ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் தயாராக உள்ளன. இதற்கிடையில், பிற தடுப்பூசிகளின் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன” என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி, “கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் மிகவும் முக்கியமானது என்பதை நாட்டின் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டு டோஸ்களுக்கு இடையில் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதல் டோஸ் போட்டபிறகு, மாஸ்க் இல்லாமலோ சமூக இடைவெளியை பின்பற்றாமலோ இருந்துவிட வேண்டாம். ஏனெனில் இரண்டாவது டோஸுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

இவ்வளவு பெரிய அளவில் ஒரு தடுப்பூசி திட்டம் வரலாற்றில் ஒருபோதும் நடத்தப்படவில்லை. 3 கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 100 -க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. முதல் கட்டத்திலேயே 3 கோடி மக்களுக்கு இந்தியா தடுப்பூசி போடுகிறது. இரண்டாம் கட்டத்தில், இந்த எண்ணிக்கையை 30 கோடியாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், `இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு எந்த விதத்திலும் தரத்தில் இவை குறைந்தது அல்ல. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் இந்திய கால சூழலுக்கு ஏற்றது. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை என்பது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை” என்றார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.